2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன.
பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ்.
திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்? என்று விசாரணை நடக்கிறது. அதன் முடிவு என்ன? என்பதுதான் சுழல் தொடர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞ்ரும் சமூக ஆர்வலருமான லால், அவரது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்கிறார்.அதோடு, மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குரைஞர் லாலை கொலை செய்ததாகச் சொல்லி 7 இளம் பெண்கள் சரணடைகிறார்கள்.
கெளரி கிஷனுடன் சேர்த்து மொத்தம் 8 பெண்கள் இந்தக் கொலை வழக்கில் சரணடைந்தது ஏன்? உண்மையான கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது இத்தொடர்.
முதல்பாகத்திலும் விசாரணை அதிகாரியாக இரண்டாமிடத்தில் இருந்த கதிர்,இப்போது முதலிடம் பிடித்திருக்கிறார். இன்னொரு ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையில் ஈடுபடுகிறார்.பழகிய வேடம் என்பதால் மிக இயல்பாக நடித்திருக்கிறார்.நுட்பமான முகபாவனைகளில் தன் இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த பாகத்தில் சிறையில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், அங்கிருந்தபடியே அவர் செய்யும் செயல்களும் அவற்றில் அவருடைய நடிப்பும் நன்று.
லால்,சரவணன் ஆகியோர் நடிப்பு பெரும்பலம்.
மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும் தெரிந்தவர்களுக்கு வியப்பையும் தெரியாதவர்களுக்கு யார் இது? என்கிற கேள்வியையும் எழுப்பும் வண்ணம் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப், இது இணையத் தொடர், சின்னத்திரைகளில்தான் மக்கள் பார்ப்பார்கள் என்று எண்ணாமல் பெரிய திரைகளுக்கேற்ப காட்சிகளை வடிவமைத்துப் படம் பிடித்திருக்கிறார்.எனெவே பெரும்பாலான காட்சிகள் பிரமிப்பாக அமைந்திருக்கின்றன.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் இயல்பு.பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.அதனால் சில பல இடங்களில் மிகை இசையை உணர முடிகிறது.
ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பில் எட்டு பாகங்களும் அளவாகவும் வேகமாகவும் இருக்கின்றன.
புஷ்கர் காயத்ரி இணையர் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.சமுதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்தை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு அதைத் திரைமொழியில் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்கியிருக்கும் பிரம்மாவும் கே.எம்.சர்ஜுனும்,ஏற்கெனவே பெயர் பெற்றிருக்கும் இத்தொடரை மேலும் மெருகுபடுத்த உழைத்திருக்கிறார்கள்.
– இளையவன்
குறிப்பு – இத்தொடர் இன்று முதல் அமேசான் பிரைம் இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.