ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.
‘கூரன்’ படத்தின் இசை வெளியீட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி சிறப்பு விருந்திநராக கலந்துகொண்டார். பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக உள்ள ’கூரன் ’திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், கவிதா பாரதி, ஜார்ஜ், இந்திரஜா, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், பாடலாசிரியர் முத்தமிழ், தயாரிப்பாளர் விக்கி, இயக்குநர் நிதின் வெம்பட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் தோன்றி உள்ள, பைரவா என்கிற நாயும் மேடையேற்றப்பட்டது.
விழா மேடையில் பைரவா நாய் குலைப்பதற்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் மொழிபெயர்த்து பேசினார். மிக வித்தியசாமான இந்த நிகழ்வை அனைவரும் ரசித்தனர்.
நிகழ்வில் பேசிய எஸ்.ஏ.சி. , ”என்னுடைய 45 வருட சினிமா வாழ்க்கையில் முதன்முதலாக வித்தியாசம் என்பதை உணமியாக உணர்ந்த ஒரு படம் கூரன் தான். படத்தை பார்க்கும்போது நீங்களும் இதை சொல்வீர்கள். இந்த படத்தில் நாய் தான் கதாநாயகன். ஒரு ஈ, பாம்பு, யானை என இவையெல்லாம் பழி வாங்குவதையெல்லாம் பார்த்து அதனை ஹிட் படங்களாக மாற்றினோம். இந்த படத்தில் பழிவாங்க நாய் நீதிமன்ற வாசலுக்கு வருகிறது. படத்தில் ஹீரோயின், டான்ஸ் இது போன்ற எதுவும் கிடையாது. இதனால் இது ஒரு வித்தியாசமான படம். படத்தில் நடித்துள்ள பெரும்பாலன நடிகர்கள் வயதானவர்கள். இதுவும் ஒரு வித்தியாசம். நான் மனதை எப்பொழுதும் சந்தோசமாக வைத்திருக்கிறேன்.
இந்தப் படத்தை டெல்லியிலிருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அவர் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார். சில படங்களைப் பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது. திரை எழுத்தாளன் படைக்கும் கதாபாத்திரங்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். இவனைப் போல வாழ வேண்டும் என்கிற மாதிரி முன்னுதாரணமாக அந்தப் பாத்திரம் இருக்க வேண்டும். கத்தி எடு தலையை வெட்டு என்று படம் பார்த்து விட்டு வெளியே செல்கிறவனும் கத்தி எடுத்து கையை வெட்டு, தலையை வெட்டு என்று செய்து கொண்டிருந்தால் இளைய சமுதாயம் என்ன ஆவது? அந்தப் பொறுப்புணர்வு வேண்டும் .சினிமா என்பது சாதாரணமானதல்ல. இந்தப் படத்தில் கத்தி இல்லை; ரத்தம் இல்லை;துப்பாக்கி சத்தம் இல்லை; ஆனால் ஒரு சக்தி வாய்ந்த விஷயம் இருக்கிறது. அதை நாங்கள் சத்தமாகத் தீவிரமாகச் சொல்லாமல் உணர்வுபூர்வமாக யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறோம்.
எனது மனதை பாரமாக வைத்திருக்க விரும்புவதில்லை. நான் வீட்டில் உட்கார நினைப்பதில்லை. காலையிலேயே அலுவலகத்திற்கு வந்து விடுவேன். எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். ஜனவரி மாத குளிரில் படப்பிடிப்பு ஆரம்பித்தோம். கொடைக்கானலில் பயங்கரமாக குளிராக இருக்கும். நடுங்கிக் கொண்டே படப்பிடிப்பிற்கு போவோம்.
அங்கு வேலை செய்ய ஆரம்பித்தவுடன் நடுக்கமும் குளிரும் போய்விட்டது. எனக்கு இப்போது வரை பெரிதாக காய்ச்சல் வந்ததே இல்லை. ஆனால் அங்கு எதிர்பாராமல் வந்துவிட்டது. பின்னர் வேலை செய்ய ஆரம்பித்ததும் அதுவும் சரியாகிவிட்டது. இந்த படத்தின் கதையை சொல்லும் போது அதில் இருக்கும் கன்டெண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எனது 70 படங்களில் 50 படங்கள் மனிதன் தான் நீதிமன்றத்துக்கு செல்வது போன்று எடுத்திருக்கிறேன். ஆனால் இதில் நாய் நீதிமன்றம் செல்கிறது. அது என் செல்கிறது என்பதுதான் எமோஷன். முன்பெல்லாம் இயக்குநர் வேற, எழுத்தாளர் வேற அனைத்திற்கும் தனித்தனி ஆட்கள் இருந்தனர். இப்போது அவ்வாறு இல்லை.
