ஆந்திராவிலிருந்து குஜராத் கடல்வரை மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தண்டேல். மணிரத்னத்தின் ரோஜா படத்தில் அரவிந்த் சுவாமியை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டு போய்விட நமக்கு தேசபக்தி பாடம் எடுப்பார்.

அதே போல 30 வருடங்களுக்குப் பின்பு அது போன்ற ஒரு கதையை மீனவர்கள் வாழ்வை வைத்து எடுத்திருக்கிறார்கள். சங்கிகள் இந்திய தேசப்பற்று என்கிற பெயரில் இஸ்லாமிய, பாகிஸ்தானிய எதிர்ப்பை நீட்டி முழுக்கும் இன்னொரு படம். தெலுங்கு சினிமாவில் ஒருபுறம் மூடநம்பிக்கைகளை பிரம்மாண்டம் என்கிற பெயரில் எடுத்துக் கொண்டும் இன்னொரு புறம் இப்படி வெறுப்பை கக்கிக் கொண்டும் நிறைய படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

நாயகன் நாகசைதன்யாவும் நாயகி சாய்பல்லவியும் காதலிக்கிறார்கள்.இந்நிலையில் மீன்பிடிக்கச் சென்ற நாயகன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் சிறைபிடிக்கப்படுகிறார்.அதேநேரம் சாய்பல்லவிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.அவர் சிறை மீண்டாரா? காதலர்கள் இணைந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான் திரைக்கதை.

மீனவர் வேடத்துக்காகத் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் நாகசைதன்யா.அவருடைய நடை உடை பாவனைகளில் அது வெளிப்படுகிறது.காதல் காட்சிகளில் இளமைத் துள்ளல் சிறைக் காட்சிகள் மற்றும் அங்கு நாட்டுப்பற்றுடன் நடந்துகொள்ளும் காட்சிகளில் அதிரடி நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாய்பல்லவிக்கு காதலாகிக் கசிந்துருகுவதும் காதலனுக்காகக் கலங்குவதும் அவனைக் காப்பாற்ற பொங்குவதும் எனப்பல பரிமாணங்கள் கொண்ட வேடம்.அனைத்திலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

தெலுங்குப் படமென்றாலும் தமிழிலும் வெளியிட வேண்டும் என்பதற்காக கருணாகரன்,ஆடுகளம் நரேன்,பப்லு பிரித்விராஜ்,கல்யாணி நடராஜன் என நிறைய தமிழ்நடிகர்களோடு தமிழ்நாட்டுக்கு நன்கு அறிமுகமான ராவ்ரமேஷ் உள்ளிட்ட பலரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஷியாம்தத் ஒளிப்பதிவில் கடற்கரை காதல் காட்சிகள் அழகு,கடல்காட்சிகள் மற்றும் சிறைக்காட்சிகள் சிறப்பு.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

கார்த்திக் தீடா என்பவரின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சந்து மொண்டேட்டி.

உலகத்துக்கே பொதுவான காதலை வைத்துக் கொண்டு ஆந்திர மீனவ மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களது கஷ்டங்கள், போராட்டங்கள்,கடலுக்குள் நடக்கும் நிகழ்வுகள் ஆகிய புதிய அம்சங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பாகிஸ்தான் சிறை மற்றும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் இஸ்லாமியர்கள் மீது கோபத்தை விதைக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

இந்திய நாட்டுப்பற்றை இஸ்லாமிய வெறுப்பின் மூலம்தான் காட்ட வேண்டுமா? உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதை என்று சொல்லிவிட்டு உண்மைக்குக் கொஞ்சமும் கிட்டே வராத,கதாநாயக பிம்பத்தை மேம்படுத்திக் காட்டுகின்ற திரைப்பட மசாலாக்களைச் சேர்க்க வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் சிங்களர்களால் சுடப்படுவதையும் சிங்களச்சிறைகளில் வாடுவதையும் யாராவது படமாக எடுக்கமாட்டார்களா? என்கிற ஏக்கமும் வருகிறது.

– வெற்றி

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.