E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி, இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மைம் கோபி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் எஸ்ஏ சந்திரசேகர், ஆர்.வி உதயகுமார், தங்கர் பச்சான், கரு பழனியப்பன், வசந்த பாலன், திருமலை, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசும்போது,
“இங்கே இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தவர்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ரசித்திருப்பீர்கள். ஆனால் ஒரு பானை சோற்றையும் ருசிக்கும் வாய்ப்பு சீமானுக்கும் கவிஞர் சினேகனுக்கும் எனக்கும் கிடைத்தது. ஒரு அறிமுக இயக்குநர் தனது படைப்பு இந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதே அருமையான விஷயம். அதற்காக இயக்குநர் சிவபிரகாஷை பாராட்டியே ஆக வேண்டும். பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவர் என்பதால் இது குறித்து ஆச்சரியப்படவும் தேவையில்லை. சில சமயம் நாம் ஒரு கணக்கு போடுவோம்.. ஆனால் காலம் அந்த கணக்கை மாற்றும். காரணம் விஜித்தை தங்கர் பச்சான் தான் அறிமுகப்படுத்தவதாக படம் எடுத்தார். ஆனால் காலம் இந்த படத்தின் மூலமாக அவரை அறிமுகப்படுத்த வைத்திருக்கிறது. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு புதுமுக நடிகருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமைவது என்பது பெரிய விஷயம். இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜித். முதல் படம் என்றாலும் இதில் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அருமையாக கொடுத்திருக்கிறார் விஜித். எப்படி மண்வாசனை படத்தில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்த பாண்டியனை துணிந்து பாரதிராஜா அறிமுகப்படுத்தினாலும் அந்த கதாபாத்திரத்தின் மூலமாக மக்களிடம் மனதில் ஒட்டிக் கொண்டார் பாண்டியன். அதன் பிறகு 85 படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதேபோன்று ஒரு அறிமுகத்தை தான் இந்த படத்தில் இயக்குநர் சிவப்பிரகாஷ் விஜித்திற்கு கொடுத்துள்ளார். காலம் காலமாக ஒவ்வொரு படத்திற்கும் இளையராஜா எப்படி தனது இசையால் உயிரூட்டுவாரோ அதேபோல இந்த படத்திற்கும் செய்திருக்கிறார். இந்த படம் நிறைவாகவே வந்திருக்கிறது” என்றார்.
இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பேசும்போது,
“தங்கர் பச்சானின் படங்களை திரைப்படங்களாக இல்லாமல் காவியங்களாக தான் நான் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர் தன் பையனை அறிமுகப்படுத்த நினைக்கும் போது அவரை நிறைய செதுக்க வேண்டும். அந்த பொறுப்பை இன்னொரு இளைஞரிடம் ஒப்படைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நான் கூட அதைத்தான் நினைத்தேன் நடக்கவில்லை. 90களில் நான் பிஸியாக இருந்தபோது என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட சமயத்தில் நாமே டைரக்ட் செய்தால் நன்றாக இருக்காது நினைத்து விஜய்யின் ஆல்பத்தை வைத்துக்கொண்டு எத்தனையோ இயக்குநர்களிடம் போய் நின்றேன். ஆனால் தாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி தான்.. நீங்களே டைரக்ட் செய்யுங்கள் என்றார். வேறு வழியின்றி நானே அந்த படத்தை இயக்கினேன். இளைஞனாக தன் மகன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் போய் நன்கு ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அவரை இன்னொரு இளைஞன் தன் படத்தில் இயக்கினால் தான் சரியாக இருக்கும் என நினைக்கும் தங்கர் பச்சான் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்துள்ளார்.
