அப்பா மகன் பாசம் மற்றும் உறவு குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேரும் இந்தப்படத்தில் முந்தைய படங்களில் இல்லாத ஒரு சிக்கல் வைக்கப்பட்டிருக்கிறது.
அரசு அதிகாரி நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர் சமுத்திரக்கனி. அவருடைய மகன் தனராஜ் கொரனானி. அப்பாவுக்கு நேரெதிர்.நிறைய கெட்ட பழக்கங்கள்.ஒரு கட்டத்தில் அப்பாவைக் கொல்ல நினைக்கிறார். அது ஏன்? அவர் நினைத்தது நடந்ததா? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் ராமம் ராகவம்.
அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு இந்த வேடம் மிகப் பழகிய வேடம். அதனால் கொடுத்த வேடத்துக்கு மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.அறிவுக்கும் பாசத்துக்குமான போட்டியை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மகனாக நடித்திருப்பவர் படத்தின் இயக்குநர் தன்ராஜ் கொரனானி.அவரே எழுதிய வேடம் என்பதால் அதை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.இப்படி ஒரு மகனா? மனிதனா? என்று வெறுக்கும்படி நடித்திருப்பது அவருக்குத் தனிப்பட்ட வெற்றி.
தன்ராஜ் கொரனானியின் அம்மாவாக நடித்திருக்கும் பிரமோதினி வேடமும் நடிப்பும் நன்று.
கதாநாயகியாக நடித்திருக்கும் மோக்ஷாவுக்குக் குறைவான வாய்ப்புதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதில் குறை வைக்காமல் நடித்திருக்கிறார்.
படத்தில் மிகவும் கவனிக்கக் கூடிய பாத்திரம் ஹரீஷ் உத்தமனுக்கு.அதில் அனைவரையும் கவரும் வகையில் நடித்திருக்கிறார்.
சத்யா, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பிரித்விராஜ் ஆகியோர் கதாபாத்திரங்கள் படத்தை இலகுவாக்க உதவியிருக்கின்றன.
அருண் சிலுவேறு இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையும் அளவு.
ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத் கதாபாத்திரங்களின் தன்மையைக் காட்சிகளில் வெளிப்படுத்த மெனக்கெட்டிருக்கிறார்.
சிவபிரசாத் யானாலாவின் கதை, மாலியின் வசனம் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் தனராஜ் கொரனானி.
ஒவ்வொருவர் வாழ்விலும் பின்னிப்பிணைந்துள்ள அப்பா என்கிற உறவின் உன்னதத்தையும் உணர்வின் பெருமிதத்தையும் முழுமையாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறார். அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது.
– இளையவன்