நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ. உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்லின் சுருக்கம்தாம் யு ஐ.
கன்னட முன்னணி நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.ஒன்றுக்கு இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
படத்திலும் அவர் திரைப்பட இயக்குநர்.அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்துப் பிடித்தது போல் ஆகிறார்கள். சிலர் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், அந்தப் படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறது. முன்னணி திரைப்பட விமர்சகர் அந்தப் படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார். இதனால், அந்தப் படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள படத்தை இயக்கிய உபேந்திராவையே தேடிச் செல்கிறார்.
அந்தத் தேடலில் அவர் கண்டடைந்தது என்ன? என்பதுதான் திரைக்கதை.
சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் உபேந்திரா.இரண்டு வேடங்கள் என்றால் வித்தியாசம் வேண்டுமே? சத்யாவாக மென்மையானவர். கல்கியாக மிரட்டலானவ்ர்.இரண்டு வேடங்களிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் உபேந்திரா.
நாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் வணிகத் திரைப்பட நாயகியாக இருக்கிறார்.ஆனாலும் அவர் வரும் காட்சிகள் இரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவருக்குப் பெருமை.
படத்தின் முக்கிய கதாபாத்திரம்,திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மாதான்.அதன் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார் அவர். உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா உள்ளிட்டோரும் கவனிக்கத்தக்க நடித்து படத்துக்கு உதவி செய்திருக்கிறார்.
படம்தான் புத்திசாலித்தனமானது நம்து இசை அப்படி இல்லை என்று முடிவு செய்து இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகு மக்களுக்கானதாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபால், கணினி வரைகலையினர் மற்றும் கலை இயக்குநர் ஆகியோரின் கூட்டுமுயற்சியில் காட்சிகள் வேறுபட்டு இருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் நடிகர் உபேந்திரா.
கடவுள் பெயரால் நடக்கும் வெறுப்பு மற்றும் பிளவு அரசியல், நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்குச் சரியான உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொள்வது, இயற்கை வளங்கள் சிலரது சுயநலத்திற்காக சூறையாடப்படுவது ஆகியனவற்றைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்.
கருத்தைச் சொல்வது முக்கியம் என்றால் அதைத் திரைமொழியில் சொல்வது அதைவிட் முக்கியம். அவருடைய அனுபவம் அதை சாத்தியம் ஆக்கியிருக்கிறது.
– இளையவன்