ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம்.
முதன்மை நாய்கனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இயக்கியிருக்கிறார்.அவரது பாத்திரப்படைப்பும் அதில் அவருடைய நடிப்பும் முன்ன்ணி நடிகர்களையும் முந்தி நிற்கிறது.அவருடைய நடையும் நடவடிக்கைகளும் வெகுமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
நண்பர்களாக நடித்திருக்கும் பாபி குரியன்,பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகியோரும் ஜோஜு ஜார்ஜுக்கு ஈடுகொடுத்து நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நாயகி அபிநயாவுக்கு முக்கியமான கதாபாத்திரம்.நன்றாக நடித்திருக்கிறார்.கணவருடனான காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நளின உணர்வுகள் இரசிக்க வைக்கின்றன.
பாபிகுரியன் மனைவியாக வரும் அபயா கிரன்மயி,ஜோஜு ஜார்ஜின் தாயாக வரும் சீமா, காவல்துறை அதிகாரியாக வரும் சாந்தினி ஸ்ரீதரன் ஆகியோரும் இயல்பாகவும் பொருத்தமாகவும் நடித்திருக்கிறார்கள்.
விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள், வேணு, ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.மனு ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். இவர்கள் அனைவருமே இயக்குநர் ஜோஜு ஜார்ஜின் சிந்தனையை தத்தம் ஊடகத்தில் மெருகேற்றியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கும் ஜோஜுஜார்ஜ், கதையும் காட்சிகளும் ஏற்கெனவே பார்த்தவை என்கிற உணர்வை ஏற்படுத்தக் கூடிய ஆபத்து இருந்தும் அவற்றைத் தாண்டி திரைக்கதையாலும் புதிய வகைக் காட்சிகளாலும் படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார்.
அவரே இயக்குநர் அவரே நாயகன் என்பதால் தன் நடிப்புத் திறனை தங்கு தடையின்றி வெளிப்படுத்தும் வசதி அவருக்குக் கிடைத்திருக்கிறது.பல நேரங்களில் இம்மாதிரி நடந்தால் அது பார்வையாளர்களுக்கான சோதனையாக மாறிவிடும். ஆனால் இந்தப்படத்தில் ஜோஜுஜார்ஜின் தேர்ந்த நடிப்பு திரைக்கதையில் உள்ள சிற்சில குறைகளைத் தாண்டி படத்தை இரசிக்க வைத்திருக்கிறது.
– பிரியன்