கி.வே.பொன்னையன்
22/12/2024
விடுதலை படம் பேசும் அரசியல் என்பது இந்திய மண்ணில் குறிப்பாக தமிழ் மண்ணில் நிலவி வரும் சாதிய ஒடுக்குமுறை , தேசிய இன ஒடுக்குமுறை , வர்க்க ஒடுக்கு முறை ஆகிய
இந்த மூன்று ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான போராட்டத்தை கட்டமைப்பதில் உள்ள சிக்கலைப் பேசுகிறது.
மனித குல விடுதலைக்கான மாபெரும் மெய்யியல் தான் மார்க்சியம்-இலெனினியம். 1925 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் வேர்விடத் தொடங்கியது. சொல்லற்கரிய தியாக வரலாற்றைக் கொண்டது இந்திய பொதுவுடமை இயக்கம்.
தெலிங்கானாவில் 1940களின் நடுப்பகுதியில் ஹைதராபாத் நிஜாமின் நில உடமை ஆதிக்கத்திற்கு எதிராகப்
ஆயுதப் படைகட்டி, போர் நடத்தி நிலங்களை மீட்டு மக்களுக்கு கொடுத்து மக்களை பண்ணை அடிமை முறையில் இருந்து மீட்ட வரலாறு இந்தியப் பொதுவுடமை இயக்கத்திற்கு உண்டு.
இதுபோல் புன்னப்புரா வயலார் எழுச்சி மாப்ளா எழுச்சி ,மேற்கு வங்கத்தில் நடந்த பல்வேறு நிலத்திற்கான போராட்ட வரலாறுகள், குறிப்பாக நக்சல்பாரி, காரிபாரி ஆகிய பகுதிகளில் நடந்த மாபெரும் நிலம் மீட்பு அரசியல் வரலாறு பதியப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் நில உடமை ஆதிக்கம் எவ்வாறு கோலோச்சியது
விவசாய குடும்பத்து பெண்களையும் பெண்டாளும் பண்ணை ஆதிக்க முறையை படத்தின் தொடக்கத்திலேயே வைத்துள்ளார் வெற்றிமாறன்.
அந்தப் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிரான ஒப்பற்ற உழவர் பெருந்தலைவர் சீனிவாசராவ் அவர்களின் முழக்கத்தோடு படம் நகரத் தொடங்குகிறது .
சாணிப் பால் சவுக்கடி ,பாலூட்டும் தாய்மார்கள் பால் கொடுப்பதற்கு வயலை விட்டு வரப்புக்கு வருவதற்கான கோரிக்கைகள் என்றவாறு ஆழமான சிக்கல்களை படம் பேசுகிறது
போகிற போக்கில் சமூகத்தில் நிலவும் பல்வேறு ஒடுக்கு முறைகள் குறித்த ஆழமான விவாதங்களைக் கட்டமைத்திருப்பது படத்தின் மிக நுட்பமான அரசியலாகும்.
அதில் ஒன்று பெண்களின் முடி வளர்க்கும் உரிமை தொடர்பானது.
விவசாயி தொழிலாளர் குடும்பத்து குழந்தைகள் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு படிப்பதற்கான கல்விச்சாலை பண்ணை ஆதிக்கவாதிகளால் நெருப்பு மூட்டப்படுகிறது.
ஏழை மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து பாடம் நடத்திய கதை தலைவனாக வரும் பெருமாள் என்னும் விஜய் சேதுபதி தனது வாழ்வில் இதுகுறித்தான மனக்குமுறலோடு கம்யூனிஸ்ட் இயக்கத்தை நாடுகிறார்.
பண்ணை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார் .
இந்தப் படத்தின் நாயகனாக பெருமாள் என்னும் பெயரில் நடிக்கும் விஜய் சேதுபதி அவர்கள்.
அவர் கட்சிக்குள் நுழைந்தவுடன் கட்சியின் வகுப்புகள் நடத்தப்படும் முறை அதில் விளக்கப்படும் அரசியல் அழகாக முன்வைக்கப்படுகிறது .
ஆலைத் தொழிலாளியாக வேலைக்கு சேர்கிறார் பெருமாள் வாத்தியார்.
சர்க்கரை ஆலையில் உரிமை கேட்கும் தொழிலாளர்களை கொலை செய்வது இயல்பாக நடக்கிறது.
அதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டும் காட்சிகள் வருகிறது .
படத்தின் கலை நயத்திற்காகவும் மக்களின் உணர்வோட்டத்தை இணைக்கும் வகையில் முதலாளியின் மகளே கம்யூனிஸ்ட் ஆக மாறி கட்சியோடு இணைகிறார்.
ஆணாதிக்க கணவனை வெறுத்து ஒதுக்கி விட்டு இயக்க வாழ்க்கையை தேர்வு செய்கிறார் .
இயக்க வாழ்க்கையில் கதை நாயகனான பெருமாள் ஆசிரியரோடு பேசி இணைந்து இருவரும் குடும்ப வாழ்வையும் நடத்துகிறார்கள் .
இந்த பாத்திரங்களை இணைத்ததன் மூலம் வெற்றி மாறன் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு குடும்ப உணர்வு, காதல் உணர்வு, இவைகள் எல்லாம் அந்நியப்பட்டது அல்ல என்பதை படத்தின் வழி பதிவு செய்கிறார் .
குழந்தைகளை அவர்கள் வளர்க்கும் முறை, நேசிக்கும் முறை, தலைமறைவு வாழ்க்கையில் குழந்தைகள் அப்பாவுக்காக ஏங்கி இருப்பதும்
தலைமறைவாக இருக்கும் அப்பா சிறு பொட்டலத்தில் தின்பண்டங்களை வாங்கி வந்து பொதுக்கூட்டத்திற்குள் நடுவிலே குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தை பாசத்தை வெளிப்படுத்துவதும் கம்யூனிஸ்டுகள் வரட்டுவாதிகள் அல்ல, ஈரம் உள்ளவர்கள் என்பதை இந்த காட்சியிலே வெற்றிமாறன் அழகாக பொது வெளிக்கு பறைசாற்றுகிறார்.
களம் நகர்கிறது வர்க்க போராட்டம் என்ற சொல்லாடல் அதிகமாக வருகிறது .
நிலக்கிழார்கள் ,தொழிலதிபர்கள் வணிகர் பெருங்குழுமங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்கவில்லை என்று சொன்னால் நாம் நிம்மதியாக இனி இருக்க முடியாது என்று பேசுகிறார்கள்.
தஞ்சையில் வெண்மணி கொலைகாரன் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உருவாக்கப்பட்ட நெல் உற்பத்தியாளர் சங்கத்தை அப்படியே பதிவு செய்கிற காட்சியாக இது இருக்கிறது.
இந்த நெருக்கடியான காலத்தில் நக்சல்பாரி இயக்கம் தோன்றுகிற பின்னணியை மிக அழகாக படத்திற்குள் கொண்டு வருகிறார் வெற்றிமாறன்.
அடக்குமுறைகளை இப்படியே மக்கள் திரள் போராட்டங்களின் மூலமாக நாம் எதிர்கொண்டால் முடியாது நாமும் ஆயுதம் எடுத்து போராட வேண்டும் என்ற அழித்தொழிப்பு அரசியலுக்கான விவாதம் நடைபெறுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் -இலெனினிஸ்ட் உருவானதை போகிற போக்கில் காட்டிவிடுகிறார் இயக்குநர்.
தேசிய இன பிரச்சனை, சாதியப்பிரச்சனை, வர்க்க பிரச்சனை மூன்றையும் ஒன்றிணைத்த அரசியல் முன்வைக்கப்பட வேண்டும் என்று வாத்தியார் பெருமாள் சொல்கிறார். அதற்கான மாநாடு கூட்டப்படுகிறது அது தோழர் கலியபெருமாள் அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் இணைந்து சாதி ஒழிப்பு ஆவணத்தை முன்வைத்து நடத்தியபரப்பி- மீன்சுருட்டி மாநாட்டின் பின்புலத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
அங்கு தான் தமிழரசன் அவர்கள் சாதி ஒழிப்பிற்கான ஆவணத்தை நிறைவேற்றுகிறார் .
அது வரலாறு தெரிந்தவர்களுக்கு பதிவாகும்.
மக்கள் திரள் இல்லாமல் ஆயுதத்தை மட்டும் வைத்துக்கொண்ட சிறு குழுவாக இயங்குவது அவர்களை காட்டுக்குள் முடக்குகிறது. பொன்பரப்பியின் முந்திரி காடுகளை காட்சிப்படுத்துகின்ற விதம் சிறப்பு .
மக்களிடமிருந்து முற்றாக தனிமைப்பட்ட பிறகு அரசு எந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒரு தலைமைச் செயலாளர், ஒரு தலைமை நிலை காவல் உயர் அதிகாரி, அரசியல் சார்பான அமைச்சர்
இவர்கள் பேசுவதும் இவர்கள் எப்படி மக்கள் பிரச்சனைகளை சதித்தனமாக கையாண்டு அதிகார வர்க்கத்தை இயக்குகிறார்கள் என மிக எளிமையாக இயக்குனர் பதிவு செய்துவிட்டார்.
முடிவுகள் எவ்வளவு சுயநலத்தோடு எடுக்கப்படுகிறது முதலாளிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குமான உறவு எவ்வளவு உள்ளார்ந்து இருக்கிறது என்பதை படத்தில் ஒரு காட்சியில் மிக அழகாக பதிவு செய்துள்ளார்.
இந்த ஆட்சி முறை என்பது உடமை வர்க்கத்தின் அதிகார ஆட்சி என்பதை அம்பலப்படுத்துகிறார் வெற்றி மாறன்.
அழித்தொழிப்பு செயல் திட்டம் பின்னடைவுக்கு ஆளாகி தனிமைப்பட்டவுடன் ஆசிரியர் பெருமாள் நாம் பின்வாங்கி மக்களை திரட்டி மக்களை ஆயுதமெடுப்பதற்கு
தயார் செய்வோம் என்ற வாதத்தை தோழர்கள் நடுவில் வைக்கிறார்.
அது மா. லெ இயக்கத்தில் ஏற்பட்ட மக்கள் திரள் பாதைக்கான போராட்ட வழியை பேசுகிறது.
இருந்த போதும் காவல்துறை வழக்கம்போல் தலைவர்களை அழித்தொழிப்பது போல் இந்த படத்திலும் கதை நாயகனை ஆசிரியர் பெருமாளை சுட்டுக்கொன்று விட்டது.
அந்த வேலையைக் கூட விருதுக்காக செய்யப்பட்டதாக அந்த காவல் அதிகாரி குதூகளிக்கிறார்.
ஒரு சாதாரண நிலை காவலர் கதாநாயகனிடம் இந்தக் கதைகளை எல்லாம் கேட்டு இது தங்கள் வாழ்க்கைக்கானது என்பதை உணர்ந்து காவல்துறை வேலையை உதறியது எரிகின்ற காட்சியாக தலையில் இருந்த தொப்பியை கழட்டி ஒரு புதர் மீது போட்டு விடுகிறார்.
அந்தக் கடை நிலைக் காவலர் (சூரி)தன்னை அடக்கி ஆளும் அதிகாரிகளுக்கு எதிராக மாறுகிறார்.
மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட்டுகளை சுட மறுக்கிறார். இது. போன்ற காட்சிகள் எதார்த்தத்திலும் நடந்தேறியவைகள் தான்.
இந்தப் படம் முழுவதும் கம்யூனிஸ்ட் அரசியல் நக்சல் பாரி காலத்திற்குப் பிறகு உருவான அழித்தொழிப்பு அரசியல், அழித்தொழிப்பு வழியில் இருந்த பொழுது தமிழரசனும்
புலவர் கலியபெருமாள் அவர்களும் முன்வைத்த சாதிய தேசிய விடுதலை உள்ளிட்ட தமிழ்நாடு விடுதலை அரசியல் இவைகளை மிக நேர்த்தியாக பதிவு செய்கின்றது புலவர் கலியபெருமாள் அவர்களையும் தமிழரசன் அவர்களையும் பின்பலமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழரசன் அவர்களால் நிகழ்த்தப்பட்ட ரயில் குண்டுவெடிப்பும் அதில் அவர்கள் குண்டு வைத்திருப்பதை ரயில் நிலையத்திற்கு தெரிவிப்பதும் ரயில் நிலைய அதிகாரிகள் ஆணவப் போக்கால் அதைக் கண்டு கொள்ளாமல் ரயில் கவிழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டதும் அதனால் தமிழரசன் அவர்கள் வருந்தியதும் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களைப் போன்றவர்கள் இந்த வரலாறுகளை அதில் ஈடுபட்ட தலைவர்களிடமே கேட்டு பேசி தெரிந்தவர்கள் .
