அதர்வா நடித்திருக்கும் ‘DNA’ திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதர்வாவுடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு மொத்தமாக ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

 

YouTube player

 

ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன்,கணேஷ் கே.பாபு, ஹேமந்த் ஆகியோருடன் கவிஞர் வெண்ணிலாவின் வாரிசுகளும், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழக அளவில் சாதனை படைத்த கவின்மொழி மற்றும் நிலா பாரதியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பேசுகையில்….

வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்தப் பாடலில் இணைந்து பணியாற்றிய பாடலாசிரியர், பாடகர், பாடகிக்கும், இசைக்கலைஞர்களுக்கும் நன்றி.‌ பாடகராக என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. ஏ ஆர் ரகுமான் சார் தான் என்னுடைய மானசீக குரு. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் சத்ய பிரகாஷ் பேசுகையில்…

சந்தோசமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்தப் பாடல் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. கே.எஸ் சித்ராம்மா இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் இந்தப் படத்தின் மிக முக்கியமான சூழலில் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் இது என்னுடைய பயணத்தின் தொடக்கம் தான். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் பிரவீண் சைவி பேசுகையில்…

14 வருடங்களாக சென்னையில் இருக்கிறேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதற்கு நானும் சாட்சி. இதுவரைக்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. அற்புதமான அனுபவம்.‌ இந்தப் படத்தின் மூலம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டேன் என்றார்.

அறிமுக இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் பேசுகையில்…

இசையமைப்பாளராகப் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது போன்றதொரு வாய்ப்புக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். அறிமுக இசையமைப்பாளர்களுடனும், ஜிப்ரான் போன்றவர்களுடனும் மேடையைப் பகிர்ந்து கொண்ட தருணம் தான் எனக்குக் கிடைத்த கௌரவம் என நினைக்கிறேன் என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா….

பெரு மகிழ்ச்சியில் இருக்கிறேன்.‌ பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்புத் தம்பி மாரி செல்வராஜை இந்த மேடையில் பார்க்கிறேன்.
இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனைப் பற்றித் தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலகத் திரைப்படங்களையும் தீவிரமாகப் பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது.
அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்கும். மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடிய வகையில் தான் அவர் சூழலை விவரிப்பார். என்னைப் போல் எழுதக்கூடியவர்களுக்கு இது எளிதானது. இதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளராக அறிமுகமாகும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகம் நமக்கு எதைக் கொடுத்தாலும் நாம் அதற்குத் திருப்பித் தர வேண்டியது அன்பை மட்டும் தான். இதைத்தான் இந்தப் படமும் பேசுகிறது என்றார்.

பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில்….

1980 களில் வெளியான ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்ற படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் இசைத் துறையில் சாதித்த ஜாம்பவான்கள். தற்போது பாடல்கள் மலிந்து வரும் தருணத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இயக்குநரும், தயாரிப்பாளரும் எடுத்த முடிவிற்கு பாராட்டுகிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் இசைத் துறையில் ஜாம்பவான்களாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த டி என் ஏ திரைப்படம் – இரசிகர்களின் டிஎன்ஏவுக்குள் சென்று உற்சாகத்தை உண்டாக்கட்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில்….

இது ஒரு நல்ல படம். அதர்வாவின் இரசிகர்களுக்கு இந்தப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறையப் படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர்.பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார். இந்தப்படம் ஜூன் இருபதாம் தேதியன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வழங்குங்கள் என்றார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசுகையில்….

இந்தப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.ஐந்து திறமையான இளம் இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நன்றியையும்,வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பர்கானா எனும் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுதி இருந்தேன்.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். கவனிப்பாரற்று இருக்கும் பெண்களை தன்னுடைய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெறச் செய்திருப்பார்.
‘டி என் ஏ’ வில் உள்ள திவ்யா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைத்த அனுபவங்களை நினைவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறது.அற்புதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

YouTube player

நடிகை மானசா சௌத்ரி பேசுகையில்…….

டி என் ஏ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். நான் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் இது. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.சிறிய வேடமாக இருந்தாலும் அழுத்தமாக இரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் என நம்புகிறேன் அதர்வாவுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது என்றார்.

இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்….

எனக்கு அடையாளம் கொடுத்த தயாரிப்பாளருக்கு வணக்கம். ஒவ்வொரு படமும் மக்களிடம் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக கடினமாக உழைப்பார். சினிமாவை மிகவும் நேசிப்பவர்.‌ எந்தப் படத்தைப் பற்றியும் அவரிடத்தில் ஒரு சரியான ஜட்ஜ்மெண்ட் இருக்கும். இந்தப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இயக்குநர் நெல்சன் அவருடைய எல்லாப் படங்களையும் நேர்த்தியாகச் சொல்லி இருப்பார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில்….