அந்த இயக்குநர் முதலில் வெற்றி பெற வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால் வெற்றி அடைந்து விட்டார் என படம் பார்த்து சிலர் கூறினார்கள். நடிகர் விஜித் இந்த திரையுலகத்தில் ஒரு மிகப்பெரிய கலைஞனாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படத்தின் டைட்டில் சொல்லும் கதை என்னுடைய பார்முலா தான். என்னுடைய குணாதிசயமும் கூட. அன்புக்கு அடிமையாக இருப்போம்.. அடக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்.. எங்கள் கோபத்தை எங்கள் அலையை அடக்க முடியாது.. வருகின்ற இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கவேண்டும் என சொல்லிக் கொண்டே வருகிறேன். சினிமா என்பது பயங்கரமான ஆயுதம். வலிமையான ஆயுதம். சமூகத்தில் அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதை ரொம்ப ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.. இப்போது படம் ஓட வேண்டும் என்று பார்க்கிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என யாரும் நினைப்பதில்லை.. பணம் சம்பாதிப்பது மட்டுமே சினிமா இல்லை” என்று கூறினார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,
“ஒரு படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக போராடி செலவு செய்த தயாரிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களைப் பெற்ற இயக்குநர்கள் பாக்கியசாலிகள். இன்று ஒரே படம் போல பத்து படம் வெளியே வருகிறது. இப்போதைய படங்களில் அழகியல் என்பது வருவதில்லை. ஒரு காலத்தில் மிக தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து பெயர் பெற்ற ஹீரோக்கள் எல்லாம் இன்று கமர்சியல் என்கிற வட்டத்திற்குள் புகுந்து விட்டார்கள். இந்தப் படத்தின் கதையைக் கேட்தில் தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னார். அப்படி என்றால் நீ ஜெயித்து விட்டாய்” என்று கூறினார்.
நடிகர் மைம் கோபி பேசும்போது,
“இந்த படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை சரியாக செய்திருக்கிறேன் என்றால் அந்த புகழ் இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு மட்டுமே சேரும். ஒருவேளை சரியாக பண்ணவில்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த குறை என்னுடையதுதான். மிக அழகான நேர்த்தியான கதை. நகரத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் இந்தக் கதையில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களை பார்க்கும்போது இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. நான் எடுத்துள்ள ஒரு படத்திற்கும் எனது காட்சிக்கும் இசைஞானியின் இளையராஜாவின் இசை பின்னணியில் ஒலித்திருக்கிறது என்பது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்று கூறினார்.
இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது,
“அழகி படம் பார்க்கும்போது எப்படி இருந்ததோ அதேபோல இந்த படம் பார்க்கும்போதும் மண் சார்ந்த ஒரு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் இது சென்றடையும். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெய கிருஷ்ணா , அவரது மனைவி காமாட்சி ஜெயகிருஷ்ணா நல்ல நல்ல படங்களை தேடி கண்டுபிடித்து தயாரிக்கும் பணியை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்” என்று கூறினார்.
கவிஞர் சினேகன் பேசும்போது,
“இந்த படத்தை அண்ணன் சீமானுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு தங்கர் பாச்சனுக்கு நன்றி. காலம் காலமாக அவரவர் ஜாதியை அவரவர் கொண்டாடினாலும் பொதுவெளியில் ஜாதிக்கு எதிரானவன் போல தன்னை சித்தரித்துக் கொள்வதில் எல்லாம் முனைப்பாக இருக்கிறார்கள். அந்த முனைப்பில் ஒரு சதவீதம் உண்மையாக இருந்திருந்தால் கூட இந்நேரம் மிகப்பெரிய ஒரு தீர்வு கிடைத்திருக்கும் என்கிற ஆதங்கம் எல்லா படைப்பாளனுக்குள்ளும் இருக்கிறது. இந்த பெரிய யுத்தத்தின் தொடர்ச்சியாக தான் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தை நான் பார்க்கிறேன். ஜாதிக்கு எதிரான படம் என்றாலும் கூட இது போய் முடியும் இடத்தில் ஒரு ஜன்னலையோ கதவையோ பார்வையாளனுக்கு திறந்து வைக்கும்” என்று கூறினார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது,
“சில திரைப்படங்கள் வெற்றியடையும்போது வியாபார ரீதியாக சினிமா நன்றாக இருக்கும். ஒரு படைப்பாளனாக சிவப்பிரகாஷ் மாதிரியான இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும்போது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற பழிவாங்கும் திரைப்படங்களை நான் பண்ணி இருந்தாலும்,
இந்த பேரன்பும் பெருங்கோபமும் படத்தில் பழிவாங்கும் தன்மை, கிளைமாக்ஸ் என்னை உலுக்கி விட்டது. இதுவரை அப்படி ஒரு கிளைமாக்ஸ் நான் பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதுடன் தாக்கத்தையும் ஏற்படுத்தும். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.
நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேசும்போது,
“இந்த படத்தின் மேடையை பார்க்கையில் எனக்கு என்னுடைய முதல் படமான ஆரோகணம் தான் ஞாபகம் வருகிறது. அந்த மேடையில் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். அதேபோன்ற அதிர்வு இந்த மேடையில் எனக்கு தெரிகிறது. சுசீந்திரன் போன்ற திறமையான இயக்குநர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் கிளைமாக்ஸ் பற்றி இவ்வளவு சிலாகித்து பேசும்போது இந்த படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பாகவே ஏற்படுகிறது. இதுதான் மக்களுக்கு பிடிக்கும் என இடையில் இருப்பவர்கள் முடிவு செய்யாமல் எல்லா படங்களையும் மக்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை உருவாக்க முடிந்தால் மிகப்பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
நடிகர் அருள்தாஸ் பேசும்போது,
“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி உருவானால் எப்படி ஒரு சந்தோஷம் இருக்குமோ, அது போல தம்பி இயக்குநர் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கி இருப்பது சந்தோஷத்தை தருகிறது” என்று கூறினார்
நடிகை தேவயானி பேசும்போது,
“விஜித்தை சின்ன குழந்தையில் இருந்து பார்த்து வருகிறேன். அவரது தம்பி குழந்தையாக நட்சத்திரமாக அழகி படத்தில் என்னுடன் நடித்திருக்கிறார். இப்போது அண்ணன் கதாநாயகனா மாறி இருக்கிறார். தங்கர் பச்சான் சாருடன் காதல் கோட்டையில் துவங்கி எத்தனையோ நல்ல நல்ல படங்கள் நான் பணியாற்றி இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இன்று அவருடைய மகன் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்று வந்தது போன்ற உணர்வைத் தந்தது. இளையராஜா சாரின் ஆசிர்வாதம் இந்த படத்திற்கு இருக்கிறது. விஜித்திற்கு நல்ல அருமையான மேடை அமைத்துக் கொடுத்து விட்டார்கள். இனி வரும் நாட்களில் அவர்தான் கடினமாக உழைக்க வேண்டும். நம் உழைப்பு தான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும். சினிமாவில் உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய் பண்ணுங்க. அது உங்களுக்கு நிறைய பெற்றுத் தரும். ஒரு இளைஞராக உனக்கு என் அறிவுரை இது” என்று கூறினார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,
“இயக்குநர் தங்கர் பச்சானின் படங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் என்னுடைய அங்காடித்தெரு, வெயில் படங்களை பார்த்துவிட்டு வீடு தேடி வந்து என்னை பாராட்டினார். என்னுடைய ஒன்பது ரூபாய் நோட்டு புத்தகத்தை ஏன் படிக்கவில்லை என்று உரிமையோடு சண்டை போடுவார். தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் நடித்த காட்சிகளுக்கு யாருமே கைதட்டவில்லை. ஆனால் அடுத்த சண்டைக்கோழி படத்தில் அவர் அறிமுகமாகும்போதே கைதட்டில் கிடைத்தது என்றால் அது தவமாய் தவமிருந்து படத்தில் அவருடைய நடப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இங்கே வெளிப்படுகிறது என்று லிங்குசாமி கூறினார். அதேபோலத்தான் தங்கர் பச்சனின் படங்கள் மீது மக்கள் கொண்ட பேரன்பு விஜித்துக்கு வாழ்த்துக்களாக கைமாறும் என நம்புகிறேன். தீண்டாமை பெருங்குற்றம் என்று தான் சொல்கிறோமே தவிர தீண்டாமையை உருவாக்குகிற ஜாதியை பெரும் குற்றம் என்று சொல்வதில்லை. இது முழுவதுமாக அழியும் வரை இதுபோன்ற படைப்புகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இயக்குநர் திருமலை பேசும்போது,
“இன்று தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வெளியிட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. எதார்த்தமான ஒரு படம். ஒரு தயாரிப்பாளருக்கு நல்ல இயக்குநர் ஒருவர் கிடைத்தால் அந்த படம் ஒரு பொக்கிஷம். அப்படித்தான் இயக்குநர் சிவப்பிகாஷும் இந்த படத்திற்காக ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆந்திராவில் திரைப்படங்களை திரையிடும் கியூப் நிறுவனம் வெறும் 5000 ரூபாய் கட்டணம் வாங்கினால் அதே இங்கே தமிழகத்தில் 12 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். இதை மாற்ற பல வருடமாக போராடி வருகிறோம்” என்று கூறினார்.
இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது,
“இந்த படத்தின் இயக்குநர் சிவப்பிரகாஷ் என் அலுவலகத்தில் நான் இருந்த நாட்களை விட அதிக நாட்கள் இருந்தவர். தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு அரசியலை நுட்பமாக அறிந்தவர் சிவப்பிரகாஷ், அவர் அடர்த்தியான திரைப்படத்தை எடுத்திருப்பதாக படம் பார்த்த எல்லோருமே குறிப்பிட்டு சொல்கிறார்கள். படத்தை என்னிடம் காட்டி விடக்கூடாது என்பதில் சிவப்பிரகாஷ் கவனமாக இருந்திருக்கிறார். நான் எப்படி என் இயக்குநருக்கு என் முதல் படத்தை காட்டவில்லையோ அது போல தான் அவரும்.. என் படம் வெளியான போது அதை பார்த்துவிட்டு என்னை விட ரொம்பவே மகிழ்ந்து பாராட்டியவர் இயக்குநர் பார்த்திபன் சார் தான். அது போல இந்த படத்தின் வெற்றி, சிவபிரகாஷை விட எனக்குத்தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும். எந்த படத்தையும் வலுக்கட்டாயமாக ஓட வைக்க முயற்சி செய்ய வேண்டாம்.. நல்ல படமாக இருந்தால் அதுவே ஓடும்.. சினிமாவை இங்கே காப்பாற்ற யாரும் போராட வேண்டாம்.. சினிமா இங்கே இருப்பவரை காப்பாற்றும். கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று இங்கு பேசியவர்கள் குறைப்பட்டு கொண்டார்கள் ஆர்வி உதயகுமாருக்கு எப்படி எஜமான் படம் கிடைத்தது எப்படி ? சின்ன கவுண்டரின் வெற்றியால் தான் ரஜினிகாந்த் தனக்கு படம் இயக்க கூப்பிட்டார். அவரிடமும் நல்ல கதை இருந்தது. இங்கே எல்லாமே வியாபாரம் சார்ந்தது தான். இந்த உலகத்துக்கு வெற்றி பெற்றவர்கள் தான் வேண்டும். இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சொல்வதைக் கேட்டால் நீங்கள் வெற்றி படத்தில் இருப்பீர்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வில் தேவயானை பேசியதில் இருந்து விஜித் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சினிமாவில் சமீப வருடங்களாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் வெளியே அனுப்பப்படுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறும் என்று அந்த படத்தின் இயக்குநரை விட மிக ஆழமாக நம்புபவன் அந்த படத்தில் உதவி இயக்குநர் தான் அவனுக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் செலவு பண்ணுவதால் ஒன்றும் நட்டமாகி விடாது. இது இந்த அரங்கத்தில் பேசப்பட வேண்டிய விஷயம் என்பதால் பேசுகிறேன். இந்தப் படம் வெற்றி படமாக அமையட்டும். இந்த படத்தை போல வரும் படங்களில் எல்லாம் பேரன்பும் பெரும் கோபமும் நிறைந்திருக்கட்டும்” என்று கூறினார்.
