ஒரு பக்காவான த்ரில்லர்… அதனூடே துருத்தல் இல்லாமல் சைலன்ஸர் பொறுத்திய துப்பாக்கிக் குண்டுகளாக பாய்கின்றன சமூகநீதி கருத்துக்கள்.
திருநங்கை மகளை மருத்துவம் படிக்கவைக்க போராடும் தூய்மைப்பணி செய்யும் பெண்மணி, நல்ல குடும்பம் என திருமணம் செய்துவைக்கப்பட்ட பின் பிரச்சினையை எதிர்கொள்ளும் இளம் பெண், காதல் மனைவிக்கு ஆபரேசன் செய்துவைக்க பணத்துக்குப் போராடும் இளைஞன், மகளின் சாதி மறுப்பு காலதை எதிர்க்கும் பெரியவர்… என்று நான்கு கதைகள்.
இப்படி வேறு வேறு கதைகளை சுவாரஸ்யமாக ஓரிடத்தில் இணைக்கும் ஹைபர் லிங்க் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனால் நான்கு கதைகளையும் இணைத்த விதம், துப்பாக்கி வெடித்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நிச்சயம் பார்வையாளர்கள் எதிர்பாராத ட்விஸ்ட் அது.
தூய்மைப்பணி செய்யும் தொழிலாளியாக, திருநங்கை மகளை பாடுபட்டு மருத்துவம் படிக்க வைக்கும் சிங்கிள் பேரண்ட் சாவித்திரியாக சிறப்பாக நடித்து இருக்கிறார் அபிராமி. அவரது தன்னம்பிக்கை பேச்சும், தன் பிள்ளை திருநங்கை என்பதை இயல்பாக ஏற்று துணை நிற்பதும்… அற்புதம்!
அவரது திருநங்கை மகள் கார்த்தியாக நடித்திருக்கும் கீச்சாவும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். தான் பலாத்காரப்படுத்தப்படுவதை நினைத்து குமுறும் காட்சியில் நம்மை கலங்க வைத்து விடுகிறார்.
மனைவியின் ஆபரேசனுக்கு பணத்தைத் தேடி அலையும் இளைஞராக பரத். நிஜமாகவே ஒரு ஆட்டோ ஓட்டுநராக.. முன்னாள் கிரிமினலாக தோற்றம் கொண்டு இருக்கிறார். தான் கொன்றது யாரை என்பதை அறிந்து அவர் அழும் காட்சியில் பரிதாபப்பட வைக்கிறார்.
பெண்ணுரைப் போராளி தோழராக வரும் கனிகா… சில காட்சிகள் என்றாலும் கம்பீரமாக நடித்து கவர்கிறார்.
தனது மகள் வேறு சாதி பையனை காதல் திருமணம் செய்கிறார் என்றதும் பொங்கித் தீர்க்கும் அப்பாவாக, தலைவாசல் விஜய்! வழக்கம்போலவே இயல்பான நடிப்பு. அதுவும் காரில் தன்னுடன் பயணிப்பவர், தனது மகளின் காதலன் என நினைத்து ஆத்திரத்தைக் கொட்டும் காட்சியில் அதிர வைக்கிறார்!
ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டுக்கு வந்து.. அங்கே அதிர்ச்சிகரமான சம்வங்களை எதிர்கொள்ளும் பெண்ணாக அற்புதமாக நடித்து இருக்கிறார் அஞ்சலி நாயர்.
அபிராமி நண்பராக வரும் ராஜாஜி, காதலராக வரும் ஷான், கூலிப்படையாக வரும் கல்கி, தலைவாசல் விஜயின் மகளாக வரும்பவித்ரா லக்ஷ்மி, வட்டிக்கார வில்லனாக வரும் பி.ஜி.எஸ்., அஞ்சலியின் மாமனாராக வரும் அரோல் டி சங்கர் என அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஜோஸ் பிராங்க்ளின் இசையில் மூன்று பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.
‘போ.. போ.. சேகுவாரா..’, ‘தேசமில்லா ராஜா நான்..’ ஆகிய பாடல்களையும் படத்தின் வசனத்தையும் எழுதி கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜெகன் கவிராஜ்.
பாடல்களின் போது கவிஞராகவும், வசனங்களில் அந்தந்த கதாபாத்திரமாகவும் மாறி ரசிக்கவைக்கிறார்.
“சாமிய சுத்தி வர்றதிலேருந்து, சாப்பிடுற உணவ தீர்மானிக்கிறவரை நீங்களே முடிவெடுத்தா அதுக்கு பேர் என்ன… சர்வாதிகாரம்தானே!”
“தப்பு பண்ணுனா அடிக்கிறது ரைட்டுன்னு அப்ப தோணுச்சி…. இப்ப லெப்ட் தான் ‘ரைட்’னு தோணுது”
“படிச்சிட்டேங்கிறது கர்வம் இல்லே.. கவுரவம்!”
“தேவைதான் அறத்தை தீர்மானிக்குது…” – இப்படி படம் நெடுகிலும், ‘அட’ போடவைக்கும் ஆனால் கதாபாத்திரத்தை மீறாத வசனங்கள் சிறப்பு.
கே.எஸ். காளிதாஸ் & கண்ணா ஆர் இரட்டையர்களின் ஒளிப்பதிவு அருமை. ஒளிப்பதிவுக்கு கை கொடுத்து இருக்கிறது, வி.கே. நடராஜனின் கலை இயக்கம்.
சுகனின் சண்டை பயிற்சி, ஷாமின் நடனம் இரண்டுமே படத்துக்கு பலம்.திருநங்கை, தன்பால் ஈர்ப்பாளர்கள், ஆணவக்கொலை, அநியாய வட்டி, கௌரி லங்கேஷ்கொலை, சாதி பிரச்சினை, ஆணாதிக்கம்… இப்படி பல விசயங்களை ஆழமாக.. அதே நேரம் பாடமாகச் சொல்லாமல் படத்தின் வழியே சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரசாத் முருகன். ( கிளைமைக்ஸ் காட்சியில் வரும் பொருத்தமான, ‘சூட் பண்ணு…’ பாடலையும் எழுதி இருக்கிறார்.)
தவிர, ஒரு சில காட்சிகளிலேயே கதாபாத்திரத்தின் தன்மையை அழுத்தமாக பதிய வைத்தது, நான்கு கதைகள் என்றாலும் குழப்பமில்லாத திரைக்கதை என கவர்கிறார்.
அதோடு, சென்னை ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழங்கள் பறிக்கச் சிறுவன் தில்ஷனை ராணுவ அதிகாரி ராமராஜ் சுட்டுக்கொன்ற சம்பவம், பெங்களூருவில் இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர் கௌவுரி லங்ஷ் கொலை, ‘தமிழ்க்குடி’ என சாதியை உயர்த்திப் பிடிக்கும் செயல் என பல அவசிய சம்பவங்களை படத்தில் சேர்த்து இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பிரசாத் முருகனுக்கு அற்புதமான விசிட்டிங் கார்ட், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் சென்னை.
முதல் முறையாக தயாரிப்பில் இறங்கி உள்ள எம்.பி. ஆனந்த், தரமான கதை – இயக்குநரை தேர்ந்தெடுத்து அளித்து இருக்கிறார். அவருக்கும் பாராட்டுகள்!