சொந்த ஊரில் சாதி ரீதியான ஒடுக்குமுறை வெளிமாநிலத்தில் மொழி ரீதியான ஒடுக்குமுறை ஆகியனவற்றைச் சந்திக்கும் எளிய மனிதர்களைப் பற்றிப் பேசியிருக்கும் படம் பராரி.
திருவண்ணாமலை மாவட்டம் இராசபாளையத்தில் வசிக்கும் நாயகன் ஹரிசங்கருக்கும் அவ்வூரைச் சேர்ந்த நாயகி சங்கீதா கல்யாணுக்கும் காதல்.இந்தக்காதலுக்கு சாதி தடையாகிறது.இதனால் கர்நாடகா செல்கிறார்கள்.அங்கு காவிரி நீர்ச் சிக்கல் காரணமாக தமிழர்களைக் குறி வைத்து அடிக்கிறார்கள்.அதில் நாயகன் நாயகி உள்ளிட்டோரும் சிக்கிக் கொள்கிறார்கள்.அதன்பின் என்ன நடந்தது? என்பதைச் சொல்வதுதான் படம்.
நாயகன் ஹரிசங்கர், சாதி ரீதியாக ஒடுக்கப்படும்போது குமுறுவதும் மொழி ரீதியாக ஒடுக்கப்படும் நேரத்தில் சீறுவதும் காதலியிடம் இணங்குவதும் என எல்லா நேரங்களிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி சங்கீதா கல்யாண் எளிமையான அழகும் இயல்பான நடிப்புமாக வலம் வருகிறார்.அவருடைய பாத்திரப்படைப்புக்கேற்ற செயல்பாடுகளைச் செய்திருப்பது நன்று.
எதிர்மறை நாயகனாக நடித்திருக்கும் புகழ் மற்றும் குரு ராஜேந்திரன், பிரேம்நாத் ஆகியோரும் கவனிக்கத்தக்க நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கனி ஆகியோரது உழைப்பில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி கதைக்களத்துக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் கதையின் தன்மையைக் கூடுதலாக உணர வைத்திருக்கிறது.
ஆர்டிஎக்ஸ் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருந்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் எழில் பெரியவேடி.
தமிழ்நாட்டுக்குள் இருக்கும் சாதிப் பிரிவினைகள் அதிலும் ஆதிக்கச் சாதி என்றாலே அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தை மாற்றியிருக்கிறார். கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் போன்றோரை அம்பலப்படுத்தும் விதமாகக் காட்சிகள் வைத்திருக்கிறார்.அவருடைய தோற்றம் பிரதமர் போல் இருப்பது கூடுதல் குறியீடு.
கன்னட வெறியனை கதாநாயகியை விட்டு அறைய விட்டது,வர்க்கம் ஒன்றாக இருக்கும்போது சாதிப்பெருமை சிறுமைகள் எதற்கு? என்கிற கேள்வியைக் கேட்டிருப்பது உழைக்கும் வர்க்கம்தான் மனிதம் போற்றுகிறது அவர்களுக்குள் எவ்விதப் பிரிவினையும் தேவையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பது ஆகியனவற்றால் தன் தனித்தன்மையை நிறுவியிருக்கிறார்.
– ஈசன்