ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற திரைக்கதை என்றாலே சுறுசுறுப்பு இருக்கும். ஓடும் பேருந்து, தொடர் கொலைகள், அவை தொடர்பான விசாரணை,இவை அனைத்தும் பத்து மணி நேரத்துக்குள் என்பதால் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் படம் டென் ஹவர்ஸ்.
சிபிராஜ் காவல்துறை ஆய்வாளர். சேலம் பக்கம் கள்ளக்குறிச்சியில் பணியாற்றுகிறார்.நீதிக்காக பின்னிப் பெடலெடுக்கும் கண்டிப்பான அதிகாரி.அவர், ஐயப்பன் மலைக்கு மாலை போட்டு இரவு கிளம்புகிறார்.அந்நேரத்தில் ஓர் இளம்பெண் காணாமல் போன புகார் அதைப் பற்றி விசாரிக்கும்போதே சென்னையிலிருந்து கோவை செல்லும் ஒரு தனியார் சொகுசு பேருந்துக்குள் ஒரு சிக்கல். அதை விசாரிக்கப்போனால் அங்கொரு கொலை.அதோடு அடுத்தடுத்து சில கொலைகள்.அவை எதனால்? ஏன்? என்பனவற்றிற்கான விடைதாம் படம்.
காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சிபிராஜ்.எந்த இடத்தில் சிந்தனை? எந்த இடத்தில் செயல்? எப்போது அதிரடி? என்று திரைக்கதையில் இருக்கும் விசயங்களை நடிப்பில் அழகாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.கதாநாயகி மற்றும் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத குறையைத் தனி ஆளாக நிவர்த்தி செய்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ்,மருத்துவராக வரும் ஜீவாரவி மற்றும் முருகதாஸ்,உதயா, திலீபன் உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.தங்கதுரையின் நகைச்சுவைக் காட்சிகளும் நன்று.
முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கேற்ற ஒளியமைப்பு மூலம் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்த்து காட்சிஅனுபவம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய்கார்த்திக்.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கேற்ப இசைந்திருப்பதால் காட்சிகளின் திக்திக் நெஞ்சுக்குள் எதிரொலிக்கிறது.
இளையராஜா கலியபெருமாள் எனும் புது இயக்குநர் எழுதி இயக்கியிருக்கிறார்.பத்து மணி நேரத்துக்குள் நடக்கும் கதைக்குள் இவ்வளவு விசயங்களைச் சொல்லிவிட முடியுமா? என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். வழக்கமான கதைதானே என்றெண்ணி எந்த இடத்திலும் சாய்ந்து உட்கார்ந்துவிட முடியாதபடி படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.இரண்டாம்பாதியில் இருக்கும் சிற்சில தொய்வுகளையும் கதையில் இருக்கும் சமுதாயப் பார்வை மறக்கச் செய்துவிடுகிறது.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பவர் என்று பெயர் பெற்றிருக்கும் சிபிராஜ்,இந்தப்படத்திலும் அதை உறுதி செய்திருக்கிறார்.அதோடு இன்னொரு லோகேஷ் கனகராஜையும் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
– அரவிந்த்