படத்தின் பெயரே இப்படம் என்ன சொல்லப்போகிறது? என்பதைச் சொல்லிவிடுகிறது.ஆம்,இது குடிநோயாளிகளைப் பற்றிப் பேசுகிற படம்தான்.
நாயகன் குருசோமசுந்தரம், கட்டுமானத் தொழிலாளி.மனைவி இரண்டு குழந்தைகள் கொண்ட அழகான குடும்பம்.ஆனால் அவருடைய குடியால் எவ்வளவு சிக்கல்கள்? அதிலிருந்து அவரை மீட்க நடக்கும் போராட்டம் அதன் விளைவுகள்தாம் படம்.
குருசோமசுந்தரம், குடிநோயாளி வேடத்தை அவ்வ:அவு எதார்த்தமாகச் செய்திருக்கிறார்.திரைப்படம் பார்க்கிறோம் என்கிற எண்ணமில்லாமல் பக்கத்தில் நடப்பது போல இருக்கிறது.குடிநோயாளிகள் மீது கோபமும் வரும் கருணையும் வரும் அவற்றிற்குக் காரணம் அவருடைய நடிப்புதான்.
குடிநோயாளியைக் கணவனாகக் கொண்ட துர்ப்பாக்கியவாதியாக சஞ்சனா நடராஜன் நடித்திருக்கிறார்.அவருடைய தோற்றமும் நடிப்பும் அச்சு அசலாக அமைந்திருக்கிறது.
ஜான்விஜய்க்கு இந்தப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம்.அதை முழுமையாக உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
லொள்ளுசபா மாறனின் நகைச்சுவைக் காட்சிகள் மனம்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.
ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத், சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார், அன்பரசி உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி,நிஜ உலகை காண்பித்து காட்சிகளில் ஒன்ற வைக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில்.யோவ் பாட்டிலு உள்ளிட்ட பாடல்கள் கதையின் தன்மையை உணர்த்திச் செல்லும் வகையில் அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
கொஞ்சம் விட்டால் முழுக்க முழுக்க அழுகாச்சி படமாகிவிடும் ஆபத்தை உணர்ந்து படத்தைப் பாதுகாத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இ.சங்கத்தமிழன்.
குடிநோயாளிகளை மீட்டெடுக்கும் மையத்தின் மீது பயத்தை உருவாக்கும் வண்ணம் காட்சிகள் வைத்திருப்பது உள்ளிட்ட சில குறைகள் படத்தில் இருக்கின்றன.
இந்தச் சமுதாயம் நாள்தோறும் மதுவால் எப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை மட்டும் சொல்வதோடு நில்லாமல் அதிலிருந்து மீளவும் வழி சொல்லும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
= இளையகுமார்