கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற காலம் மலையேறிவிட்டது என்பதை உரத்துச் சொல்லியிருக்கும் படம் ஜெண்டில்வுமன்.
கணவன் ஹரிகிருஷ்ணன் மீது அன்பாக இருக்கும் மனைவி லிஜோமோல்ஜோஸ்.ஒரு கட்டத்தில் கணவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதைத் தெரிந்தவுடன் கலங்கிப் போகாமல் அனைவரும் அதிரும்படி அதிரடியாகக் கணவரைக் கொலை செய்துவிடுகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்கிறது படம்.
லிஜோமோல்ஜோஸின் அழகைப் பார்த்து மகிழும் ஆண்கள் இப்படத்தில் அவர் செய்யும் செயலைப் பார்த்து பயந்து போவார்கள் என்பது நிச்சயம்.படத்தின் பெயருக்குத் தக்க இருக்க வேண்டும் என்பதற்காக கொலையைச் செய்துவிட்டு மிக இயல்பாக நடந்துகொள்ளும் விதமாக அவர் கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார்கள் அதற்கு மிகப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
ஒரு ஆண் நல்லவன் என்பதற்கு அடையாளம் கடவுள் பக்தி நெற்றியில் பட்டை போடுவது என்று காட்டியிருக்கிறார்கள்.ஆனால் அது ஒரு முகமூடி என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்த வேடத்தை ஏற்று சரியாக நடித்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.அவருடைய கண்களும் முகமும் வேடத்துக்கு மொத்தமாக ஒத்துப்போகின்றன.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, ஆணின் மீது முழுநம்பிக்கை வைக்கும் பெண்கள் எப்படியிருப்பார்கள்? என்பதற்கு எடுத்துக்காட்டான வேடமேற்று நன்றாக நடித்திருக்கிறார்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜீவ்காந்தி சிரிக்க வைக்கிறார்.சண்டைப்பயிற்சி இயக்குநர் சுதேஷ் காவலதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.தாரணி, வைரபாலன் ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையில் கதைக்களத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
சா.காத்தவராயன் ஒளிப்பதிவில் கான்கிரீட் காடுகளும் அதில் வசிக்கும் இறுகிய மனிதர்களையும் உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார்.
இளையராஜா சேகரின் படத்தொகுப்பில் படம் இயல்பாக நடக்கிறது.
இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன், கதாநாயகர்கள்தான் கெட்ட்வர்களாக நடிப்பார்களா? நான் கதாநாயகியைக் கெட்டவராகக் காட்டுகிறேன் என்று காட்டியிருக்கிறார்.அதைச் சமன் செய்ய லாஸ்லியா கதாபாத்திரத்தையும் படைத்திருக்கிறார்.
மனைவி இருக்கும் போது இன்னொரு மாதுவை நாடும் ஆண்களுக்கு எச்சரிக்கை.
– இளையவன்