அம்மாவைப் பிரிந்து வாழும் தங்கள் தந்தையுடன் மூன்று சகோதரர்கள் வசிக்கிறார்கள். குழந்தைகளை தனியே வளர்க்க சிரமப்படும் பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சிறுவர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், இச் சிறுவர்களின் ஏக்கங்களை புரிந்துக் கொண்டு அவர்களது தந்தை மாறினாரா? இல்லையா?, என்பதே நாங்கள்’ படத்தின் கதை.
மூன்று சிறுவர்களின் தந்தையாக நடித்திருக்கும் அப்துல் ரஃபே, சிறுவர்களிடம் காட்டும் கண்டிப்பின் மூலம் வில்லனாக தெரிந்தாலும், தனது தோல்வியை நினைத்து துவண்டு போகும் காட்சிகளிலும், மீண்டும் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் பேசும் காட்சிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்க்கிறார். இறுதியில் தனது பிள்ளைகளுக்காக தனது லட்சியத்தை கைவிடும் போது நாயகனாக நம் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
மூன்று சகோதரர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் அதிகம் பேசவில்லை என்றாலும், அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தந்தை மீது இருக்கும் பயத்தினால் எப்போதும் சோகமாகவே இருப்பவர்கள், தந்தை தன்நிலை மறந்து செய்யும் செயல்களில் மகிழ்ச்சியடைந்து சிரிக்கும் இடங்களில் கூட அளவாக நடித்து கைதட்டல் பெறுகிறார்கள்.
சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த், தாத்தாவாக நடித்திருக்கும் ஷாப் ஜான் எடத்தட்டில் மற்றும் கேத்தி என்ற நாய் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் அவர்களது திரை இருப்பு திரைக்கதை ஒட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் வேத் சங்கர் சுகவனத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களம் மற்றும் காட்சிகளில் இருக்கும் இருக்கமான சூழ்நிலையை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் கையாண்டுள்ளார். கதைக்களம் ஊட்டி என்றாலும், அதன் அழகைவிட கதாபாத்திரங்களின் உணர்வுகளை காட்சிப்படுத்திய விதம் பாலுமகேந்திராவை நினைவுப்படுத்துகிறது. அதேபோல், விறுவிறுப்பில்லாத காட்சிகளாக இருந்தாலும், அதை தனது படத்தொகுப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதில் சிறந்த படத்தொகுப்பாளராகவும் கவனம் ஈர்க்கிறார்.
சிறுவர்களின் வாழ்க்கையை சொல்கின்ற படம் போல் கதை ஆரம்பித்தாலும், அவர்களது தந்தையின் கதாபாத்திரம் மூலம் திரைக்கதை வேறு பாதையில் பயணித்து, சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், தெளிவான தீர்வை சொல்லாமல் எதிர்பார்த்த பார்வையாளர்களை இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் ஏமாற்றி விடுகிறார்.
உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், அதை சாமானியர்கள் புரிந்துக் கொள்வது போல் சொல்ல வேண்டும், அது தான் திரைப்படத்தின் பலம். ஆனால், இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், ராஜ்குமார் கதாபாத்திரம் போல் வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு மட்டுமே புரியும்படியும், படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியும் திரைக்கதையை கையாண்டுள்ளார்.