அறிமுக இயக்குநர் டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் படம் ‘மழையில் நனைகிறேன்’. இப்படத்தில் கதாநாயகனாக அன்சன் பால் நடிக்க, நாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜி மற்றும் கவின் பாண்டியன் ஆகியோர் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் டிசம்பர் 3 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது படத்தின் நாயகன் அன்சன் பால் கூறியதாவது….

’ரெமோ’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானேன். இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறேன்.இப்படத்தில் என் கதாபாத்திரம் நிறைய மாறுபாடுகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.அதில் நன்றாக நடித்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறேன்.நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும் என்றார்.

நாயகி ரெபா மோனிகா ஜான் கூறியதாவது…

இப்படத்தின் கதை அழகான காதல் கதை.அதற்கேற்ற வகையில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன.இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.எல்லோரும் என்ஜாய் செய்வார்கள் என்றார்.

இயக்குநர் டி.சுரேஷ் குமார் கூறியதாவது….

இது முழுக்க முழுக்க காதல் கதை தான்.நாயகன் ஒருதலையாகக் காதலிக்கிறார். அமெரிக்காவுக்குச் சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கும் நாயகி காதலை நிராகரித்து விடுகிறார்.அவர் நிராகரித்தாலும் சோர்ந்து போகாத காதலன்,நாயகி மனதில் என்றாவது ஒருநாள் காதல் மலரும் என்று காத்திருக்கிறார்.அவரது காத்திருப்புக்குப் பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் இந்தப்படத்தின் கதை.

ஒரு தலைக்காதல் என்றதும் நாயகன் நாயகியை விரட்டி விரட்டி தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்காது என்பதைச் சொல்லிவிடுகிறேன்.இப்படத்தின் மையம் காதல் என்றாலும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும் என்பது உறுதி என்றார்.

தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் கூறியதாவது….

இது ஒரு அழகான காதல் கதையாக மட்டும் அல்லாமல் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல படமாக இருக்கும். எந்த இடத்திலும், எந்தவித நெருடலும் இல்லாமல் படம் பயணிக்கும்.இயக்குநர் சுரேஷ் என் தம்பியுடன் படித்தவர் என்பதால் அவர் என்னிடம் கதை சொன்னார்.இப்படத்தை நான் தயாரிப்பதாகவே இல்லை.கதை எனக்குப் பிடித்திருந்ததால் நானே சில தயாரிப்பாளர்களை அணுகினேன்.ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை.அதனாக் நானே தயாரித்துவிட்டேன்.

டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்குக் கடவுள் ஆசி கிடைத்துவிட்டது.ஆம், ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகே அப்படம் குறித்துப் பாராட்டுத் தெரிவிக்கும் ரஜினி சார், வெளியீட்டுக்கு முன்பே எங்கள் படம் குறித்துப் பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அது கடவுள் ஆசி கிடைத்தது போன்றது.

நான் அவருடைய வெறித்தனமான இரசிகன். முத்து படம் வெளியான போது ரஜினி சார் போட்ட அதே கெட்டப்புடன், கையில் சாட்டையுடன் திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்தவன்.என்னைப் பற்றி ரஜினி சாரிடம் நண்பர் ஒருவர் சொல்ல, உடனே நான் தயாரித்திருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்திற்கு வாழ்த்துக் கூறியதோடு, அந்த வீடியோவை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கிவிட்டார்.இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.