காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக காதலையும், நட்பையும் சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்திலிருந்து நட்புடன் பழகி வரும் ஜெகவீரும், மீனாட்சி கோவிந்தராஜனும் பருவ வயது வந்தும் அதே நட்புடன் பழகி வருகிறார்கள். ஊர் உலகம், நண்பர்கள் ஏன் ஒரு கட்டத்தில் அவர்களது பெற்றோரே கூட அவர்கள் இருவரும் காதலிப்பதாக நினைக்கிறார்கள்.
ஆனால் ஜெகவீரோ மீனாட்சியின் வழிகாட்டுதலின்படி லத்திகா பாலமுருகனை காதலிக்கிறார். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடியே அந்த காதல் ஒரு முடிவுக்கு வர… கடைசியில் என்ன ஆனது என்பதுதான் சுவாரசியமான கிளைமாக்ஸ்.
புதுமுகம் என்றே தெரியாத அளவில் ஜெகவீரிடம் சரியான நடிப்பை வாங்கி இருக்கிறார் சுசீந்திரன். ஜெகவீரும் தனக்கு எது சரியாக வரும் என்பதைப் புரிந்து கொண்டு நடித்திருப்பத்துடன் தன்னுடைய பலவீனத்தையும் அவர் புரிந்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இதைப் போன்ற பொருத்தமான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அவர் இன்னும் உயரமுடியும்.
மீனாட்சி கோவிந்தராஜனின் அழகு மட்டுமல்ல நடிப்பும் மெருகூட்டப்பட்டு இருப்பது புரிகிறது. இவரைக் காதலியாக மட்டும் அல்ல… இந்தப் படம் பார்த்ததும் ஒரு தோழியாகவாவது வைத்துக்கொள்ள எல்லா இளைஞர்களும் விரும்புவார்கள்.
லத்திகா பாலமுருகனின் அப்பாவித்தனமான முகமும் எண்ணங்களும் அவரை ரசிக்க வைக்கின்றன. தன் காதலின் எல்லா நிலைகளிலும் மீனாட்சி உள்ளே வருவதை அவர் ஒரு கட்டத்தில் அதைப் புரிந்து கொள்வது நம்பகமாக இருக்கிறது.
இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ் போன்றோர் அடிக்கும் லூட்டிகள் படத்துக்கு கலகலப்பை ஏற்படுத்துகின்றன. பின்பாதியில் வரும் சிங்கம் புலி நகைச்சுவைக்கு பயன்பட்டாலும் அவரது பங்களிப்பு கதை ஓட்டத்துக்கு ஒரு வேகத்தடையாக இருப்பதை சொல்லியாக வேண்டும்.
ஜெயபிரகாஷ், வினோதினி தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்கிறார்கள்.
டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்தின் பிளஸ்.
வி.எஸ்.அனந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இளமைத் துள்ளி அனைவரும் அழகாக தோற்றமளிக்கிறார்கள்.
நட்பை ஆராதிக்கும் இந்தப் படத்துக்கு தலைப்பில் ஏன் காதலை வைத்தார் என்பதை இயக்குனர் சுசீந்திரனிடம்தான் கேட்க வேண்டும்.
ஆனால் ஜெகவீர் – மீனாட்சி கோவிந்தராஜனின் நட்பிலும், புரிந்து கொள்ளலிலும் காட்சிகள் மற்றும் வசனத்தை அமைத்திருப்பதில் பரவசப்படுத்தி இருக்கிறார்.
இந்தப் படம் சொல்லும் செய்தி 30 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் விக்ரமனால் சொல்லப்பட்டிருந்தாலும் இன்றைய 2கே கிட்ஸ்க்கு இந்த விஷயம் மிகப் புதியதாக இருக்கும்.
அத்துடன் இளைஞர்களுக்கான படம் என்பதால் எந்த இடத்திலும் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ வசனங்களோ இடம் பெறாமல் பார்த்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.
அந்த வகையில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்க முடியும்.
2கே லவ் ஸ்டோரி – இளமைக் கச்சேரி..!
– வேணுஜி