முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கண்ணப்பா’.இதில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் ஜூன் 23 அன்று நடைபெற்றது.

இதில், நடிகர் சரத்குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, நடிகர் சம்பத் ராம் மற்றும் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் நடிகர் சம்பத்ராம் பேசுகையில்….

மேடையில் இருக்கும் அனைவருக்கும் வணக்கம், சரத்குமார் சாருக்கு மிகப்பெரிய நன்றி, ‘அரசு’ படத்தில் இருந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அரசு படத்தின் போது அவர் என்னை கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி, இவருக்கு எதாவது நல்ல கேரக்டர் கொடுங்க என்று சொன்னார், எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கிறார், அவருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடிட்டர் ஆண்டனி சார், சைனர் என்ற கன்னடப் படத்தில் நடித்தேன், அதற்கு அவர் தான் எடிட்டிங். அவர் சிறந்த எடிட்டர் என்பது தெரியும், இந்தப் படத்தில் அவரது பணி பெரிய அளவில் பேசப்படும். கடந்த வாரம் ஐதராபாத்தில் கண்ணப்பா வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற அனைவரும் சொன்னது என்னவென்றால் பிரபாஸ் சாரின் அறிமுகத்திற்குப் பிறகு படம் மிக சிறப்பாக இருக்கும் என்றார்கள். அவங்க எல்லோரும் அடிமனதில் இருந்து மகிழ்ச்சியாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயமாக நூற்றுக்கு நூறு வெற்றிப் படமாக இருக்கும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸியின் இசை மிகச் சிறப்பாக இருந்தது. ஐதராபாத்தில் அவரது பணி பேசப்பட்டது, சரத்சார் கூட பாடல்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக்கொண்டார். சென்னையில் மிகப்பெரிய அளவில் கண்ணப்பா நிகழ்ச்சி நடத்த இருந்தோம். ஆனால், இந்தியா முழுவதிலும் இருந்து நட்சத்திரங்கள் வர வேண்டி இருந்தது, நேரம் இல்லாததால் அது நடக்கவில்லை. அதனால் தான் சிறு குழுவாக நாங்கள் உங்களைச் சந்திக்கிறோம். படம் மிகச் சிறப்பாக இருக்கிறது, படத்தை இரசிகர்கள் பார்த்தப் பிறகு அவர்கள் பலரிடம் படத்தைப் பற்றிச் சொல்வார்கள். எனவே, ஊடகங்கள் இந்தப் படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கு, கண்ணப்பா படத்தில் வாய்ப்பளித்த மோகன் பாபு சாருக்கு நன்றி. என் நண்பர் மூலம் அவரிடம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. அதில் இருந்து அவரை நான் பின் தொடர்ந்தேன்.அதன்படி எனக்கு அவர் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார்.அவர் இல்லை என்றால் இந்தப் படத்தில் நான் இல்லை, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த மோகன் பாபு சார், விஷ்ணு மஞ்சு சார் இருவருக்கும் நன்றி. நான் இதுவரை 10 தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறேன், எனக்கும் தனியாக போஸ்டர் வெளியிட்டு என் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியது கண்ணப்பா படத்தில் தான் முதல் முறையாக நடந்திருக்கிறது. இதுவரை எந்தப் படத்திலும் எனக்கென்று தனி போஸ்டர் வெளியிட்டதில்லை. எனக்கு இதுவே மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இவ்வளவு வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த எனக்கு இது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது,நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசுகையில்….

மோகன் பாபு சார் மற்றும் விஷ்ணு மஞ்சுக்கு நன்றி. இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றி. சரத்குமார் சார் எனக்கு சிறந்த நண்பர். இந்தப் படத்தில் மூன்று டிராக்குகள் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய ஒருவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், காதல் கதை மற்றும் ஒரு கிராமத்தைக் கைப்பற்ற நடக்கும் யுத்தம், என்று மூன்று டிராக்குகள் இருப்பதால் சிலருக்குப் படம் நீளமாக இருப்பது போல் தோன்றும், ஆனால், அந்த உணர்வே உங்களுக்கு ஏற்படாத வகையில் படம் கிரிப்பாக இருக்கும். இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சரத் சார் நடித்திருக்கிறார். சூப்பராக நடித்திருக்கிறார், இன்னும் 25 வருடங்கள் அவர் நடிப்பார். ஒரு காட்சியில் இரண்டு பேரை அப்படியே தூக்குகிறார், ரியலாக எடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்த்ததும் சரத் சாருக்கு போன் போட்டு, சூப்பர் சார் என்று சொன்னேன்.
இந்தப் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது, கதையை மிகச் சிறப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கிறது. கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இறுதியில் நீங்கள் நிச்சயம் கண்கலங்குவீர்கள். எனவே இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்துப் படங்களிலும் பிளஸ் மற்றும் மைனஸ் இருக்கும், நீங்கள் பிளஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும், நன்றி என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்….

