நாயகன் நாயகி ஆகியோருக்கிடையே முதலில் மோதல் பின்பு காதல் அதன்பின் பிரிவு என்று போகும் பல படங்கள் வந்திருக்கின்றன.இப்படத்தில் பிரிந்த பின்பு காதலி பெரிய சிக்கலில் மாட்டுகிறார்.அதிலிருந்து அவரை மீட்க முயல்கிறார் காதலன் என்கிற கதையுடன் வந்திருக்கும் படம் நேசிப்பாயா.
நாயகனாக நடித்திருக்கிறார் நடிகர் முரளியின் இளையமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி.திரைப்படக் கதாநாயகனுக்குரிய அம்சங்களுடன் இருக்கிறார்.சண்டை,நடனம் ஆகியன மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் இயல்பாக இருக்கிறார்.சோகம் ஆற்றாமை ஆகிய உணர்சுகளை வெளிப்படுத்தக் கூடிய இடத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்.
அதிதிஷங்கருக்கு அழுத்தமான வேடம்.அசால்ட்டாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.காதலுடனான காதல் மோதல் காட்சிகளில் குறிப்பிடத்தக்க முகபாவங்களை வெளிப்படுத்தி இரசிகர்களைக் கவர்கிறார்.
சரத்குமார்,பிரபு,குஷ்பு,ராஜா,கல்கி கோச்சலின் என படத்தில் நிறைய நடிகர்கள்.அவர்களும் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.வழக்குரைஞராக நடித்திருக்கும் கல்கிகோச்சலின் கூடுதல் கவனம் ஈர்க்கிறார்.
கேமரூன் எரிக் பிரிசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக இருக்கின்றன.படத்தின் தரத்தை உயர்த்திக்காட்டப் பயன்பட்டிருக்கின்றன.
யுவனின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.முடிந்தவரை படத்தை வேகப்படுத்த முயன்றிருக்கிறார்.
விஷ்ணுவர்தன் எழுதி இயக்கியிருக்கிறார்.தொடக்கத்தில் வழக்கமான கதையாகவே போகிறது.பொதுவாக வெளிநாட்டுக்குப் போகும் நாயகர்கள் சிக்கலில் சிக்கி சிறைக்குப் போவார்கள் என்பதை மாற்றி நாயகியைச் சிறைக்கு அனுப்பியிருக்கிறார்.அடிப்படையான விசயங்களையும் பார்வையாளர்கள் யூகித்துவிடும்படி வைத்திருப்பது பலவீனம்.பட உருவாக்கத்தில் காட்டியிருக்கும் சிரத்தையை திரைக்கதை எழுதுவதிலும் காட்டியிருக்கலாம்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஆகாஷ் முரளி,கதாநாயகனாக வெற்றி பெற வாய்ப்புள்ளவர் என்பதை உலகத்துக்கு அறிவிப்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
– செல்வன்