மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த்,இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.
முழுமையாகத் தயாராகிவிட்ட இப்படம், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் இணைய தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் சசிகாந்த் உடன் ஓர் உரையாடல்…
1.டெஸ்ட் படம் பற்றி..?
சித்தார்த், மாதவன், நயன்தாரா மூன்று பேருக்குமே ஒரு சோதனை வருகிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள்? என்பது தான் மையக் கதை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் யார்? என்பதை உணரக்கூடிய ஒரு தருணம் வாழ்க்கையில் வரும். அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதை தான் இந்தப் படம்.தனித்தனியாக இயங்கும் இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
2.மட்டைப்பந்து விளையாட்டு குறித்த கதையா?
‘டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படம் இல்லை. சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார். அவரது துறையில் அவருக்கு வரும் சோதனையை அவர் எப்படி வெல்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கிறோம்.படத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருந்தாலும், அதன் மூலம் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறோமே தவிர, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துக் கதை சொல்லவில்லை. அதே சமயம், கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தும் போது வழக்கமாக கிரிக்கெட் போட்டியை ஒளிப்பதிவு செய்யும் பிராட்கேஸ்டிங் கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.அந்தக் காட்சிகளை பார்க்கும் போது கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் உணர்வு ஏற்படும். அதற்காக பிரத்யேக குழு ஒன்றை வைத்துப் படமாக்கியிருக்கிறோம்.சித்தார்த்துக்கும் எனக்கும் கிரிக்கெட் ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்திற்காக சித்தார்த் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.
3.நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களை ஒப்பந்தம் செய்தது பற்றி…
நம்மால் இது முடியுமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும், அதைத் துணிந்து செய்வதில் தயக்கம் காட்டுவோம். ஆனால், நம் வாழ்க்கையில் ஒரு சோதனைக்காலம் வந்துவிட்டால் அதில் இருந்து விடுபடுவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் நாம் யார்? என்பதை நமக்கே புரிய வைக்கும். அப்படிப்பட்ட மூன்று கதைகள் பற்றி தான் பேசியிருக்கிறோம். இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.சித்தார்த்திடமும் நயன்தாராவிடம் இந்தப் படம் பற்றிச் சொன்ன உடனே நடிக்கச் சம்மதித்து விட்டார்கள். மாதவன் பல சந்தேகங்களை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு ஏற்ப திரைக்கதையை பல முறை மாற்றியமைத்தேன். இறுதியாக இந்தத் திரைக்கதையைப் படித்துவிட்டுச் சம்மதம் தெரிவித்தார்.
4.அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள்..?
மூவருமே என் தயாரிப்பில் பணிபுரிந்தவர்கள் என்பதால் இயல்பாகப் பழக முடிந்தது.நயன்தாரா முதல் முறை சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். லைவ் ரெக்கார்டிங் மூலம் வசனங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், நடிகர்கள் அனைவருமே ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்பு அதில் எப்படி செய்ய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? என முழுமையான தயார் நிலையில் இருப்பார்கள். மூன்று பேருமே இந்தப் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் பேசப்படும்.
5. நீங்கள் இயக்குநரானது எப்படி?
நான் இயக்குநராக வேண்டும் என்பதற்காகத் தான் திரைத்துறைக்கே வந்தேன். நான் தயாரித்த படங்களில் இருந்து, கதை சொல்லல் உள்ளிட்ட விசயங்களைக் கற்றுக்கொண்டேன். 12 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் படத்தின் கதையை எழுதத் தொடங்கி விட்டேன். ஆனால், ஒவ்வொரு முறையும் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் போது,புதியபடத் தயாரிப்பு வேலைகள் வந்துவிடும்.அதனால் இயக்க முடியாமல் போய்விடும். கொரோனா கொடுத்த நேரத்தில் மீண்டும் இந்தக் கதையை எழுதத் தொடங்கினேன்.இம்முறை நிச்சயம் இயக்கிவிட வேண்டும் என நினைத்தேன்.செய்துவிட்டேன்.
6.இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாதது ஏன்?
ஒடிடியில் நேரடியாகப் படத்தை வெளியிடுவதற்கு காரணம், உலக அளவில் படம் சென்றடைய வேண்டும் என்பதுதான்.இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் அனைவரும் பார்ப்பார்கள்.அதனால், இந்தியாவில் மட்டும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் பார்ப்பார்கள். அதனால், படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும்.அதற்காகத்தான் நேரடியாக ஒடிடியில் வெளியிடும் முடிவை எடுத்தேன்.
– இளையவன்