அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இது பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது.
இப்படத்தின் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, அதற்கான முன்பதிவு பிப்ரவரி 1ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அஜித் படம் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸ் ஆவதால் அதை பார்க்க ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் விறுவிறுவென டிக்கெட்டுகளை புக் செய்து வருவதால் ரிலீசுக்கு முன்பே விடாமுயற்சி பட வசூல் வேட்டையை தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் முதல் நாள் முதல் ஷோ காலை 9 மணிக்கு திரையிடப்படுகிறது. அதற்கு முன்னதாகவே அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவதால், இங்கிருந்து அங்கு படையெடுக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆக உள்ள முதல் பிரம்மாண்ட படம் அஜித்தின் விடாமுயற்சி தான். இப்படம் வருகிற பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வர உள்ளது.
பிப்ரவரி 6-ந் தேதிக்காக தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 680 காட்சிகளுக்கான முன்பதிவுகள் நடந்துள்ளன. அதன்மூலம் ரூ.10 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல் பிப்ரவரி 7ந் தேதிக்கான முன்பதிவு மூலம் ரூ.3.52 கோடியும், பிப்ரவரி 8ந் தேதிக்கான முன்பதிவு மூலம் 3.81 கோடியும், பிப்ரவரி 9ந் தேதிக்கான முன்பதிவு மூலம் 3.46 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மட்டும் முன்பதிவு மூலம் விடாமுயற்சி திரைப்படம் ரூ.21 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.
இதுதவிர வெளிநாடுகளிலும் 4 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கும் என கூறப்படுவதால் விடாமுயற்சி படம் பிரம்மாண்ட வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.