நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஆஹா இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது இந்த லைன்மேன் திரைப்படம். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட தரமான படங்களில் ஒன்று எனலாம்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள உப்பளத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனிதம் பேசி வெளியாகியிருக்கும் படம் லைன்மேன்.
மின்சாரவாரிய தொழிலாளரைக் குறிக்கும் சொல்லை இப்படத்தின் பெயராக லைன்மேன் பெயரை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பெயருக்குரியவராக சார்லி நடித்திருக்கிறார்.அவர் மின்வாரிய ஊழியராக இருக்கிறார்.மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நினைக்கும் அவருடைய மகன் மின்பொறியியல் படித்து ஒரு கருவியைக் கண்டுபிடிக்கிறார்.அக்கருவிக்கு அங்கீகாரம் பெற அவர் படும்பாடுகள் அதன் விளைவுகள் ஆகியனவற்றைச் சொல்கிறது படம்.
சார்லி ஒரு வேடத்தை ஏற்றுக்கொண்டால் அதற்கு நூறு விழுக்காடு சரியாக இருக்கவேண்டுமென உழைப்பார்.இந்தப்படத்திலும் நிஜ மின் ஊழியர் போலவே இருக்கிறார்,நடக்கிறார்,பேசுகிறார்.உணர்ச்சிப் போராட்டத்திலும் நிறைந்திருக்கிறார்.
சார்லியின் மகனாக நடித்திருக்கும் ஜெகன்பாலாஜி புதுமுகம் என்றாலும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.ஒரு புதியதைக் கண்டுபிடித்த பெருமிதம் அதற்கான அங்கீகாரத்துக்காகப் போராடும் நிலையெண்ணி வருந்திக் கலங்குவது ஆகிய எல்லா இடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன் நன்று.உப்பளத் தொழிலாளி வேடத்துக்கேற்ற உடல்மொழி நடிப்பு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் அதிதிபாலன் கவனம் ஈர்க்கிறார்.
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவு தூத்துக்குடி உப்பளங்களையும் அங்கு வசிக்கும் மக்கள் வாழ்க்கையையும் உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் காட்சிகள் அமைத்திருக்கிறார்.
தீபக் நந்தகுமார் இசை, திரைக்கதை மற்றும் கதைகளத்துக்கு இசைவாக அமைந்திருக்கிறது.
ஆண்டனியின் படத்தொகுப்பும் படம் இயல்பாக நகர உதவி செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் உதயகுமார், ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.இதன்மூலம் தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்கள் வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தியதோடு எளிய மனிதர்கள் அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
– இளையவன்