இன்னும் தோழர் பொழிலன் போன்றவர்கள் இந்த அரசியலோடே இயங்கியவர்கள்.
பத்தாண்டு காலம் சிறை போன்ற ஒடுக்கு முறைகளை எதிர்கொண்டவர்கள்.
தமிழ்நாடு மார்க்சிய இல்ல இனிய கட்சி கட்சி தண்டவாளங்களைப் போல் இதே பயணத்தில் வந்து தமிழ்நாடு
விடுதலை அரசியலை 1992 இல் முன் வைத்தது. இந்தப் படத்தில் பேசப்படுகிற அரசியலை எல்லாம் இன்னும் தெளிவான கோட்பாட்டு ஆவணங்கள் ஆக்கி இந்த பிரச்சனைகளை 1992 ல்தெளிவாக தீர்த்து முன்வைத்து.
இருந்த போதும் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்திய மண்ணுக்கு உரிய தமிழ் மண்ணுக்கே உரிய சிறப்பு இயல்புகளோடு
இந்த மண்ணின் விடுதலை வரலாற்றோடு இன்னும் இணைந்து ஒரு பௌதீக சக்தியாக மாற இயலவில்லை.
இன்றைக்கும் நூறாண்டு கால வரலாற்றில் இந்தியாவின் இன்னும் குறிப்பான தன்மைகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான சமூக நீதிக்கான போராட்டத்தோடு இணைய வேண்டிய தேவையில் நாம் இணைய வேண்டும் என்று
தமிழ்நாடு மார்சிய இலெனினியக் கட்சி பேசுகிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தயக்கத்தை உடைக்க வேண்டும் என்று கூர்மையாக பேசுகிற இந்த காலத்தில் இந்தப் படம் வெளிவந்திருப்பது கம்யூனிஸ்ட் கொள்கையை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பெரும் கலை விருந்தாகத்தான் இருக்கிறது. இந்த படம் மக்களை நேசிக்கின்றவர்களை, கம்யூனிசக் கோட்பாடுகளின் பால் உண்மையான பற்று கொண்டவர்களை இந்தப் படம் ஆழமான உணர்வோடு தொட்டுவிடும்.
தேர்தல் அரசியலுக்கு போய் பதவி சுகம் கண்டு வாழ்க்கையை கடத்தி விடலாம் என்று நினைக்கிற ‘சில கம்யூனிஸ்டுகளுக்கு’ இது கசப்பாக இருக்கலாம் .ஆனால் மனித குல விடுதலையை நேசிக்கிற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற
மார்க்சிஸ்ட் இலெனினிஸ்ட் குழுக்களின் பல்வேறு பிரிவுகளாக இருக்கிற அனைவரும் இந்த படத்தின் உள்ளார்ந்த பொருளை கொண்டாடுவது தான் நேர்மையானதாக இருக்கும் என்று கருதுகிறோம்.
வெற்றிமாறன் அவர்களுக்கு இந்த துணிவு எப்படி அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை!
சமகால வரலாற்றில் ஒரு திரைக்காவியத்தின் மூலம் சிக்கலான. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரச்சனைகளை சிக்கலான இந்திய சமூகத்தின் தமிழ் சமூகத்தின் சாதிய தேசிய இன சிக்கல்களை
வர்க்க பிரச்சனையோடு திரைக்களத்தில் பேசுவது என்பது இதுதான் முதல் முறை என்று கருதுகிறோம்.
கம்யூனிஸ்ட்ட இயக்க வரலாற்றின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு ஒரு திரைக்காவியத்தை வடித்து எடுத்துள்ளார் வெற்றிமாறன்.
அது இன்றைக்கு தமிழ்நாட்டின் கலை இலக்கிய அரங்கில் மிகுதியும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
தமிழ்நாட்டின் களம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதனை வெளிப்படுத்துவதாகவே உணர்கின்றோம் .
விடுதலை படமல்ல,
கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பாடம்.
இந்தப் படத்தை மிகக் கடினமான உழைப்போடும் இயக்க வரலாறுகளின் பின்புலத்தோடும்
எடுத்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும்; இந்தப் படத்திற்கு துணிந்து முதலீடு செய்துள்ள படத்தின் உரிமையாளருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் என்ற முறையில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறோம்.
கி.வே.பொன்னையன்
22/12/2024