தமிழ்த்திரைப்படங்களில் பல விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன.முற்றிலும் புதுவிதமான காதல்கதையுடன், ஒரு பால் காதலை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை.
முற்போக்குச் சிந்தனை கொண்ட ரோகிணியின் மகள் லிஜோமோல். தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார் லிஜோ. அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார். ஆனால், லிஜோ காதலிப்பது ஓர் இளைஞனை அல்ல யுவதியை.அந்தக் காதலை ரோகிணியும் குடும்பமும் ஏற்றதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
மிகவும் மாறுபட்ட வேடமேற்றிருக்கும் நாயகி லிஜோமோல் அதற்கேற்ப நடித்திருக்கிறார்.இயல்பான காதலுக்கே எதிர்ப்பு வரும் எனும்போது இந்தக் காதலுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கும்? அதைச் சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
லிஜோமோல் இணையாக நடித்திருக்கும் அனுஷா புதுவரவு. ஆழமான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ரோகிணியின் நிஜமுகத்துக்கேற்ற வேடம்.ஆனாலும் மகளின் காதலை ஏற்கமுடியாமல் தடுமாறும் நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.லிஜோமோலின் தந்தையாக நடித்திருக்கிறார் வினீத். ஒரு தந்தையாக அந்தச் சிக்கலை மிக நிதானமாகக் கையாள்கிறார்.
லிஜோமோலின் ஆண் நண்பர் வேடத்தில் நடித்திருக்கும் கலேஷ் பொறுப்பாக நடித்திருக்கிறார்.
பணிப்பெண்ணாக நடித்திருக்கும் தீபா, சமுதாயத்தின் கேள்விகளை அப்பாவித்தனமாக வெளிப்படுத்தி இரசிக்க வைத்திருக்கிறார்.
கண்ணன் நாராயணின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு,படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
டேனி சார்லஸின் படத்தொகுப்பு படம் நிதானமாகவும் நேர்த்தியாகவும் பயணிக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் கிருஷ்ணன்,சர்ச்சைக்குரிய திரைக்கதையை இலாவகமாகக் கையாண்டிருக்கிறார்.ஓரினக் காதல்,ஓரினச் சேர்க்கை, ஒரினத்திருமணம் ஆகியன உலக அளவில் விவாதமாகவும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.
அச்சிக்கலை மையப்படுத்தி அதற்கான வழக்குரைஞராக மாறி வாதாடியிருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.கருத்தியல் அடர்த்தி இருந்தாலும் அதைத் திரைமொழியில் சுவாரசியமாகச் சொல்ல முனைந்திருக்கிறார்.
– இளையவன்