வின்னர், கிரி,தலைநகரம் போன்ற படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி யும் நடிகர் வடிவேலுவும் இணைந்திருக்கும் படம் கேங்கர்ஸ்.
ஊரில் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பல் பள்ளி மாணவ மாணவியரையும் கடத்துகிறது.இதனால் அந்தப் பள்ளி ஆசிரியை காவல்துறையில் புகார் அளிக்கிறார்.காவல்துறை இரகசியமாக புலனாய்வில் ஈடுபடுகிறது.அவர்கள் யார்? அவர்கள் என்ன கண்டுபிடிக்கிறார்கள்? என்பதையெல்லாம் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறது படம்.
உடற்பயிற்சி ஆசிரியர் வேடமேற்றிருக்கும் சுந்தர்.சி அதிரடி நாயகனாக வலம் வருகிறார்.சண்டைக்காட்சிகளில் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறார்.காதல் மற்றும் பாடல் காட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பது பலமாக அமைந்திருக்கிறது.சுந்தர்.சி யார்? என்பதையே இரகசியமாக்கி அதை விடுவிடுத்திருப்பது நல்ல உத்தி.
வடிவேலு விதவிதமான தோற்றங்களில் வருகிறார்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இரசித்து நடித்திருக்கிறார்.பெயர் மாற்றிக் கூப்பிடும் காட்சி நற்சான்று. அங்கங்கே தொய்வு இருந்தாலும் மொத்தமாகப் பார்க்கையில் மீண்டும் வந்துட்டாரய்யா! வந்துட்டாரய்யா!
நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசா நல்லழகு.காதல், பாடல், நடிப்பு என எல்லா இடங்களிலும் கவர்கிறார்.
வாணிபோஜனுக்கு குறைந்த வாய்ப்பு என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.அவர் வரும் காட்சிகளும் நன்று.
நாயகன் குழுவில் இருக்கும் பக்ஸ், முனீஸ்காந்த்,விச்சு, மற்றும் சந்தானபாரதி ஆகியோரும் வில்லன் குழுவில் இருக்கும் அருள்தாஸ்,ஹரீஷ் பெரோடி, காளை மற்றும் மைம்கோபி ஆகியோரும் படத்தின் தலைப்புக்காகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களும் அந்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
சி.சத்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இரசிக்கும் இரகம்.பின்னணி இசையில் படத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
படம் முழுக்க வண்ணமயமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே செயல்பட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி.
படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி இன்னும் கொஞ்சம் சிந்தித்து உழைத்திருக்க வேண்டும்.
எழுதி இயக்கியிருக்கும் சுந்தர்.சி,மக்களைச் சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
– இளையவன்