என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம்.இது என்னுடைய விழாவாகத் தான் பார்க்கிறேன்.ரமேஷ் திலக் குறிப்பிட்டது போல் நெல்சன் வெற்றி பெற்றால் ஏராளமானவர்களுக்கு ஒரு தலைமுறைக்கான வாசல் திறந்து விட்டது போல் இருக்கும். மிக சாதாரண நிலையில் இருந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர்.
சில நபர்கள் தான் ஏற்ற இறக்கங்களைக் கடந்து வாழ்க்கையில் சீரான ஒரு நிலையைப் பராமரிப்பார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் நெல்சன்.
இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். நிச்சயமாக சொல்கிறேன்.நெல்சன் இயக்கிய படங்களில் வெகுஜன ஆதரவும், வியாபார ரீதியான பெரிய வெற்றியையும் பெறக்கூடிய முதன்மையான படமாக இது இருக்கும்.‌ இது சம்பிரதாயமான வார்த்தை இல்லை. நிச்சயம் இது நடக்கும்.
அதர்வாவிற்கும் இந்தப் படம் நிச்சயமாக நல்ல படமாக இருக்கும்.அற்புதமாக நடித்திருக்கிறார்.‌
நிமிஷா இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவர்.மொழிகளைக் கடந்து ஏற்கனவே நம்மிடம் வந்திருப்பவர். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக நடித்திருக்கிறார்.இந்தப் படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார்- தயாரிப்பாளர் என்பதைக் கடந்து என்னுடைய நண்பர். நல்ல மனிதர்.நான் எப்போதும் ஆச்சரியமாக பார்க்கும் மனிதர். காலையில் 6:00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி வந்தவாசிக்கு 9 மணிக்குச் சென்று விடுவார், பிறகு அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி, 9 மணிக்கு சென்னைக்கு வந்து விடுவார்.‌ தொடர்ந்து உழைக்கும் அபாரமான உழைப்பாளி. இந்த உழைப்புதான் அவரை அரசியல் -சினிமா- தொழில் துறை – என அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளராக மாற்றி இருக்கிறது.‌
சினிமா மீது தீரா காதல் கொண்டவர். ஒரு காபி குடிப்பதற்குள் ஒரு கதையைச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் இயக்குவதற்கு அவரிடமே நிறைய கதைகள் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைக்கும்.‌ அந்த வகையில் டி என் ஏ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்….

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னைத் தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய இரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டி என் ஏ சிறந்தது என்று சொல்வேன்.
அவருடைய பேச்சை நான் மிகவும் இரசிப்பேன். அவரால் பொலிட்டிக்கல் என்டர்டெய்னர் படத்தை இயக்க முடியும். அந்த அளவிற்கு அவரிடம் அரசியலைப் பற்றிய அறிவு இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என்றார்.

நடிகை நிமிஷா சஜயன் பேசுகையில்….

டி என் ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம்.என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது.
அதர்வா திறமையான சக நடிகர். இரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் ஜூன் இருபதாம் தேதி அன்று வெளியாகிறது.அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து இரசித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் .

சிறப்பு விருந்தினர் கவின் மொழி பேசுகையில்…..

அனைவருக்கும் வணக்கம் . எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்திருக்கிறேன். பொதுவாக இது போன்ற இசை வெளியீட்டு விழாவில் திரை உலகப் பிரபலங்களைத் தான் விருந்தினர்களாக அழைப்பார்கள். முதன்முறையாக எங்களுக்கு அழைப்பு விடுத்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் சினிமாவை திரையில் தான் கண்டு இரசித்து இருக்கிறோம். அதைக் கடந்து இத்தனை நபர்கள் கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்கும்போது பெரிய மேஜிக்காக இருக்கிறது.
ஒரு தேர்வு எழுதி அதன் முடிவுக்காகக் காத்திருப்பது போல் தான் இருக்கிறது.‌ இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை நன்றாக இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெறுவதற்கும், படக் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிறப்பு விருந்தினர் நிலா பாரதி பேசுகையில்….

