அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB எழுதி, இயக்கியிருக்கும் படம், நிறம் மாறும் உலகில். இது ஒரு ஆந்தாலஜி வகையிலான படம். நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி.
இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், ரிஷிகாந்த், கனிஹா, ஆதிரா, காவ்யா அறிவுமணி, துளசி, அய்ரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சரவதி, ஹரிநிரமேஷ்கிருஷ்ணன், விஜித், ஜீவா சினேகா, திண்டுக்கல் சரவணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, விஜி சந்திர சேகர், லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் நான்கு கதைகளையும் நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கின்றனர்.
நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது. யோகிபாபு, லவ்லின் சந்திர சேகரிடம் சொல்லும் நான்கு கதைகளில், பாரதிராஜா, நட்டியின் கதைகள் அதீதப் படுத்தியதாக இருக்கிறது. ரியோராஜ் கதை, ஓகே. சாண்டி மற்றும் துளசி நடித்த நான்காவது கதை அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழச்செய்கிறது, .
ஆட்டோ ஓட்டுநரான சாண்டி, உறவுகள் இல்லாமல் தனிமையில் வாழும் இளைஞர். அவருக்கும் காதல் வருகிறது. தனது காதலை ஒரு பணக்கார பெண்ணிடம் வெளிப்படுத்துகிறார். அந்தப் பெண்ணும் காதலை ஏற்கிறார். இந்நிலையில், சாண்டி பிள்ளைகள் இருந்தும் நிர்கதியாக நிற்கும் துளசியை அன்னையாக ஏற்கிறார். அதன் பின்னர் காதலை துறக்கிறார். ஏன், எதற்கு? என்பதை அனைவரும் ஏற்கும் வண்ணம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரிட்டோ JB.
அட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் சாண்டி, துணைக்காக ஏங்கும் போதும், காதலியிடம் கெஞ்சும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். எதிர்பாராத அன்பின் காரணமாக தனது சுயநினைவு முற்றிலும் திரும்பிய நிலையில் துளசி, சிறப்பாக நடித்திருக்கின்றார். இருவரது நடிப்பும் சிறப்பு.
இயக்குநர் இமயம் பாரதிராஜா, வடிவுக்கரசி தம்பதியினர் வாழ்ந்தால் இவர்களைப்போல் வாழவேண்டும் என்பதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறனர்.
ரியோராஜ் மூலம், வாழ்வின் எந்த கஷ்டம் வந்தாலும், தவறான வழியில் சென்றால் அதன் விளைவும் தவறானதாக தான் இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார்.
நட்டி தனது வழக்கமான நடிப்பின் மூலம் தியாகம் செய்யும் கதாபாத்திரமாக அசத்துகிறார்.
கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையினையும், வெவ்வேறு களங்களாக ஒளிப்பதிவு வேறுபடுத்தி காட்டுகிறது.
‘நிறம் மாறும் உலகில்’, சுவாரசியம் குறைவான, வழக்கமான, அதீதப்படுத்தப்பட்ட கதைகளின் தொகுப்பு!