குழந்தைகளுக்கான படம் மற்றும் தொடர்கள் வருவது மிகக் குறைவு.அவ்வப்போது ஏதாவதொன்று வந்து கவனத்தை ஈர்க்கும்.அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கும் இணையத் தொடர் பாராசூட். ஹாட்ஸ்டார் இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர்,கிருஷ்ணா,கனி,காளி வெங்கட்,பவா செல்லதுரை,சரண்யா ராமசந்திரன் ஆகியோரோடு சக்தி என்கிற சிறுவனும்,இயல் என்கிற சிறுமியும் அண்ணன் தங்கையாக நடித்திருக்கிறார்கள்.
மனைவி,இரண்டு குழந்தைகளைக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தலைவரான கிஷோர் கண்டிப்பான பேர்வழி.எரிவாயு உருளை விநியோகம் செய்யும் வேலையில் இருக்கும் அவர்,குறைந்த வருவாய் என்றாலும் தம் குழந்தைகளைப் பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.அதனால் மிகக் கண்டிப்புடனும் வளர்க்கிறார்.அவரைப் பார்த்தாலே குழந்தைகளுக்குப் பயம்.
ஆனாலும் குழந்தைகளின் உலகம் வேறானது.நாம் கற்பனை செய்ய முடியாதது. அந்த உலகத்தில் இந்தக் குழந்தைகள் சஞ்சரிக்கின்றன.அதன்படி தந்தை இல்லாத நேரத்தில் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அண்ணனும் தங்கையும் செல்கிறார்கள்.போனவர்கள் நெடுநேரம் ஆகியும் திரும்பவில்லை.பதட்டம் ஏற்படுகிறது.அழுதபடியே காவல்துறையில் புகார் செய்கிறார் அம்மா.அந்தநேரம் காவல்துறைக்கு வேறு முக்கியமான சிக்கல்.இதை இரண்டாம்பட்சமாகக் கருதுகிறார்கள்.
குழந்தைகளைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்னவானது? என்கிற கேள்விகளுக்கான விடைகள் தாம் இந்த இணையத் தொடர்.
கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் தேர்ந்த நடிப்பின் மூலம் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.பெரிய நடிகர்களுக்கு இணையாக நடித்து பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார்கள்.
யுவன்ஷங்கர்ராஜாவின் இசை தொடருக்கு மேலும் உரம் சேர்த்திருக்கிறது.
ஓம் நாராயணின் ஒளிப்பதிவில் பெற்றோரைப் பார்க்கும்போது அவர்களின் கண்டிப்பும் குழந்தைகளைப் பார்க்கும்போது அவர்களின் குதூகலமும் நம்மையும் பற்றிக் கொள்கிறது.
ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு தொடரை வேகமாக நகர்த்துகிறது.
இரண்டு குழந்தைகளை முதன்மையாக வைத்துக் கொண்டு பெற்றோருக்கான அறிவுரை,காவல்துறையினரின் செயல்பாடுகள்,குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஆகிய முக்கியச் செய்திகளை பரப்புரை தொனியின்றி உணர்த்திச் செல்கிறார் இயக்குநர் ராசுரஞ்சித்.
– இளையவன்.
பின்குறிப்பு – ஐந்து பாகங்களைக் கொண்ட இத்தொடர் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.