தனுஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.அவருடைய அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக்கி எடுத்திருக்கிறார்.
2கே கிட்ஸ் என்றழைக்கப்படும் இரண்டாயிரத்து இளைஞர்களின் காதல் அனுபவம் அதை எதிர்கொள்ளும் முறை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட கதை.
நாயகன் பவிஷ் காதலில் தோல்வியடைந்தவர்.அவருடைய பெற்றோர் ஆடுகளம் நரேன் – சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் அவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்க்கின்றனர்.அப்பெண் நாயகனின் பள்ளித் தோழி. இருவரும் பேசிப் பழகும் நேரத்தில் முன்னாள் காதலியின் திருமண அழைப்பு வருகிறது.அதன்பின் அவர் பார்த்த பெண்ணை மணந்தாரா? முன்னாள் காதலியுடன் இணைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் திரைக்கதை.
அறிமுக நாயகன் பவிஷ் பார்ப்பதற்கு துள்ளுவதோ இளமை தனுஷ் போலவே இருக்கிறார்.ஆடல் பாடல் காதல் மகிழ்ச்சி சோகம் ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய வேடம்.பல இடங்களில் பாஸ் மார்க் வாங்குகிறார்.சில இடங்களில் இன்னும் மேம்படவேண்டும்.
காதலியாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் மணப்பெண்ணாக வரும் பிரியாவாரியர் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும், இக்கால இளம் யுவதிகளின் பிரதிநிதிகள் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அதை உணர்ந்து இளமைத் துள்ளலுடன் காட்சிகளுக்கேற்ப நடித்துமிருக்கின்றனர்.
மலையாள நடிகர் மேத்யூஸ் தாமஸ் வருகிற காட்சிகள் சிரிப்பாக இருக்கின்றன.
சரத்குமார்,ஆடுகளம் நரேன்,சரண்யா பொன்வண்ணன் ஒரு பாடலுக்கு வரும் பிரியங்கா மோகன் ஆகியோர் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷின் இசையில் எல்லாப் பாடல்களும் வெற்றிப்பாடல்கள்.அவற்றைத் திரையில் காணும்போது கூடுதல் மகிழ்ச்சி.பின்னணி இசையில் அவரும் தன்னை 2கே கிட்டாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்.
லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ணமயமாகவும் கொண்டாட்ட மனநிலையிலும் அமைந்திருக்கின்றன.
ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பில், பழகிய கதைதானே என்கிற உணர்வு வராமல் இருக்கவேண்டும் என்கிற மெனக்கெடல் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ்.அவருடைய உழைப்பில், காட்சிகள் இசை ஒளிப்பதிவு ஆகியனவற்றில் இருக்கும் இற்றைப்படுத்தல் (அப்டேட்) மையக்கதை மற்றும் திரைக்கதையிலும் இடம்பெற்றிருந்தால் இன்னும் பெரிதாகியிருக்கும்.
காதல், திருமணம் ஆகியன குறித்து இன்றைய இளம்தலைமுறை எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்? என்பதைத் திரை மொழியில் சொல்லியிருப்பது படத்தின் பலம்.
– செல்வன்