எதிரெதிர் எண்ணம் கொண்ட இருவர் இல்வாழ்க்கையில் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தினசரி.
மென்பொருள் துறையில் பணியாற்றி கை நிறையச் சம்பளம் வாங்கும் நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு தம்மைவிட வசதியான வீட்டில் பெண்ணெடுத்து வளமாக வாழவேண்டும் என்று ஆசை.அவர் எண்ணத்துக்கேற்ற பெண்ணாக நாயகி சிந்தியா லூர்தே இருக்கிறார்.அவரையே திருமணமும் செய்கிறார்.ஆனால்,திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய ஆசை வேறாக இருக்கிறது.அது நாயகனின் எண்ணத்துக்கு நேரெதிராக இருக்கிறது.அப்புறமென்ன? குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது.அதன் விளைவுகள் என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றைச் சொல்வதுதான் திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த் இளம்கணவர் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.தாம் நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லை என்கிற வேதனை கோபம் ஆகியனவற்றை நடிப்பில் காட்டி வரவேற்புப் பெறுகிறார்.
வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணுக்குரிய அத்தனை அம்சங்களுடனும் இருக்கிறார் நாயகி சிந்தியா லூர்தே. அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டிய வேடத்தைத் துணிவுடன் ஏற்று நிறைவாகச் செய்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத்,முக்கிய வேடமேற்றிருக்கும் சாம்ஸ், சாந்தினி தமிழரசன் மற்றும் ராதாரவி ஆகியோர் இருப்பு இப்படத்தை பெரிய படமாகக் காட்டுவதற்கும் இவர்கள் நடிப்பு படத்தை நல்லபடமாகக் காட்டுவதற்கும் பயன்பட்டிருக்கிறது.
இளையராஜா இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் கேட்கக் கேட்கச் சுகம்.பின்னணி இசை கதைக்களத்துக்குப் பலம்.
ராஜேஷ்யாதவ்வின் ஒளிப்பதிவில் இளமைத்துள்ளலும் திரைக்கதையின் கனமும் ஒருங்கே இணைந்திருக்கிறது.
வசனங்கள் அதிகம் நிறைந்த படத்தை சலிப்பில்லாமல் கொண்டு சென்றுவிட வேண்டும் என்கிற படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்தின் முனைப்பு பலனளித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.சங்கர்.இன்றைய இளம்தலைமுறையினருக்கு தம் மீது வைக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே போவதையும் அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார்.
இரண்டாயிரத்து இளையோருக்கான வாழ்க்கைப் பாடம்.
– இளையவன்