சரத்குமார் சார் ஒரு நாள் எனக்கு போன் போட்டு, கண்ணப்பா படத்தை தமிழ்நாடு ரிலீஸ் பண்றீங்களா? என்று கேட்டார். சார், இது எனக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு சார், என்று சொன்னேன். பிறகு கண்ணப்பா படத்தை தமிழ்நாட்டில் நல்லபடியாக ரிலீஸ் பண்ணிக் கொடுத்துடுங்க என்றார். பொதுவாக சினிமா வியாபாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடக்கும், எப்படி பண்ண போகிறோம் என்ற ரீதியில் சில ஆலோசனைகள் நடக்கும், என்று எதிர்பார்த்தேன். அப்போது அங்கிருந்து எனக்கு விஷ்ணு மஞ்சு சார் போன் போட்டார். அவ்வளவு பெரிய ஹீரோ, பான் இந்தியா பட ஹீரோ அவரே எனக்கு போன் போட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் இரண்டு விசயங்களை மட்டுமே சொன்னார், எங்க குழந்தையை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம், நல்லபடியாக ரிலீஸ் பண்ணுங்க, என்று சொன்னார். சினிமா மீது உள்ள காதல் தான் அவரை இப்படி சொல்ல வைத்தது என்று நினைக்கிறேன். பிறகு டிரைலர் பார்த்தேன், அதில் அவர் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடிப்பார், அந்தக் காட்சியைப் பார்க்கும் போது, அவர் பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தது. இந்தப் படத்தை அவர் எவ்வளவு காதலித்திருக்கிறார், என்பது அந்த சிவலிங்கத்தை அவர் கட்டிப்பிடிப்பதிலே தெரிந்தது. இங்கே இருப்பவர்கள் கண்ணப்பா கதையை சிறு வயதில் இருந்தே கேட்டிருப்போம். ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட நாம் காலகாலமாக கேட்டு வந்த கதைகளை நாம் திரையில் பார்க்கும் போது, அது அவர்களை தொடர்புபடுத்திக் கொள்ளும். இந்த கண்ணப்பா படத்தை பொறுத்தவரை சிவபக்தி மற்றும் கடவுள் பக்தி உடையவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். மிகப்பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்டமான காட்சி அமைப்பு என படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
இதில், சரத்குமார் சார் மிகச் சிறப்பான வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வேடம் என்ன என்பது டிரைலரில் தெரிகிறது. ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். அவர் தசரதன் படத்தில் கடவுள் பக்தி இல்லாதவராக நடித்திருப்பார், ஆனால் இதில் கடவுள் பக்தி உடையவராக நடித்திருக்கிறார். இந்தப் படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தை நிறைய உழைப்புகளோடும், கனவுகளோடும் உருவாக்கியிருக்கிறார்கள். ஆண்டனி சாரின் கத்திரி மட்டுமே பேசும், அவர் பேச மாட்டார். ஆனால், அவரே இங்கு அதிகம் பேசியிருக்கிறார் என்றால் இந்தப் படம் எப்படி வந்திருக்கும் என்று பாருங்கள். சம்பத் ராம் சார் இந்தப் படத்தின் சிறு சிறு அப்டேட்களை கூட சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டிருந்தார். மிகப்பெரிய உழைப்பைப் போட்டு பண்ணக்கூடிய படங்கள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இந்தப் படத்தையும் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்….

