மர்மர் திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன். இவர், ஒரு பிசியோதெரபி டாக்டர். அறிமுக இயக்குநரான இவர், தமிழ் திரையுலகின், முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ், ஹாரர் திரைப்படம், என்ற வகையில், மர்மர் படத்தினை எழுதி, இயக்கியிருக்கிறார்.

ஃபவுண்ட் ஃபுட்டேஜ்(Found Footage) என்பது, ஏற்கனவே எடுக்கப்பட்ட டாக்குமெண்டரி வீடியோக்களின் தொகுப்பு. 1980ல் வெளிவந்த கேனிபல் ஹோலோகாஸ்ட்(Cannibal Holocaust) என்ற திகில் திரைப்படமே இவ்வகையான படங்களின் முன்னோடி ஆகும். இதைத் தொடர்ந்து தி ப்ளேர்விட்ச் பிராஜக்ட், பாரா நார்மல் ஆக்டிவிட்டி போன்ற ஹாலிவுட் படங்கள் இதே பாணியில் வெளிவந்த வெற்றிப்படங்களாகும்.

Found Footage என்பது, ஒரு விஷயத்தை ஆராயப் போன குழுவில் அனைவருமே இல்லாமல் போய்விட, அந்த வீடியோ ஃபுட்டேஜ் மட்டுமே கிடைக்கப் பெற, அதை பார்க்கும் போது நடந்த திகிலான விஷயம் அந்த வீடியோவில் படம்பிடிக்கப்பட்டிருப்பது என்பதாக இந்தக் கதைகள் அத்தனையும் அமையும்.
இப்படங்களில் முக்கியமாக நிஜத்தில் வீடியோ கேமராவில் வீடியோ எடுத்தபடி ஆட்கள் செல்வது போன்றதான காட்சிகள் இடம்பெறும். அதுவே அந்த திகிலான விஷயங்களை நேரே பார்வையாளர் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.

தமிழில் வெளிவந்திருக்கும் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரைப்படமான இந்த மர்மர் படத்தில், ரிச்சி, தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜேசன் வில்லியம்ஸ், ஒளிப்பதிவினை செய்திருக்க, ஒலி வடிவமைப்பினை, கெவின் ஃபிரடெரிக் செய்திருக்கிறார். படத்தொகுப்பினை ரோஹித் செய்திருக்கிறார்.

 
‘எஸ்.பி.கே. பிக்சர்ஸ்’ சார்பில், பிரபாகரன் மற்றும் ‘ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

தமிழ்த் திரையுலகில் புதியவர்களின், புதுமையான முயற்சிக்கும், வித்தியாசமான படைப்புகளுக்கும் வரவேற்பும், ஆதரவும் கொடுத்துவரும், ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ இப்படத்தினை வெளியிட்டுள்ளது.

ஹாரர் திரைப்படமான மர்மர், வித்தியாசமான அனுபவத்தினை கொடுத்ததா? பார்க்கலாம்.

‘ஜவ்வாது மலை’, கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் வரிசையில் உள்ள ஒரு மலை. இம்மலையில் பல குக்கிராமங்கள் உள்ளன. கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில், கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. அதாவது இறந்த உடல்களை புதைத்ததற்கான இடங்கள். இந்த பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் வெகு குறைவு. அப்படியான அந்த ஜவ்வாது மலைக்கு, அங்குள்ள அமானுஷ்யமான  விஷயங்களை பதிவு செய்வதற்காக யூடியூபர்ஸ் டீம் ஒன்று செல்கிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் ‘மங்கை’ எனும் சூனியக்கார பெண் ஆவி குறித்த விஷயங்களை ஆவணப்படுத்த முயற்சி செய்கின்றனர். இரவு நேரத்தில் வெகு நேரம் முயற்சி செய்தும், எந்த ஆவியும் வரவில்லை. அதனால் ஓஜா போர்டு மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர். அப்போது, சூனியக்காரி மங்கை வந்து விடுகிறாள். தன் பிறகு, யூடியூபர்ஸ் டீமில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், மர்மர் திரைப்படத்தின் கதை.

படத்தில் நடித்த ரிச்சி, தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகிய அனைவருமே சிறப்பான பங்கினை அளித்திருக்கிறார்கள்.

முதலில் ஒரு மாதிரியாக ஆரம்பிக்கும் கதை,  போக போக சூடு பிடிக்கிறது. க்ளைமாக்ஸ் வரை என்ன நடக்குமோ, என ஒரு வித திகிலுடனேயே படம் பார்க்க வேண்டியிருக்கிறது.

மர்மர் படத்தில், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ்சின் பங்கு, பாராட்டுக்குரியதாக இருக்கிறது. இயற்கையில் கிடைத்த வெளிச்சம் கொண்டும், கேம்ப் ஃபயரில் கிடைக்கும் வெளிச்சம் கொண்டும், இருட்டு நேரத்தில், மிரளும் படியான காட்சிகளை படம்பிடித்து மிரட்டியிருக்கிறார்.

அதேபோல், காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் மிரள்வதற்கு, கெவின் ஃபிரடெரிக்கின் ஒலி வடிவமைப்பு, சிறப்பாக அமைந்திருக்கிறது. இவர்கள் இருவரின் பங்கும் படத்தின் பலம், என்று சொல்லலாம்.

அடுத்து படத்தொகுப்பாளர், ரோஹித். சிறப்பான எடிட்டிங்.

குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அது பெரிதாக இல்லை.

அமானுஷ்யப் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கும், புதுமையான படங்களை விரும்புவர்களுக்கும் ‘மர்மர்’ திரைப்படம் பிடிக்கும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.