நகரத்தில் நடக்கும் தொடர்கொலைகள் அவை குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரி என்கிற பழகிய திரைக்கதையில் வெளியாகியிருக்கும் படம் ஹிட் – தி தேர்ட் கேஸ்.
கண்டிப்பான காவல்துறை அதிகாரியான நானி ஜம்மு காஷ்மீரில் இருந்து ஆந்திராவுக்கு மாற்றப்படுகிறார்.அவர் பொறுப்பேற்ற நேரத்தில் பல கொடூர கொலைகள் குறித்த வழக்கு வருகிறது.அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது நடக்கும் நிகழ்வுகளை அதிரடியாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
நானியின் சண்டைக்காட்சிகள் தெறிக்கவிடுகின்றன.நடிப்பிலும் குறை வைக்கவில்லை.ஒரு கதாநாயகனின் வலிமையை உயர்த்தும் கதைக்களம் அமைந்திருக்கிறது.அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
ஸ்ரீநிதிஷெட்டி நாயகியாக நடித்திருக்கிறார்.காதல், பாடல்கள்,நடனம் ஆகியனவற்றோடு நிறுத்திவிடாமல் கதையோடு இணைந்து பயணிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.
சமுத்திரக்கனி கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம் ஏற்று அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.அவருக்கும் நாயகன் நானிக்குமிடையேயான காட்சிகள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என நிறைய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் வேகம் திரையிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
மிக்கி ஜே மேயரின் இசையில் பாடல்கள் சுகம்.பின்னணி இசையில் திரைக்கதையின் கனத்தைக் கூட்டியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் சைலேஷ் கோலானு. பார்த்துப் பழகிய கதைதானே என்று எந்த இடத்திலும் சலிப்பு வந்துவிடாதபடி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.இந்திய ஒன்றியத்தின் பல மாநிலங்களுக்கு திரைக்கதை பயணிக்கிறது என்று எழுதியிருப்பதால் இரசிகர்களுக்கு நல்ல காட்சியனுபவம் கிடைத்திருக்கிறது.
இது போன்ற கதைகளில் குற்றம் செய்வோர் அவர்களுடைய பின்னணி ஆகியனவற்றைத்தான் புதிதாக வைக்க முடியும்.அந்த வகியில் ஒரு கறுப்பு உலகம் அதன் செயல்பாடுகள் ஆகியனவற்றைச் சொல்லி அதிர வைத்திருக்கிறார். அந்தப் பணியை நிறைவாகச் செய்ததால் படம் நிமிர்ந்து நிற்கிறது.
– இளையவன்