’கண்ணப்பா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் மிகப்பெரிய அளவில் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள், ஆனால் சில காரணங்களால் நடக்காமல் போய்விட்டது. சரி நான் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்தேன். இதை அறிந்த விஷ்ணு மஞ்சு, நம்பளே பண்ணலாம், நீங்களே படத்தின் சார்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிடுங்கள் என்றார். அதனால் தான் இந்த ஏற்பாடு.
கண்ணப்பா ஒருவரிக்கதை தான். 63 நாயனார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவபக்தர்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவர் என்பது நமக்குத் தெரியும். ஏற்கனவே ராஜ்குமார் சாரும், கிருஷ்ணா சாரும் கண்ணப்பா படத்தை பண்ணிவிட்டார்கள். இதை விஷ்ணுவின் கோணம் என்று தான் சொல்ல வேண்டும். நம்பிக்கையற்றவர், பிறகு நம்பிக்கையுள்ளவராக மாறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படி தீவிர சிவபக்தராக மாறுகிறார், அவருக்கான போராட்டம் என்பது தான் இந்தப்படத்தின் கரு. மோகன் பாபு சாருக்கும், விஷ்ணு மஞ்சுவுக்கும் நான் தொடர்ந்து வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கிறேன், இதற்குக் காரணம் படத்தின் லொக்கேஷன் தான். இயற்கையின் சொர்க்கம் என்றால் அது நியூசிலாந்து தான். அங்கு இருப்பது நிஜமான வண்ணம், டிஐ-யில் பண்ணாத ஒரிஜினல் வண்ணம் என்று தைரியமாக சொல்லலாம். அந்த இடத்தில் 10 நாட்கள் அல்லது 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தலாம், ஆனால் 120 நாட்கள் வெளிநாட்டில் படம் எடுப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அதற்கான உழைப்பு என்பது மிகப்பெரியது. அந்தக் காலத்தில் இந்த பூமி இப்படி தான் இருந்திருக்கும் என்று அந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும், பணியை சிறப்பாக முடித்தோம்.
இந்தப் போராட்டம், சிறு வயதில் சாமி சிலை மீது கல் வீசுவது, பராசக்தி படம் போல் வசனம் பேசும் காட்சிகளும் படத்தில் இருக்கிறது. அப்படி ஒரு மனப்போரட்டத்தில் இருக்கும் தின்னா எப்படி சிவபக்தராக மாறுகிறார் என்பது தான் கதை. நான் தின்னாவின் அப்பாவாக நடித்திருக்கிறேன். பல முறை மோகன் பாபு சாருடன் படம் பண்ணுவதாக இருந்து பண்ண முடியாமல் போனது, ஆனால் இந்தப் படத்தில் அது நடந்திருப்பது மகிழ்ச்சி. முகேஷ் குமார் சிங் மகாபாரதத்தைச் சிறப்பாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார், அவர் 3 ஆயிரம் கோடியில் மகாபாரதத்தை பிரமாண்டமாக எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார், அப்படிப்பட்டவரை அழைத்து கண்ணப்பா நாயனாரின் கதையை எடுக்கச் சொன்னது வியப்பாக இருந்தாலும், அவர் சிறப்பாக எடுத்திருக்கிறார். எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம், எனக்கும் தின்னாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரியது. அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடைசி ஒரு மணி நேரம் சிறப்பாக இருக்கும் என்று ஆண்டனி சொன்னார், அவர் படத்தை முதலில் பார்த்தவர் என்பதால் அதைச் சொல்லியிருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து ஒளிப்பதிவாளர், ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் என்று மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இது மக்கள் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமாக இருக்கும். தற்போதைய தலைமுறைகளுக்கு நாம் பல கதைகளைச் சொல்ல மறந்துவிடுகிறோம். பொன்னியின் செல்வன் கதை மூத்தவர்களுக்குத் தெரியும், ஆனால் இளைய தலைமுறைகளுக்கும் தெரிய வேண்டும், என்று தான் மணி சார் அதைப் படமாக எடுத்திருக்கிறார். அதேபோல் தான், கண்ணப்பா கதையும் இளைய தலைமுறையினருக்குத் தெரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை விஷ்ணு தனது கோணத்தில், சிவபக்தரான கண்ணப்பா அதற்கு முன் எப்படி இருந்தார், அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சொல்லியிருக்கிறார். அது சிறிய கதையாக இருந்தாலும் கூட, விஷ்ணு கோணத்தில் அது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது, அதை அவர் சாதாரணமாகவும் சொல்லவில்லை, பல ஆராய்ச்சிகள் செய்து, கடினமான உழைப்பை செலுத்தி எடுத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும், என்று நினைக்கிறேன்.
கண்ணப்பாவின் கதை இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்றால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இரண்டாவது பக்தி, இன்று எவ்வளவு பேருக்கு பக்தி இருக்கிறது என்று தெரியவில்லை. தினமும் கோவிலுக்குப் போகாமல் இருக்கலாம், ஆனால் பிரச்சனை வந்தால் நிச்சயம் கோவிலுக்குச் செல்வோம். இறைவன் இருக்கிறார் என்பதை மேலும் மேலும் சொல்லி, அதிலும் சிவபக்தியைப் பற்றிச் சொல்லி, பக்தி எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை, அது ஏசுவாக இருக்கலாம், அல்லாவாக இருக்கலாம், கடவுள் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும் பக்தியையும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றிச் சொல்லவேண்டியது அவசியம். அந்த வகையில், கண்ணப்பா படத்தைப் பார்க்கும் போது இப்படி ஒரு சிவபக்தர் இருந்தார், என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். பக்தி என்பது அவரவர் மனதில் தோன்றுவது தான், அந்த பக்தி பரவசத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய படம் தான் கண்ணப்பா. உங்களுடைய ஆதரவோடும், மக்களின் ஆதரவோடும் இந்தப்படம் வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அதேபோல் இரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் பார்வையில் இந்தப் படம் எப்படி இருக்கிறது, என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு, “மச்சா உள்ளே வந்துடாதே..” என்றெல்லாம் சொல்லாதீங்க. உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம், உங்கள் நண்பர்களுக்கு வேறு ஒரு பார்வை இருக்கலாம், சிலர் பிரபாஸுக்காக படம் பார்க்க வரலாம், எனவே அவரவர் பார்வையில் படத்தைப் பாருங்கள் அதை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள் என்று சொல்லிக் கொள்கிறேன், நன்றி

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.