2011 ஆம் ஆண்டு வெளியான படம் வெங்காயம்.சங்ககிரி ராஜ்குமார் எழுதி இயக்கி நடித்திருந்தார்.13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பயாஸ்கோப்.
இப்படத்தின் கதை வெங்காயம் படம் எப்படி உருவானது? என்பதுதான்.
வெங்காயம் படத்தின் கதையை எழுதியதிலிருந்து அது படமாக வெளிவரும்வரை நடந்த போராட்டங்கள் மட்டுமின்றி வெளிவந்தபின் நடந்த நிகழ்வுகளையும் இணைத்து இந்தப்படத்தின் திரைக்கதையாக்கியிருக்கிறார்.
கிராமத்திலிருந்து வந்த ராஜ்குமார், இந்தக் கதைமாந்தர்களாக அந்தக் கிராமத்து மக்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார்,அவர் வாழ்க்கையைப் படமாக எடுத்து அதில் அவரே நடிப்பதால் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு இயல்பாக அமைந்து நெகிழ வைக்கிறது.
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் ரஞ்சித்,நாயகியாக நடித்திருக்கும் நிலா ஆகியோரும் அளவாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெள்ளையம்மாள், முத்தாயி ஆகிய பாட்டிகள், முத்துசாமி, குப்புசாமி ஆகிய தாத்தாக்கள், அப்பா வேடத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்படத் தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மச்செல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன் ஆகிய எல்லோருமே நாம் திரையரங்குக்குள் இருக்கிறோம் என்பதை மறந்து ஏதோவொரு கிராமத்தில் நுழைந்துவிட்டது போன்ற அனுபவத்தைக் கொடுக்கிறார்கள்.
சத்யராஜ்,சேரன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து படத்துக்குச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தாஜ்நூர்,திரைக்கதையோடு முழுமையாக ஒன்றிப் பணிபுரிந்திருக்கிறார் என்பது தெரிகிறது.
முரளிகணேஷின் ஒளிப்பதிவு கதையில் இருக்கும் எதார்த்த உலகை திரையில் அப்படியே கொண்டு வந்திருக்கிறது.
ஒரு திரைப்பட இயக்குநர் எப்படி உருவாகிறார்? அவர் இயக்குநராவதற்கு எவ்வளவு எதிர்ப்புகள்? போராட்டங்கள்? இழப்புகள்? என்பனவற்றை அச்சுஅசலாகக் காட்சிப்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
– இளையவன்