உலகமே நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கிறது.தனக்கு என்ன தேவை என்று எண்ணாமல் பக்கத்து வீட்டுக்காரன் என்ன செய்கிறான்? எதிர் வீட்டுக்காரன் என்ன வாங்குகிறான்? என்று பார்ப்பதும், தொலைக்காட்சி மற்றும் இணையங்களில் குவியும் ஆடம்பரப் பொருட்களின் விளம்பரங்களின் மீதான மயக்கமும் ஒரு நல்ல மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம் ராபர்.

கிராமத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபடும் நாயகனுக்கு சென்னையில் ஒரு வேலை கிடைக்கிறது.வேலையில் சேர்ந்து ஒரே தாயை மகிழ்வோடு வைத்திருக்கலாம் வாழ்க்கையில் முன்னேற வழிபார்க்கலாம் என எண்ணாமல் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னையிலும் வழிப்பறியில் ஈடுபடுகிறார்.அதனால் ஓர் அநியாய மரணம்,திருட்டுக்கூட்டாளியோடு பகை ஏற்படுகிறது.அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை விவரிப்பதுதான் திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மெட்ரோ சத்யா, ஏற்றுக் கொண்ட எதிர்மறை வேடத்துக்கு மிகப் பொருத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.பெரும்பாலான காட்சிகளில் முகத்தை மூடிக்கொண்டிருந்தாலும் அகத்தைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், மிகப் பெரும்பான்மை தாய்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.மிக இயல்பாக நடித்து கலங்க வைக்கிறார்.

ஜெயப்பிரகாஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகக் கொடுமையானது.அதை பார்வையாளர்கள் உணரும்படி நடித்திருக்கிறார்.டேனிபோப்,சென்ராயன் ஆகியோரும் சரியாக நடித்திருக்கிறார்கள்.

என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னை நகரமே புதிதாகத் தெரிகிறது.செய்திகளில் பார்க்கும் கண்காணிப்புக் கருவிகளின் காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் வழிப்பறிக் காட்சிகளைப் பதிவு செய்து பதறவைக்கிறார்.

ஜோகன் சிவனேஷ் இசையில் அந்தோணிதாசன் இடம்பெறும் பாடல் சிறப்பு.பின்னணி இசையில் பதட்டத்துக்குப் பதட்டம் கூட்டியிருக்கிறார்.

கதை திரைக்கதை எழுதியிருக்கும் ஆனந்த கிருஷ்ணன், நாம் எவ்வளவு ஆபத்தான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லியிருக்கிறார்.ஒருவனின் தன்னலம் மற்றும் தன்சுகம் ஆகியன சமுதாயத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதைப் புறவகையிலும் சாதாரண இளைஞன் சிறிதும் மனிதாபிமான இல்லாத கொடூரமானவனாக எப்படி மாறுகிறான்? என்கிற அக மாற்றத்தையும் அழகாக எழுதியிருக்கிறார்.

இயக்கியிருக்கும் எஸ்.எம்.பாண்டி, எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயமாக உழைத்து நேர்த்தியான படத்தைக் கொடுத்திருக்கிறார்.

தன்னலவெறியின் ஆபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி விழிப்புணர்வூட்டும் படம்.

– ஆநிரையன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.