மனிதர்களுக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குமான உறவு காலங்காலமாகத் தொடர்வது.அதில் தமிழ்ச் சமூகம் மற்ற எல்லோருக்கும் முன்னோடி என்றே சொல்லலாம்.அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் அலங்கு.அலங்கு என்பது ஒருவகை நாய் இனத்தின் பெயர்.
படத்தின் நாயகன் குணாநிதி,ஒரு அடிபட்ட நாயைக் குணப்படுத்தி வளர்க்கிறார்.வேலை செய்யப் போன இடத்தில் அந்த நாயின் உயிருக்கு ஆபத்து.அதனால் தன் வாழ்நிலையையும் மறந்து வெகுண்டெழுகிறார்.அதனால் பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் பின் நடப்பது என்ன? என்பனதாம் திரைக்கதை.
நாயகன் குணாநிதியின் கதாபாத்திரம்,உயிர்களிடத்தில் அன்பு எதிரிகளிடத்தில் ஆக்ரோசம்,குடும்பத்தைக் காக்கும் பண்பு உள்ளிட்ட பல்வேறு நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அதிரடி சண்டைக்காட்சிகளும் பரபர வேகக் காட்சிகளும் உண்டு.எல்லாவற்றையும் நிறைவாகச் செய்து புதுமுகம் போல் தெரியவில்லை என்கிற நற்பெயர் பெறுகிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா,வீரத்தமிழச்சி வேடத்தில் மிளிர்கிறார்.
காளிவெங்கட், செம்பன் வினோத்,தீக்ஷா,சரத் அப்பானி,செளந்தர ராஜா,சண்முகம் முத்துசாமி,கொற்றவை உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கவனிக்கத்தக்க நடிப்பைக் கொடுத்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார் இந்தப்படத்தின் அடையாளமாக மாறி நிற்கிறார்.அவருடைய உழைப்பில் அடர்ந்த வனக் காட்சிகள்,மலைவாழ் மக்களின் வாழ்வியல் காட்சிகள் உட்பட அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
இசையமைப்பாளர் அஜீஷ்,மலைவாழ் மக்களின் இசையையும் கலந்து கொடுத்திருக்கும் பாடல்கள் மற்றும் பின்னணிஇசை படத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டும் விதமாக இருக்கிறது.
சான்லோகேஷின் படத்தொகுப்பு நடிகர்களின் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதோடு படம் வேகமாக நகரவும் பயன்பட்டிருக்கிறது.
வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வனத்தைப் பின்புலமாகக் கொண்டு மலைவாழ் மாந்தர்களை முன்னிலைப்படுத்தி இயற்கையைப் பேணவேண்டும் என்கிற நற்கருத்தை அடிநாதமாக வைத்துக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சக்திவேல்.
வனமே பின்னணி என்பதால் யானைகள் நரிகள் பாம்புகள் உள்ளிட்டனவோடு நாய்களையும் இணைத்தோடு வனமக்களின் தோற்றம் நடிப்பு ஆகியனவற்றின் மூலம் காட்சிகளிலும் இரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்.
கண்களுக்கு விருந்து கருத்துகளில் அருமருந்து.
– ஆநிரையன்