படிக்கும் காலத்தில் இதுதான் பெருமை என்று நினைத்துச் செய்யும் செயல்கள் வாழும் காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கவர்ச்சி ஆகிய இனிப்புகளைத் தடவிக் கொடுத்திருக்கும் படம் டிராகன்.
பனிரெண்டாம் வகுப்பில் 96 விழுக்காடு மதிப்பெண் பெற்று வென்று பொறியியல் படிக்கப் போகும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், பெண்களைக் கவரவேண்டும் என்கிற ஒற்றைக் காரணத்துக்காக படிப்பில் கவனம் செலுத்தாமல் அடாவடிகள் செய்கிறார்.அதன்விளைவு முதலில் படிப்பில் தோல்வி அதன்பின் காதலில் தோல்வி.அதனால் விழிப்படைந்து ஒரு தப்பான செயல் செய்து வேலைவாய்ப்பு, வசதியான வாழ்க்கையுடன் ஒரு பெரும் பணக்காரப் பெண்ணுடன் திருமணம் செய்யும் நிலைக்குப் போகிறார்.அதன்பின் அதிரடித் திருப்பம்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதும்தான் திரைக்கதை.
பொறுப்பான பள்ளி மாணவன்,அடாவடி கல்லூரி மாணவன்,திறமையான வேலைக்காரன்,நேர்மையான இளைஞன் ஆகிய பன்முக வேடமேற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் எல்லா இடங்களிலும் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார்.எதிலும் அழுத்தம் இல்லையெனினும் எல்லாமும் பொருத்தமாக இருப்பது அவருடைய நல்வாய்ப்பு.
நாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.இருவரும் தத்தமது வேடங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு நாயகனாகவே இருக்கிறார் மிஷ்கின்.கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் அவர் அதற்குச் சாலப் பொருத்தமாக இருக்கிறார்.நாயகன் பிரதீப் விசயத்தில் அவர் எடுக்கும் எல்லா முடிவுகளும் அவர் போன்ற மாணவர்களுக்கு நல்ல பாடம்.மற்றோருக்குப் பெருமை.
நாயகனின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான்,இந்துமதி ஆகியோர் பெருமைமிகு பெற்றோர்களின் பிரதிநிதிகள்.
வி.ஜே.சித்து, ஹர்சத்கான் ஆகியோர் வேடங்களை திரைப்படங்களில் மட்டுமே பார்க்கமுடியும்.
கெளதம்மேனன்,கே.எஸ்.ரவிக்குமார், தேனப்பன்,ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வேடங்களும் நடிப்பும் சிறப்பு.
லியோன் ஜேம்ஸ் இசையில் சிம்பு பாடிய பாடல் உட்பட பாடல்கள் கதைக்கேற்ப அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பொருத்தம்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கதாநாயகனின் பண்பு மாற்றங்களுக்கு ஏற்பப் பயணித்து காட்சிகளில் சுவை கூட்டியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்,முதல்பாதியில் இன்னும் கொஞ்சம் கூர்மை காட்டியிருக்க வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, இன்றைய இளம் தலைமுறையின் மனநிலை இப்படித்தான் இருக்கிறதென முடிவு செய்து ஒரு கதையை எழுதியிருக்கிறார்.அது மிகத்தப்பு என்று சுவையான காட்சிகள் மூலம் அழுத்தமாகப் பதிவும் செய்திருக்கிறார்.நல்ல பாடம்.
– அன்பன்