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியதற்காக தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு நன்றி.அவர் அழைப்பு விடுத்த போது இந்த விழாவிற்கு செல்வது தொடர்புடையதாக இருக்குமா? என யோசித்தேன்.‌ நாள் இங்கு வந்த பிறகு ஒவ்வொருவரையும் சந்தித்த பிறகும் அவர்களுடைய பேச்சைக் கேட்ட பிறகும் நெருக்கமானதாக இருக்கிறது.
ஆனந்த விகடனில் வெளியான’ வட்டியும் முதலும்’, ‘மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற தொடர்களை வாசித்திருக்கிறேன். அதை எழுதிய ராஜு முருகனை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ மாரி செல்வராஜ், பாலாஜி சக்திவேல், நெல்சன் ஆகியோரை சந்திக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.‌
அண்மையில் ‘டப்பா கார்ட்டல் ‘ எனும் வெப்சீரிஸை பார்த்தேன். அதில் நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருந்தார்கள். அவர்களை இங்கு நேரில் பார்க்கிறேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
‘சூப்பர் சிங்கர்ஸ்’ நிகழ்ச்சிகள் பார்த்து இரசித்தவர்களை இங்கு இசையமைப்பாளராக பார்க்கிறேன். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பெருமிதம் அடைகிறேன். டி என் ஏ திரைப்படம் வெற்றி பெறுவதற்கும், படக் குழுவினருக்கும் என் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.‌

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில்….

இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.அதற்கு என் உதவியாளர் மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருப்பார்கள் என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையை கவனித்தேன். அவருடைய நடவடிக்கையை பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ..! என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார்.
இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும் ஏனெனில் ஒரு நாள் கூத்து படத்தைப் பார்த்தேன்.
பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதைகளைத் திரையில் கொண்டு வருவது..
மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்குப் பிடிக்கிறது… எது வெற்றிகரமானதாக இருக்கிறது… எது நம்மை முன்னிலைப்படுத்தும்? எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என்பது.. என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை.
இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளைத் தேர்வு செய்திருப்பார்.
ஒரு நாள் கூத்து படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாகக் காட்சிப்படுத்தி இருப்பார் அதைப் பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன்.‌அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும்.
எங்களுடைய தலைமுறையை சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூகப் பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்குத் தென்படாத கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதைத் திரையில் கொண்டு வருகிறார்.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையை தூக்கிப் போட்டால் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல்.. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இந்தப் படத்தைப் பார்த்த என்னுடைய உதவியாளர்களிடம் படம் எப்படி? என கேட்டபோது, அனைவரும் ஒரு நாவலை வாசித்த பிறகு இருக்கும் அமைதியும், மௌனமும் தான் அவர்களின் எதிர்வினையாக இருந்தது.
இந்தப் படத்தைப் பார்க்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உண்மையை நேரில் பார்ப்பது போல் இருக்கும்.‌
நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்குத் தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம்.
இதுபோல் நாம் படுத்து எழுந்த .. தவித்த.. இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதை பிரதிபலிக்கிற படமாகத்தான் டி என் ஏ இருக்கிறது.‌
நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விசயம் நடந்தால் எப்படி இருக்கும்? என்ற விசயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுக இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில்….

இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி குறிப்பாக கவின்மொழி மற்றும் நிலா பாரதி ஆகிய இருவரும் வருகை தந்தது எங்களுக்குப் பெருமை.
கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்தப் படத்தின் வாய்ப்பைத் தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன்.ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜ் வேறு ஏதேனும் கதை இருந்தால்.. அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி என் ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் போனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன? என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன்.. அவர் இயக்கிய படங்களில் எமோஷனலை நிறுத்தி நிதானமாகச் சொல்லி இருப்பார். அதனால் அவர் என்ன கதை சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருந்தேன்.‌
கதையைச் சொல்லத் தொடங்கும் போது இந்தப் படத்தின் டைட்டில் டி என் ஏ என்றார்.‌ உடனே டி என் ஏ என்றால் ஜெனிடிக் தொடர்பான சயின்டிபிக் பிக்ஷன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் டி என் ஏ என்றால் திவ்யா அண்ட் ஆனந்த் என சொன்னார்.
திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா நடித்திருந்தார். ஆனந்த் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்கும் போது எதையும் நினைக்காமல் திறந்த மனதுடன் சென்றேன். படப்பிடிப்புத் தளத்தில் காட்சிகளை மேம்படுத்தினார்கள். எனக்குத் தெரிந்து இந்தப் படத்தில் நானும், நிமிஷாவும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம்.‌ அந்தக் காட்சி 15 வினாடிகள் தான் இருக்கும்.15 வினாடிகளில் அந்தக் காட்சிக்கான உரையாடல்கள் நிறைவடைந்து இருக்கும். அதன் பிறகும் நிமிஷா நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இணையாக நானும் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இது 40 விநாடிகள் வரை நீடித்தது.‌ அதன் பிறகு அந்தக் காட்சியை நாங்கள் பார்க்கும் போது அழகாக இருந்தது. நெல்சன் அந்தக் காட்சியை அப்படியே படத்தில் வைத்திருக்கிறார். அது முன்னோட்டத்திலும் இடம்பிடித்து இருக்கிறது. இரண்டு பேரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் காட்சி அது. சில படங்களில் தான் இது போன்று அமையும்.
இந்தப் படத்தின் இசை யாரென்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு நான் பண்பலை வானொலியில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. அதனால் ஐந்து புதிய திறமையான இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்ட பிறகு உடனடியாக ஏனைய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர். இரண்டே மாதத்தில் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கி விட்டோம். இதற்கு தயாரிப்பாளரும் முக்கியமான காரணம்.‌ சினிமா மீது அவருக்குள்ள காதலால் இது சாத்தியமானது.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌
கதையை அனைவரும் எளிதாக எழுதலாம்.ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எழுதுவது கடினமானது. இதற்கு நிறைய யோசிக்க வேண்டும். எல்லா கதாபாத்திரத்தையும் சிறப்பாக இயக்குநர் நெல்சன் எழுதி இருந்தார்.படப்பிடிப்புத் தளத்தில் சக நடிகர்களுக்கு எந்தவித குழப்பமும் இருக்காது.
இந்தப் படம் ஒரு நல்ல படம். உங்களுடைய திரை உலகப் பயணத்தில் சிறந்த படமாக இது இருக்கும் என்று என்னிடம் சொன்னார். இந்த வகையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பொதுவாக ஒரு படம் வெளியாகும் போது அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கு பயம் கலந்த பதட்டம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்களுக்குப் பயம் இல்லை. பதட்டமும் இல்லை .சிறிய அளவில் நம்பிக்கை இருக்கிறது. நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
பொதுவாக நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம்.‌ நண்பர் மீது வைக்கும் நம்பிக்கை… ஒரு காதலன் காதலி மீது வைக்கும் நம்பிக்கை… இந்தப் படத்தைப் பொறுத்தவரை மனைவி என்பவர் தன் கணவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.. அந்த நம்பிக்கையினால் எந்த அளவிற்கு தங்களின் அன்பை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது. அதனால் இரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.‌
ஜூன் இருபதாம் தேதி அன்று திரையரங்குகளில் டிஎன்ஏ வெளியாகிறது. இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கிறேன். அனைவரும் குடும்பத்தினருடன் வந்து பார்த்து இரசித்து ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில்…..

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மனிதர் என்று சொல்வதை விடச் சிறந்த மக்கள் பிரதிநிதி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் சென்னையிலிருந்து அவருடைய தொகுதியான வந்தவாசிக்குச் சென்று மக்களைச் சந்தித்து விட்டு அதன் பிறகு தான் சென்னை திரும்புவார்.அவரை நான் சில முறை வந்தவாசிக்குச் சென்று சந்தித்திருக்கிறேன்.‌ தொகுதியுடன் நெருக்கமாக இருக்கும் மக்கள் பிரதிநிதியைச் சந்தித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
படத்தின் கதையை நான் அவரிடம் சொன்ன பிறகு, அவர்தான் எல்லோரிடமும் சொன்னார். அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.
‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ என்ற படத்திற்காக ஏற்கனவே ஐந்து இசையை பாடல்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.ஐந்து பேரிடமும் பணியாற்றும்போது ஐந்து வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு வலிமையாகவும் உறுதியாகவும் ஒரு பின்னணி இசை தேவைப்பட்டது. அதற்காக ஜிப்ரானை தொடர்பு கொண்டோம். அவருடைய எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.2016 ஆம் ஆண்டில் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு நாள் கூத்து படத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்.அவர் ஒரு மேடையில் பேசிய பேச்சுதான் என்னை ஃபர்கானா படத்தை இயக்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது.மாரி செல்வராஜ் இன்று அடைந்திருக்கும் உயரம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இயக்குநர்கள் ராஜூ முருகன், ஹேமந்த், கணேஷ் கே.பாபு ஆகியோருக்கும் நன்றி.
அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை.‌ ஏன்? என்பது இந்தப் படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
இது ஒரு கிரைம் ஆக்சன் டிராமா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது.
என்னுடைய முந்தைய மூன்று படங்களுக்கு மாறுபட்டதாகவும், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும்
டி என் ஏ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.