நாயகன் விஜித் பேசும்போது,
“இந்த படத்தில் ஒரு பங்காக இருப்பதை நானும் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் நான் என்ன அனுபவித்தேனோ, படம் பார்க்கும்போது நீங்களும் அதை அனுபவிப்பீர்கள். துரோகம், வலி, வெறுப்பு, ஏமாற்றம் எதையும் பார்க்காமல் வளர்ந்த பையன் நான். ஆனால் இந்த படம் எனக்கு அதை எல்லாம் கற்றுக் கொடுத்தது. தனிமைக்கும் சத்தம் இருக்கிறது என்பதை இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் எனக்கு கற்றுக் கொடுத்தது. நான் தனிமையாக இருக்கும் போது இந்த ஜீவா கதாபாத்திரம் என் கூடவே இருந்தது. நடிப்புக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை இந்த கதாபாத்திரம் என் மீது ஏறும்போது பார்த்தேன். நான் சாமியை எல்லாம் பெரிதாக நம்புபவன் அல்ல. ஏதோ ஒன்று நடந்தது. இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் பொருந்துகிற மாதிரி நான் இந்த படத்தில் பயணித்தேன். இசைஞானி இளையராஜா சார் இந்த படைப்பிற்கு உயிர் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்’
நாயகி பேசும்போது,
“இந்தக் கதை குறித்து இயக்குநர் சிவப்பிரகாஷ் என்னிடம் சொன்ன அந்த காட்சி இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த கதை ஏதோ ஒரு தாக்கத்தை எனக்குள் உருவாக்கியது. கொஞ்ச நாள் சாராவாக வாழ்ந்து பார்ப்போமே என்கிற எண்ணம் ஏற்பட்டது. என் பெற்றோருக்கு நடந்தது கலப்பு திருமணம் தான். அப்பா மலையாளம்.. அம்மா தமிழ்.. என் அம்மா சொன்னதை வைத்து எல்லா கலப்பு திருமணங்களிலும் இருப்பது போன்ற சிறு மனக்கசப்பு என் அம்மாவிற்கு இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததுடன் பாரதியின் வரியையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாடலில் குழந்தை, அம்மா, பிற உயிர்கள், தேசம், தமிழ் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசியில் சாதிகள் பற்றியும் சொல்லி இருப்பார். பாரதியின் இந்த வரிகள் என் மனதில் வளரும் பருவத்தில் என்னிடம் உண்டாக்கிய தாக்கத்தை போல, பேரன்பும் பெருங்கோபமும் படம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை விதைக்கும். சில கேள்விகளை எழுப்பவும் வாய்ப்பு உண்டு. இந்த படத்தில் சாராவாக நான் வாழ்ந்தபோது நிறைய சிரித்தேன்.. கொஞ்சம் அழுதேன்.. ரொம்ப வலியை அனுபவித்தேன்.. அதெல்லாம் நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது,
“இந்த திரைப்படம் நான் முதற்கொண்டு நிறைய பேர் பேசத் தவறியதை பேசி இருக்கிறது. இது 40 ஆண்டுகளில் என் படங்கள், என் சிறுகதைகள், நாவல்கள் கூட செய்ய தவறியதை இந்த படம் செய்து இருக்கிறது. இன்றைக்கு சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய சிக்கலை இந்த படம் பேசுகிறது. ஒரு படம் என்பது சிரிக்க வைப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை அடைய வேண்டும். பல அரசியல் இயக்கங்கள் செய்யத் தவறியதை இந்த படம் சாதித்திருக்கிறது. ஒரு போராளி என்பவன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சொல்லை, சிந்தனையை வைத்திருந்தால் போதும். கையில் சரியான கலையை வைத்திருக்கும் இயக்குநர் தான் போராளி.. படம் இயல்பாக இருந்தாலும் வசனங்கள் மனோகரா, பராசக்தி படங்களின் வருவது போன்று