இராமாயணக் கதை,திரைப்படமாக,தொலைக்காட்சித் தொடராக,இணையத் தொடராக எனப் பல்வேறு வடிவங்களில் வந்து கொண்டேயிருக்கிறது.
அதில் இன்னொரு புதிய முயற்சியாக வந்திருக்கிறது ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா.2டி அனிமேஷன் எனச் சொல்லப்படும் இருபரிமாண இயங்குபடமாக இப்படம் வந்திருக்கிறது.
அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த இராமன் திடீரென 14 வருடங்கள் வனவாசம் போகிறார்.அங்கு,இலங்கை வேந்தன் இராவணனால் இராமனின் மனைவி சீதை கடத்தப்படுகிறார்.வானரப் படைகளின் உதவியுடன் இராவணனை வீழ்த்தி, இலங்கையில் இருக்கும் சீதையை மீட்பதுதான் இராமாயணம்.
இக்கதையின் முக்கிய அம்சங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், ஜடாயு பறவை, மூலிகைக்காக மலையையே பேத்து எடுத்து வரும் அனுமானின் சாகசங்கள் ஆகியனவற்றோடு போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள், இந்திரஜித் மற்றும் லட்சுமன் இடையே நடக்கும் வான் சண்டை, இராவணனின் புஷ்பக விமானம், கோட்டை ஆகியன நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இராமன் கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதைக்குக் குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, இராவணனுக்குக் குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லட்சுமனனுக்குக் குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், அனுமானுக்குக் குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் இராமாயணக் கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா ஆகிய அனைவரும் தங்களது பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
வி.விஜயேந்திரபிரசாத் க்ரியேடிவ் இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
வாசிப்புப் பழக்கம் குறைந்து எல்லாவற்றையும் காட்சிகளாகக் காண விரும்பும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் இப்படம் மூலம் இராமாயணக்கதை சென்று சேரும்.வண்ணமயமான காட்சிகளால் கவரப்பட்டு கதை கேட்கவும் பார்க்கவும் தொடங்கிவிடுவார்கள் என்பதில் மாற்றமில்லை.
– இளையவன்