ஒரு கணவன், மனைவி, அன்பான ஒரு மகன் என்று மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. 13 வயதான மகனுக்கு ஒரு பிரச்சினை. அவன் தனிமையாக இருக்கும்போது, அல்லது ஒரு பெரிய திறந்த வெளிக்கு செல்லும்போது அவனை கீனோ என்ற ஒரு மர்ம உருவம் பயமுறுத்துகிறது. என்னோடு வா, என்னை கட்டிப்பிடி என்கிறது.
ஒரு கட்டத்தில் இது தந்தைக்கு தெரிய வர அவர் ஆன்மீக சக்திகளின் உதவி கொண்டு மகனை தீய சக்தி ஏதாவது தொந்தரவு செய்கிறதா என்று சோதிக்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. அப்படி என்றால் கீனோ என்கிற அந்த உருவம் என்ன? அது ஏன் அந்த சிறுவனை பயமுறுத்த வேண்டும் என்று சொல்கிறது படம்.
இதுவரை எத்தனையோ விதமான சைக்காலஜிக்கல் திரில்லர் படம் வந்திருந்தாலும், இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, புதிய விஷயத்தை பேசி இருக்கிறது என்பதை அடித்துச் சொல்லாம். இந்த பிரச்சினை நம் ஒவ்வொருவருக்குள்ளும் என்று சொல்லி இருப்பதுதான் இதன் ஹைலைட்.
அது என்ன பிரச்சினை என்பதை தியேட்டர் அனுபவத்தோடு பார்ப்பதுதான் படத்திற்கும், தயாரிப்பாளருக்கும் செய்யும் மரியாதை. கண்டிப்பாக இது பெற்றோர்கள் காண வேண்டிய படம். குழந்தைகளை புரிந்து கொள்ள இது உதவும்.
மகாதாரா பகவத், ரேணு சதீஷ், காந்தர்வா ஆகியோர் தங்கள் கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுவனான நடித்திருக்கும் மாஸ்டர் சிவ சுகுந்த் அவனும் பயந்து மற்றவர்களையும் பயமுறுத்துகிறான்.
ஓலிவர் டெனியின் ஒளிப்பதிவு படத்தை திரில்லர் ஜார்னரில் கொண்டு செல்ல உதவி இருக்கிறது. கிருத்திகா காந்தியின் கத்தரி கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறது. தரமான இயக்குனராகவும், இசை அமைப்பாளராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் ஆர்.கே.திவாகர்.
கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாகி இருக்கும்.
கீனோ, சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை.