சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிகண்டன் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். மொழி தெரியாமல் கதாநாயகியும் சிறப்பான முகபாவனைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை சான்வே மேக்னா, “என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருடனும் இன்னும் 100 படங்கள் நடிக்க விரும்புகிறேன். ஹைதரபாத்திலும் சீக்கிரம் படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் வினோத், “ஹீரோவில் இருந்து இயக்குநர் வரை என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி” என்றார்.

எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால் அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில்தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி”.

இசையமைப்பாளர் வைசாக், “ராஜேஷ் சாருக்கு நன்றி. மக்களிடம் நிச்சயம் நல்ல படமாக போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்த படம் இது. படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இதற்கான பலன் தான் இந்த சக்சஸ் மீட். எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்திற்கு நன்றி”.

திங்க் மியூசிக் சந்தோஷ், ” இந்த வருடம் ஆரம்பித்திருக்கும் போது ‘குடும்பஸ்தன்’ படம் வார்ம் வெல்கமாக வந்திருக்கிறது. மணிகண்டனுடன் எங்களுக்கு நான்காவது படம். தனியிசைக் கலைஞராக இருந்து வைசாக் இசையமைப்பாளராகவும் அருமையாக இசை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் மணிகண்டன், ” இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்த குறுகிய காலத்திலேயே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் வெளியான பின்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பது பெரிய போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.