தான் இந்த படத்தில் உரையாடல்கள் இருக்கிறது. இந்த படத்திற்கு அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு முருகேஷ் பாபு வசனத்தை அவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களான சாராவும் ஜீவாவும் உங்களை தூங்கவே விட மாட்டார்கள். மைம் கோபி என்ன மாதிரி நடிகர்.. இந்தியாவிலேயே தமிழில் தான் மிகச்சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள்.. தயாரிப்பாளர் ஜெய் கிருஷ்ணன் இன்றைக்கு இருக்கும் பல திறமையான இயக்குநர்களை உருவாக்கியவர். அந்த வேலையை அமைதியாக செய்து வருகிறார். இந்த படத்தின் மூச்சு இசைஞானி தான். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன். இந்த படத்தை முழுமையாக புரிந்து வைத்து எப்படி மக்களிடம் கொண்டு போக வேண்டும் என அழகாக செய்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் செதுக்கி உள்ளார். இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவுக்கு தான் பெரும் பங்கு இருக்கிறது. என்னுடைய மகனுக்கு இரண்டாவது படத்திலேயே இந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. படத்தை நான் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் இந்த படத்தில் என் மகன் நடித்தபோது இந்த படத்தின் கதையை நீங்கள் கேட்க வேண்டாம் என்னை நடிக்க விடுங்கள் என்று கூறிவிட்டார்” என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,
“பெருங்கோபத்தின் பிறப்பிடமே பேரன்பு என்பது தான். நான் என்னுடைய தம்பி படத்தை எடுத்த போது கீழே துணை தலைப்பாக பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் என போட்டிருந்தேன். என் தலைவரை மனதில் வைத்து தான் அந்த வார்த்தைகளை போட்டேன். தன் இனத்தின் மீது அவர் வைத்திருந்த பேரன்பு அந்த இனம் அழித்து ஒழிக்கப்படும்போது அதை காக்க வேண்டிய பெரும் கோபத்திற்கு ஆளாகி விட்டார். பாரதியின் பெரும் கோபத்திற்கு இந்த மண்ணை, மக்களை அவர் ரொம்பவே நேசித்தது தான் காரணம். புதியவர்களுக்கு துணிந்து வாய்ப்பு கொடுப்பதே பெரிய சாதனைதான். அதை ஜெய் கிருஷ்ணன் செய்துள்ளார்.
தங்கர் பச்சான் அழகி படத்தை எடுத்து முடித்தபோது எனக்கு போட்டுக் காட்டினார். படம் பார்த்துவிட்டு வந்து கட்டிப்பிடித்து நன்றாக இருக்கிறது என பாராட்டினேன். தங்கர் பச்சானே நம்ப முடியாமல் திகைத்தார். பக்கத்தில் இருந்த அந்த படத்தில் தயாரிப்பாளர், நண்பனை பாராட்டுவதற்காக இப்படியா பொய் பேசுவது என்று சிரித்தார். ஆனால் படம் அபார வெற்றி பெற்ற பிறகு அவரே நீங்கள் சொன்னபடி தான் நடந்தது என்று கூறினார். தன் மகனை வைத்து ஏற்கனவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை தங்கர் பச்சான் எடுத்து வைத்திருந்தாலும் இந்த பேரன்பும் பெருங்கோபமும் படம் முதல் படமாக வரட்டும் என முடிவு செய்து விட்டார்கள். தம்பி விஜித்திற்கு அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை தூக்கி சுமக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது பெரிய விஷயம் தான். பல படங்களில் நடித்த அனுபவம் பெற்ற நடிகரைப் போல நடிப்பை உரையாடலை உச்சரிப்பை வெளிப்படுத்தி உள்ளது விஜித்திடம் தெரிகிறது. அந்த அளவிற்கு திரை அறிவை நன்றாக உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.
