மதுரைக்குள் ஓர் ஊர்.அங்கு பெரிய திருவிழா.அன்றிரவு அவ்வூரின் பெரும்புள்ளிகளான பிரிதிவிராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமுடு ஆகியோரை சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா. அதே ஊரில், மனைவி துஷாரா விஜயன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் நாயகன் விக்ரம்.தன் மகனைக் கொல்ல நினைக்கும் எஸ்.ஜே.சூர்யாவைக் கொல்லவேண்டும் என்று விக்ரமை நாடி வருகிறார் பிரிதிவிராஜ்.
ஊர்ப்பெரும்புள்ளிகளைக் கொல்ல எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுவது ஏன்? விக்ரம் யார்? அவர் எஸ்.ஜே.சூர்யாவைக் கொன்றாரா? என்ன நடந்தது? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் வீரதீரசூரன்.
மளிகைக்கடைக்காரருக்குரிய அத்தனை அம்சங்களுடனும் அறிமுகமாகிறார் விக்ரம்.துஷாராவிஜயனோடு கொஞ்சல் காட்சிகளில் இளமை துள்ளுகிறது. குழந்தைகளிடம் பாசம் காட்டும் காட்சிகள் பொறுப்பு மின்னுகிறது. அவரைத் தேடி பிரிதிவிராஜ் வந்தவுடன் விஸ்வரூபம் எடுக்கிறார்.சண்டைக்காட்சிகளில் விசில் பறக்கிறது.உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கட்டுமஸ்தான உடலோடு காவல்நிலையத்துக்குள் நடந்துவரும் காட்சி, வந்தவுடன் செய்யும் அதிரடி அட்டகாசம்.தாதாக்கள் மற்றும் காவல்துறை ஆகிய இருதரப்பும் குடும்பத்தைக் காட்டி மிரட்டும்போது அதை எதிர்கொள்ளும் திடத்தை நடிப்பில் வெளிப்படுத்தி சிறப்பு பெறுகிறார்.
துஷாரா விஜயனின் பாத்திரப்படைப்பும் அதில் அவர் நடிப்பும் அருமை.
காவல்துறை கண்காணிப்பாளராக வரும் எஸ்.ஜே.சூர்யாவால் அந்த வேடத்துக்குப் பெருமை.பல வருடக் கோபத்தை அடக்கமாக அதேசமயம் அழுத்தமாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெரியவராக நடித்திருக்கும் தெலுங்குநடிகர் பிரிதிவிராஜ் அவர் மக்னாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சுராஜ்வெஞ்சரமுடு ஆகியோர் மனம் பதற வைக்கும் வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் திருவிழா நடக்கும் ஊரின் இரவுகாட்சிகள் அதற்கேற்ற ஒளியமைப்புடன் அமைந்திருக்கின்றன.திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தைக் காட்சிகளிலும் கொண்டு வந்திருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.பின்னணி இசை மூலம் காட்சிகளின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னாவின் உழைப்பில் படம் வேகமாக நகர்கிறது.
சண்டைப்பயிற்சி இயக்குநர் போனிக்ஸ் பிரபுவின் திட்டமிடலும் செயலாக்கமும் அபாரம்.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.யு.அருண்குமார், பரபரப்பான ஆக்ஷன் படத்தின் அடிநாதமாக குடும்பப்பாசத்தை வைத்திருப்பது பலம்.நாயகன், வில்லன், காவல்துறை அதிகாரி ஆகிய எல்லோருமே குடும்பத்துடன் பாசமாக இருப்பது போன்ற காட்சிகளால் சண்டைக்காட்சிகள் வரும்போதெல்லாம் படபடப்பு ஏற்படுகிறது.ஒரே வசனம் பல இடங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் வண்ணம் எழுதியிருப்பது புத்திசாலித்தனம்.விக்ரம் துஷாராவிஜயன் திருமணம் உட்பட பல நுட்பமான செய்திகள் படத்தில் இருக்கின்றன.
படத்தின் முதல்காட்சியில் வரும் பெண்மணியும் குழந்தையும் கடைசிக்காட்சியிலும் வருகிறார்கள்.அதன் மூலம் பல காட்சிகளை உணரவைத்திருக்கிறார் இயக்குநர்.தான் செய்த வேலை பாவச்செயல் என்று நாயகனைப் பேசவைத்திருப்பது நன்று.
வீரதீரசூரன் – விக்ரமின் விஸ்வரூபம்
– கதிரோன்