குடும்பஸ்தன் என்ற சொல் குடும்பக் கஷ்டங்களை வெளிப்படுத்தக் கூடிய சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.இந்தப் பெயரில் வெளியாகியிருக்கும் படத்திலும் அதுவே தான் இருக்கிறது.அதேநேரம்,
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்
எனும் குறள் வழி படம் நெடுக சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
நாயகன் மணிகண்டனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலித்து சாதிகடந்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.அதனால் நிறைய எள்ளல்கள் வசவுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.அவற்றைத் தாண்டி வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்கிற முனையும் நேரத்தில் வேலை இழப்பு,கடன் உள்ளிட்ட பல சிக்கல்களைச் சந்திக்க நேருகிறது.அவை என்ன? அவற்றிலிருந்து மீண்டார்களா? என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்வதுதான் படம்.
மணிகண்டன், இந்த வேடத்தைத் தேர்ந்தெடுத்தாரா? இந்த வேடம் அவரைத் தேர்ந்தெடுத்ததா? என்று பட்டிமன்றம் நடத்துமளவுக்கு அதுவாகவே மாறிப்போயிருக்கிறார்.சோதனை மேல் சோதனைகளை அவர் எதிர்கொள்ளும் வகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
நாயகி சான்விமேக்னா புதுமுகம்.ஆனால் தேர்ந்த முகமாகத் தெளிந்திருக்கிறார்.கணவனுக்காகப் பிறந்த வீட்டாரோடு சண்டை செய்வது புகுந்தவீட்டிலும் போர்க்கொடி தூக்குவது ஆகிய இடங்கள் உட்பட எல்லா நேரங்களிலும் வரவேற்புப் பெறுகிறார்.
குருசோமசுந்தரம் நாயகன் மணிகண்டனின் மைத்துனர் வேடமேற்றிருக்கிறார்.பணம்தான் எல்லாம் அந்தஸ்துதான் முக்கியம் என்றெல்லாம் சொல்லி அவர் செய்யும் செயல்கள் எல்லாம் சிரிப்புவெடிகள்.
மணிகண்டனின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன்,அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம் ஆகியோர் நன்று.அதிலும் ஆர்.சுந்தர்ராஜனின் கொங்குத்தமிழ் கொள்ளை கொள்கிறது.
நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் ஆகிய அனைவரும் நல்ல தேர்வு.
ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியம், திரைக்கதையில் இருக்கும் நகைச்சுவையை காட்சிகளிலும் வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்.
வைசாக் இசையில் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசை திரைக்கதையை மேம்படுத்தப் பயன்பட்டிருக்கிறது.
காட்சி ஊடகமான திரைப்படத்தில் வசனங்களே முன்னின்றாலும் அதனால் சோர்வு ஏற்படாதவண்ணம் படத்தொகுப்பாளர் கண்ணன் பாலு பாடுபட்டிருக்கிறார்.
பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் வெகுமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி,பணமே முக்கியம் என்கிற கருத்துக்கும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்கிற கருத்துக்குமான போட்டியை மையமாகக் கொண்டு நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல சிக்கல்களையும் உள்ளே வைத்து நல்ல பொழுதுபோக்குப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
– இளையவன்