கோலமாவு கோகிலா,டாக்டர்,ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரித்த முதல்படம் ப்ளடி பெக்கர்.
இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கிய முதல் படம்.
இப்படத்தில் கவின் நாயகனாக நடித்திருந்தார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜென் மார்டின் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றிருந்தார்.
இப்படம் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் வெளியீட்டுக்கு முன்பிருந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப படம் வரவேற்பு பெறவில்லை.வசூலிலும் அது எதிரொலித்தது.
இதனால் சுமார் பனிரெண்டு கோடி இப்படத்தின் உரிமையப் பெற்ற ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு நட்டம் ஏற்பட்டது.
எம் ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை வாங்கியிருந்ததால் நட்டத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
விநியோகஸ்தரின் இந்நிலையை அறிந்த தயாரிப்பாளர் நெல்சன், அவராகவே விநியோகஸ்தரை அழைத்துப் பேசியிருக்கிறார்.
இந்தப்படம் எவ்வளவு வசூல் செய்தது? என்று ஒரு வார்த்தை கூடக் கேட்காமல்,உங்களுக்கு நான் எவ்வளவு தரட்டும்? என்று கேட்டிருக்கிறார்.அவர்கள் என்ன கேட்பது? எனச் சொல்லாமல் தயங்கி நின்றார்களாம்.
அதன்பின், சட்டப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் தார்மீக அடிப்படையில் உங்கள் நட்டத்துக்குப் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லியதோடு நில்லாமல் ஒரு பெரும் தொகையைத் திருப்பிக் கொடுக்கவும் ஒப்புக்கொண்டாராம்.
அந்தத் தொகை சுமார் ஐந்து கோடி என்று சொல்லப்படுகிறது.இதைக் கொடுப்பதாகச் சொன்னதைவிட அத்தொகையை உடனடியாகத் தந்து விடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் இதுவரை இல்லாத நடைமுறையாய் இது அமைந்து விநியோகஸ்தர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியையும் மற்றோருக்குப் பெரும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
இது பேரதிசயம் மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களே அவர்கள் படத்தால் முற்றாகச் சிலர் அழிந்தபோதும் அதைப் பற்றி அறியாத மாதிரியே அசைந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டோர் இருக்கும் இதே திரையுலகில் நெல்சனும் இருக்கிறார் என்பது நல்லோருக்குக் கிடைத்திருக்கும் நன்னம்பிக்கை ஆகும்.
இந்தச் செய்தியறிந்த மூத்தோர் சிலர், நான்றிந்த வகையில் நாற்பது வருடங்களில் இதுபோன்றதொரு நிகழ்வை கேள்விப்பட்டது கூட இல்லை. இப்போது நிஜத்திலேயே நடந்துவிட்டது.இதைச்செய்த இயக்குநர் நெல்சனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று சொல்லி மகிழ்கிறார்கள்.