ஒரு போலி பிச்சைக்காரர் தன் பேராசையால் ஒரு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அதிலிருந்து அவர் மீண்டாரா? அங்கு என்னவெல்லாம் நடந்தன? என்பனவற்றைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல முயன்றிருக்கும் படம் ப்ளடி பெக்கர்.
ஓர் ஆடம்பர மாளிகையில் நடைபெறும் அன்னதானத்துக்காக ஆதரவற்றோர் சிலர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.அவர்களில் ஒருவராகச் செல்லும் பிச்சைக்காரர்,அங்கேயே தங்கி விடுகிறார்.அங்கு ஒரு நிஜப்பேயும் நிறைய பணப்பேய்களும் இருக்கின்றன.அவற்றால் அவருடைய உயிருக்கே ஆபத்து எனும் நிலையில் நகர்கிறது படம்.
பிச்சைக்காரர் வேடத்தில் கவினா? என்று ஆச்சரியமாக இருக்கும்.அந்த வேடத்திலும் பொருத்தமாக நடித்து மேலும் ஆச்சரியம் கூட்டியிருக்கிறார் கவின்.வேறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்கிற அவருடைய ஆவல் தெரிகிறது.இதிலும் வெவ்வேறு தோற்றங்கள் அதற்கேற்ற நடிப்பு என தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.
அக்சயா ஹரிஹரன் நாயகி போல் இருக்கிறார்.தனித்த வில்லனாகத் தெரிகிறார் சுனில் சுகதா,இவர்களோடு, மாருதி பிரகாஷ்ராஜ், டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் எனப் பலர் நடித்திருக்கின்றனர்.
பேயாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கு சிரிக்க வைக்கும் பொறுப்பு.அங்கங்கே பொறுப்பாக அதைச் செய்திருக்கிறார்.
ஒரே மாளிகைக்குள் பெரும்பகுதிப் படப்பிடிப்பு என்பதால் கலை இயக்குநர் மணிமொழியன் இராமதுரைக்கு அதிக வேலை.அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
அதிக வாய்ப்பில்லாத போதும் கிடைத்த வாய்ப்பில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சரங்.
படத்தொகுப்பாளர் நிர்மல் இன்னும் ஈடுபாடு காட்டியிருக்க வேண்டும்.
ஜென் மார்ட்டினின் பின்னணி இசை சில இடங்களில் வேறு படங்களை நினைவுபடுத்தினாலும் இப்படத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது.
ஊரை ஏமாற்றிப் பிச்சையெடுக்கும் ஒருவருடனேயே உழைத்துத்தான் வாழ்வேன் என்றிருக்கும் ஒரு சிறுவனைச் சேர்த்ததில் தொடங்கி நடைபாதை வாசிகள் பற்றிய கவனத்தை ஈர்ப்பதில் தொடர்ந்து ஆடம்பரமாளிகையின் சொத்துச்சிக்கலை முதன்மைப்படுத்தி இந்தச் சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்.
அவர் நினைத்தது, நினைத்தது போல வந்துசேரவில்லை என்பதுதான் சோகம்.
– வெற்றி