என் தலைவரை பாராட்டிய பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவரது முதல் படம் போலவே இது இல்லை. படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவரை பார்த்தவுடன் நிஜமான மலையாளி என்று நான் நினைத்து விட்டேன். தன்னை ஒரு கேமரா படம் பிடிப்பது என்கிற உணர்வே இல்லாமல் வெகு இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி தெலுங்கு, கன்னடம் என எந்த சேனலை திருப்பினாலும் இருக்கிறார். நமக்கெல்லாம் அது பெருமை.. தம்பி அருள்தாஸ் கெட்டவனாக நடிக்கும் போதெல்லாம் மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தேவையற்ற பேச்சுக்கள் இல்லாத, இயல்புக்கு ஏற்ற மாதிரியான அருமையான உரையாடலை முருகேஷ் பாபு எழுதி இருக்கிறார். பசும்பொன் திரைப்படத்தில் பணியாற்றிய போது நான் எழுதி கொடுக்கும் வசன பேப்பர்களை பார்க்காமலே கீழே தூக்கி போட்டு விடுவார் பாரதிராஜா அப்பா. அதன் பிறகு ஒரு காட்சி எடுக்கும் போது இதற்கு எங்கே வசனம் என்று கேட்பார். அவர் தூக்கி போட்ட பேப்பரை அவரிடமே கொடுப்பேன். இது சரியாக இருக்கிறது என்று அவர் சொல்லும்போது, இதைத்தான் நீங்கள் தூக்கி போட்டீர்கள் என்று சொல்வேன். சில நேரங்களில் கோவித்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பிய போது என் குரு சித்ரா லட்சுமணன் தான் என்னை தட்டிக்கொடுத்து சாந்தப்படுத்தினார். இன்று தமிழ் சினிமாவின் திரைக்களஞ்சியமாக சித்ரா லட்சுமணன் இருக்கிறார்.
வழக்கு கோர்ட் என தினசரி ஒரு இடத்திற்கு அலைந்து கொண்டிருந்தாலும் நேற்று இந்த படத்தை நேரம் ஒதுக்கி பார்த்தேன். இன்று இதோ திருச்சியில் இருந்து வந்ததும் இங்கே இந்த விழாவிற்கு வந்து விட்டேன். தங்கர் பச்சானுக்காக இல்லை என்றாலும் விஜித்திற்காக இந்த விழாவிற்கு வர வேண்டி இருந்தது, ஊழல், லஞ்சம் இந்த நாட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.. அப்படி என்றால் யார் கொடுக்கிறார்கள்? யார் வாங்குகிறார்கள் ? லட்சுமி ராமகிருஷ்ணன் தான் நியாயமான தீர்ப்பை சொல்ல வேண்டும்.. தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக் கூடாது.. எவனுக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் லஞ்சம், ஊழல் பிறக்கிறது. கோயில் கருவறையில் இருந்து தாயின் கருவறை வரை ஊழல், லஞ்சம் இருக்கிறது.
காலம் பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது. நமது காலத்தை உருவாக்கியவன் நம் பாட்டன் பாரதி. சுதந்திரம் கிடைப்பது, மாநிலம் பிரிப்பது, தமிழ்நாடு என பெயர் வைப்பது என எல்லாவற்றையுமே சுதந்திரத்திற்கு முன்பே உணர்ந்து பாடியவன் பாரதி. எல்லா காலங்களிலும் எல்லா மகான்களுமே இந்த சாதிக்கு எதிரான குரலை ஒலித்து இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது வரை இந்த சாதி சாகமாட்டேன் என்கிறது. சாதி என்பது கொரோனாவை விட மிகப்பெரிய கொடிய நோயாக இருக்கிறது. உலகத்திலேயே புனிதமான ஒன்றான ஒன்றான அன்பை அது கொன்று விடுகிறது.
அமெரிக்க அதிபரும் இந்திய பிரதமரும் ஒவ்வொரு நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் கடவுச்சீட்டு, விசா கட்டாயம் வேண்டும். ஆனால் அன்னை தெரசாவை அனைத்து நாடுகளும் இது எதுவுமே இல்லாமல் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் என கைகூப்பி அழைத்தன. காரணம் அன்பால் அத்தனை நாடுகளையும் கட்டிப்போட்டவர் அன்னை தெரசா. சாதி என்பது பெரிய நோய். சாதி, மதம், சாராயம் இந்த மூன்றும் தமிழ் தேசியத்தின் மிகப்பெரிய பகை. எது செத்தாலும் பரவாயில்லை, தன் சாதி சாகக்கூடாது என்று நினைக்கிறவன் அதிகம் பேர் இருக்கிறார்கள். அப்படி நினைக்கிற கூட்டத்திற்கு இடையே இரண்டு காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் கதை.
