2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, அசோக்செல்வன், பாபிசிம்கா, எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. ஒன்றாம் பாகம் போன்ற அதே கதையை சுமாராக மாற்றி சுமாராகத் தந்திருக்கிறார்கள்.
இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார்.
முதல்பாகத்தின் இறுதியில், அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக இருக்கிறார்.
விஜய்சேதுபதிக்குக் குருவான மிர்ச்சி சிவா,சிறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடைய கற்பனைக் காதலியின் சாவுக்குக் காரணமான கருணாகரனைப் பழிவாங்கத் துடிக்கிறார்.அவரையும் அவருடைய குழுவையும் பிடிக்கக் காவல்துறை அதிகாரி யோக் ஜேப்பி காத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம்,ஆளுங்கட்சி நிறுவனரான வாகை சந்திரசேகர், பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து கண்விழிக்கிறார். எழுந்து பார்த்தவர், ஊழல்வாதியான ராதாரவி முதலமைச்சர் பதவியில் இருப்பதைக் கண்டு கோபம் அடைகிறார். தனது நேர்மையான சிஷ்யரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.பாஸ்கர் உதவியுடன் இன்னொரு கட்சி தொடங்கி ராதாரவிக்கு எதிராக தேர்தல் பரப்புரை செய்கிறார். அதேநேரம் பொருளாதார ரீதியாக கருணாகரன் பின்னடைவைச் சந்திக்கிறார். இதனால் ஆட்சி கவிழ்கிறது.
இதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்வதுதான் படம்.
மிர்ச்சி சிவா தன்னுடைய பாணியிலேயே இந்தக் கதாபாத்திரத்தையும் கையாண்டிருக்கிறார்.சில இடங்களில் அது பலமாகவும் சில இடங்களில் பலவீனமாகவும் இருக்கிறது.
நாயகி ஹரிசா ஜஸ்டின் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
கருணாகரன், வாகை சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர்,யோக் ஜேபி, அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி ஆகியோரும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் தில்லையின் ஒளிப்பதிவு,இருண்மை நகைச்சுவைப் படத்திற்கேற்ப அமைந்திருக்கிறது.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ்.ஆர்.ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.கொஞ்சம் கூடுதலாகவே அமைத்துவிட்டார்கள்.
இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜூன்,முதல்பாகத்தின் தாக்கத்திலேயே இப்படத்தையும் இயக்கியுள்ளார்.தன்னால் இயன்றவரை காட்சிகளில் சுவாரசியம் கூட்ட முயன்றிருக்கிறார்.
ஒரு வெற்றிப் படத்தின் அடுத்த பாகம் எனும்போது இதற்காக எவ்வளவு உழைத்தாலும் முந்தைய பாகத்தை ஒப்பீட்டு மதிப்பிடும் ஆபத்து கண்டிப்பாக இருக்கும்.இந்தப் படத்தையும் அந்த ஆபத்து சூழ்ந்துள்ளது.
– வெற்றி