திரைப்பட இயக்குநராக வேண்டும் என்கிற வெறியுடன் திரியும் ஓர் உதவி இயக்குநர்,ஒரு நேர்மையற்ற காவல்துறை அதிகாரி மற்றும் பொறுப்பான பள்ளி ஆசிரியர் ஆகிய மூன்று கதாபாத்திரங்களை முதன்மையாக வைத்துக் கொண்டு ஒரு காதல் இணையரை துணைக்கு வைத்துக் கொண்டு விறுவிறுப்பான படத்தைக் கொடுக்க முன்வந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.
உதவி இயக்குநர் அதர்வா,காவல்துறை அதிகாரி சரத்குமார், பள்ளி ஆசிரியர் ரகுமான் ஆகியோர் வாழ்வில் தனித்தனியாக நடக்க்கும் நிகழ்வுகள் ஒரு புள்ளியில் இணைவதுதான் நிறங்கள் மூன்று படத்தின் திரைக்கதை.
உதவி இயக்குநர் வேடத்துக்குக் கன கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அதர்வா.வாய்ப்புக் கிடைக்காமல் தவிப்பது ஒரு சிக்கல் வந்ததும் துடிப்பது ஆகியன உட்பட எல்லா இடங்களிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.அவர் எந்நேரமும் போதையிலும் புகையிலும் இருப்பதுபோல் காட்டியிருப்பது நெருடல் என்றாலும் அதிலும் பொருத்தமாக நடித்திருப்பது அதர்வாவின் நடிப்புக்கு நற்சான்று.
காவல்துறை அதிகாரி வேடத்தில் சரத்குமார் எனும்போதே தோற்றப் பொலிவு குறித்துச் சொல்லவேண்டியதில்லை.மிடுக்காக இருக்கிறார்.ஆனால் அவருடைய பாத்திரப்படைப்பு அதற்கு எதிர்மாறானது.அதிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.
பள்ளி ஆசிரியர் வேடத்தில் ரகுமான் ஆச்சரியப்படுத்துகிறார்.அமைதியும் அன்பும் சிக்கலை நிதானமாகக் கையாளும் திறனும் அவர் நடிப்பினால் மேலும் பலம் பெறுகிறது.
துஷ்யந்த் அம்மு அபிராமி இணையர் திரைக்கதையின் முக்கியப்புள்ளிகள் நாம்தான் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.அம்மு அபிராமி கொஞ்சம் முந்தியே நிற்கிறார்.
ஜான்விஜய்,சின்னி ஜெயந்த்,ஜேம்ஸ் உள்ளிட்டோர் நடிப்பும் நன்று.
கார்த்திக்நரேன் இயக்கும் படங்களில் ஒளிப்பதிவாளருக்குக் கூடுதல் வேலை இருக்கும்.இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமியும் அதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.அதனால் நல்ல காட்சியனுபவம் கிடைக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் இசை காட்சிகளின் தன்மையை உணர்ந்து உள்வாங்கும்பாடி அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் பணியால் வேகமும் விறுவிறுப்பும் கூடியிருக்கிறது.சில காட்சிகளில் அவருடைய புத்திசாலித்தனம் வெளிப்பட்டு வியக்க வைக்கிறது.
இயக்குநர் கார்த்திக்நரேன்,பெற்றோர் சண்டை பிள்ளைகளை எவ்வளவு பாதிக்கிறது என்பது உட்பட சமுதாயத்துக்குத் தேவையான சில செய்திகளை உறுத்தாமல் உணர்த்தியிருக்கிறார்.நினைத்தது நினைத்தபடி இல்லாமல் வேறு மாதிரி நிகழ்த்துவது என்கிற திரைக்கதை உத்தி படத்துக்குப் பெரிதும் பலனளித்திருக்கிறது.
– ஈசன்