ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 2௦௦ படங்களாவது வெளியாகி வருகின்றன. இவற்றில் சுமார் 15௦ படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தான்.. ஆனாலும் சமீப வருடங்களில் படம் முடிவடைந்தும் கூட, பல்வேறு பிரச்சனைகளால் ரிலீஸ் செய்ய முடியாமல் நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது இதுபோன்று சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் நல்ல படங்களுக்கு வாசலை திறந்துவிடும் விதமாக ஒரு விடிவெள்ளியாக மாறி ஒரு புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ் (SRiNIK PRODUTIONS) நிறுவனம்.
ஸ்ரீனிக் புரொடெக்ஷன்ஸ் சதீஷ்குமார் மற்றும் பாலசுப்ரமணியம் இருவரும் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் சாதித்தவர்கள். சினிமாவின் மீதான ஆரவத்தில், ராமராஜன் நடிப்பில் வெளியான ‘சாமானியன் படத்தின் இணை தயாரிப்பாளராக மாறினார்கள் அதே சமயம் தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபடுவதற்கு பதிலாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் நல்ல படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்து ரிலீஸ் செய்யும் புதிய முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்..
இது குறித்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் கூறும்போது, “75 லட்சத்தில் இருந்து மூன்று கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் உருவாகியுள்ள பல நல்ல படங்கள் பைனான்ஸ் உள்ளிட்ட சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தவித்து வருகின்றன. படத்தை எந்தவித பொருளாதார பிரச்சனையும் இன்றி எடுத்துவிடும் தயாரிப்பாளர்கள் கூட, அதை ரிலீஸ் செய்ய வழியின்றி தவிப்பதும் அதற்காக மேலும் கடன் வாங்கி கடனாளியாவது மற்றும் தங்களது சொத்துக்களை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் சினிமாவில் இப்படி பல நூற்றுக்கணக்கான படங்கள் ரிலீஸுக்கு தயாரான நிலையிலும் கூட வெளிவர முடியாமல் தேங்கி கிடக்கின்றன. இதன் மூலம் நல்ல படங்களை அதன் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்று எங்கள் செலவிலேயே அவற்றை திரையரங்குகளில் வெளியிடும் ஏற்பாடுகளை செய்து கொடுத்து தயாரிப்பாளருக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். வெறும் தியேட்டர் வெளியீடு மட்டுமில்லாமல், படத்தின் ஓவர்சீஸ் மற்றும் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, ஓடிடி உரிமை மற்றும் பிற மொழி படங்களின் டப்பிங் உரிமை என அனைத்தையுமே நாங்களே முன் நின்று விற்பனை செய்து படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் போட்ட முதலீட்டையும் தாண்டி ஒரு நல்ல லாபத்தையும் பெற்று தரும் முயற்சியாக தான் இதை துவங்கி இருக்கிறோம்.
இதை சேவை என்று சொல்லாவிட்டாலும், சினிமாவின் மீதுள்ள அளப்பரிய ஆர்வத்தால், நல்ல படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு செல்ல வேண்டும், அவை முடங்கி விடக்கூடாது, தயாரிப்பாளரின் பணம் வீணாகி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் தான் இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளோம் சின்ன பட்ஜெட் படங்கள் தான் என்றாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமான நல்ல தரமான படங்களை தேர்வு செய்வதற்கு கதாசிரியர்கள், இயக்குநர்கள் என ஐவர் குழு ஒன்றை நியமித்து உள்ளோம்.
மாதத்திற்கு இரண்டு படங்கள் என்கிற கணக்கில் வருடத்திற்கு 24 படங்களை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்
தொடர்ந்து நல்ல படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதன் மூலம் திரையரங்குகளின் நம்பிக்கையும், ரசிகர்களின் நம்பிக்கையும் ஒரே சேர பெற்று, ஒரு நல்ல வெளியிட்டு நிறுவனம் என்கிற பெயரை பெறுவதே எங்களது குறிக்கோள். தமிழ் சினிமாவில் தற்போது படங்களை வெளியிடுவதற்கு என்று குறிப்பிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அவை சின்ன பட்ஜெட் படங்கள் அணுக முடியாத அளவில் இருக்கின்றன. அந்த வகையில் சின்ன தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் நிறுவனமாக நாங்கள் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளோம்” என்று கூறினார்..