ஒரு எழுத்தாளர் என்று சொன்னாலே அவருக்கென்று ஒரு பொறுப்புணர்வு வேண்டும். ஏனென்றால் நாம் நடிகர்களை தாண்டி இயக்குநர்களையும் கொண்டாடுகிறோம். இப்போது இயக்குநர் தான் எழுத்தாளர். மனிதர்களை பார்த்து உத்வேகம் அடைவது போல படங்களைப் பார்த்தும் உத்வேகம் அடைகிறார்கள்.
சில படங்களை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால் எழுத்தாளன் என்பவன் படம் பார்ப்பவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். கத்தியை எடுத்து கையை வெட்டுவது காலை வெட்டுவது என்பது போல படங்கள் வெளியாகின்றன. இந்த மாதிரியான படங்களை பார்க்கும் இளைய சமுதாயத்தை என்னவாகும். அவர்கள் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு படமும் நல்ல விஷயத்தை ஒரு பாடத்தை எடுக்க வேண்டும்.
அந்த காலத்து படங்கள் அனைத்தும் அவ்வாறுதான் இருந்தது. இப்போதும் நல்ல படங்கள் வருகின்றன. இந்த படத்தில் சண்டை காட்சிகளே இல்லை. ஆனால் சண்டை காட்சி இல்லை என்றால் படம் சொத சொத என்று சாம்பார் போல இருக்கிறது என்பார்கள். ஆனால் நாம் இந்திய சுதந்திரமே அகிம்சை வழியில் தான் பெற்றோம்.
காந்தியடிகளின் அகிம்சை தான் வெள்ளையர்களை துரத்தி அடித்தது. இதுவும் அகிம்சையான படம்தான். ஆனால் பவர்புல்லான படம்.
ஒரு காலத்தில் வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பான் என்று தெரியும். இப்போது வில்லன் செய்யும் அவ்வளவு கெட்ட செயல்களையும் கதாநாயகர்கள் செய்கிறார்கள். யார் வில்லன், யார் கதாநாயகன் என்றே தெரிவதில்லை. படம் பார்க்கும் இளைஞர்களை நாம் எப்படிக் கொண்டு போக வேண்டும்? சினிமா மாதிரி ஒரு பயங்கரமான ஆயுதம் வேறில்லை. அந்த ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினால் இளைய சமுதாயத்தை திருத்த முடியும். இப்போதிருக்கும் இயக்குநர்களுக்கு அந்த பொறுப்புணர்வும் சமூக உணர்வும் வேண்டும். பத்து வருடங்களாக நடிகராக இருக்கிறேன். நான் நடித்ததில் மிக திருப்தியான படம் இதுதான்.
எனக்கு புரொமோஷன் செய்வது பிடிக்காது. அதனால் தான் எனது மகன் விஜய்க்கு கூட புரொமோஷன் செய்யவில்லை. விஜய்காந்துடன் நான் இணைந்த படங்களில் எல்லாம் புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களை தான் பயன்படுத்தினேன். அதற்கு காரணம் படத்தின் வெற்றி எல்லாம் பெரிய கலைஞர்களின் கைகளில் போய்விடும்.
அது அந்த படத்தின் கதாநாயகனின் வெற்றியாக இருக்காது. அதனால்தான் புதுக கலைஞர்களை பயன்படுத்தினேன். இப்படிதான் கதாநாயகனை உருவாக்க முடியும். விஜய்யின் முதல் பத்து படங்களிலும் இதைதான் செய்தேன். அதனால்தான் விஜய் கதாநாயகனாக மக்களிடையே சென்றடைந்தார் என பேசினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குனர் நிதின் வெம்பட்டி, “நான் கதை எழுதிவிட்டு நாய் மாதிரி தான் அலைந்தேன். ஆனால் கனா புரொடக்ஷன் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. ஒரு கம்பனியில் கதை சொன்னேன். நாய் ஒரு மனிதன் மீது வழக்கு பதிவு செய்கிறது என்று கதையை சொல்லி ஆரம்பிக்கும்போது வெளியே போடா இன்று என்னை அனுப்பி விட்டார்கள்.
இராமாயணம் காலத்தில் ஒரு சபையில் நாய் ஒரு வழக்கு கொடுத்து ராமன் அதற்கு நியாயம் வாங்கி கொடுத்தார். இது ஒரு வரலாறு, இதுதான் என்னுடைய எண்ணம். இந்த படத்தில் நாயும், எஸ் ஏ சந்திரசேகர் சாரும் நடிக்கவில்லை. கதையில் வாழ்ந்துள்ளனர்” என பேசினார்.