சாதி என்கிற கொடிய நோயை ஒழிக்காமல் சமநிலை சமூகம் பிறக்காது. எத்தனையோ மகான்கள் வந்து கூறியும் இன்னும் இந்த சாதி ஒழியவில்லை. இன்னொரு தலைமுறை வந்து இந்த சாதியை காலில் போடும் செருப்பாக போட்டு தேய்த்தால் மட்டுமே சாதி மறையும். இந்த சாதிய கொடுமையை, வலியை மிகைப்படுத்தாமல் இரண்டு மணி நேரம் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். இனிவரும் தலைமுறையாவது இந்த சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாவற்றையும் தாண்டி மனிதம் நோக்கி, மானுடம் பயணிக்க வேண்டும்.
முதல் படத்திலிலேயே தம்பி இயக்குனர் சிவப்பிரகாஷுக்கு இசைஞானியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை கூட குறைவுதான்.. இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.. எது கேட்டாலும் அருள்வார். உலகில் எத்தனையோ இசைக்கலைஞர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு இணை இல்லை. தளபதி என்ற ஒரு படத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை விதமான பாடல்கள்.. இது எல்லாம் உருவாக்கியவர் ஒரே ஆள் தான் என்று சொன்னால் உலகில் யாராவது நம்புவார்களா ? அது அவரால் மட்டும்தான் முடியும். இயக்குநர் ஒரு திரைக்கதை எழுதினால் இளையராஜா தனது இசையால் இன்னொரு திரைக்கதை எழுதிக் கொண்டிருப்பார். நம் தாய் பாடிய தாலாட்டு யாருக்கு ஞாபகம் இருக்கிறது.. இன்று 40 வருடங்களாக அவர் பாடல்களை தான் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.. கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையை கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை. அவர் விஜித் படத்திற்கும் இசையமைப்பார். விஜித்தின் பையன் வந்து இயக்கப் போகும் படத்திற்கும் இசையமைப்பார்.
எப்படி இலக்கிய உலகில் ஒரு பாரதி வந்தாரோ, அது போல தான் இசை உலகில் இளையராஜா.. அது ஒரு வரம். அந்த வகையில் இசை இறைவனின் ஆசி பெற்ற ஒரு படம் இது. தம்பி விஜித் பாலைவனச்சோலை படத்தில் சந்திரசேகர் வெளிப்படுத்தியது போன்று ஒரு அற்புதமான உடல் மொழி, நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவகுமாரின் மகன்கள் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும் சூர்யாவும் கார்த்தியும் தங்கள் திறமையால் தான் வெளிச்சம் பெற்றார்கள். அதேபோல எஸ்ஏ சி யின் மகன் என அறிமுகமானாலும் விஜய் தனது ஆற்றலால் தான் என்று இவ்வளவு பெரிய புகழ்பெற்ற ஒரு இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் உழைப்பு தான் காரணம். எப்படி பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கடுமையான உழைப்பு மட்டுமே. எல்லா வேதனைக்கும் ஒரே ஒரு மருந்து தான் சாதனை. சாதனையை வெற்றியின் மூலமாகத்தான் அடைய முடியும்.. வெற்றிக்கு கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
இயக்கம் ; சிவப்பிரகாஷ்
வசனம் ; முருகேஷ் பாபு
இசை ; இளையராஜா
ஒளிப்பதிவு ; ஜே பி தினேஷ்குமார்
படத்தொகுப்பு ; ராமர்
கலை ; சரவணன்
நடனம் ; ரேகா சுரேஷ் சித்
சண்டை பயிற்சி ; தினேஷ் காசி
மிக்சிங் ; தபஸ் நாயக்
நிர்வாக தயாரிப்பாளர் ; சாய் வினோத்
தயாரிப்பு நிர்வாகி ; டி முருகன்
தயாரிப்பு மேலாளர் ; எம் சிவக்குமார்
சவுண்ட் இன்ஜினியர் ; கே ஜெகன்
சவுண்ட் எபெக்ட்ஸ் ; சீனு
புகைப்படம் ; தேனி சீனு
ஒப்பனை ; அறந்தை தினேஷ்
ஆடை வடிவமைப்பு ; நித்யா
உடைகள் ; செல்வம்
சிஜி விஎப்எக்ஸ் ; Hocus Focus
மக்கள் தொடர்பு ; ஜான்சன்
விளம்பர வடிவமைப்பு ; Reddot பவன்.