ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

ஹாட்ஸ்டார் பிரதீப், “படம் எடுப்பதை விட மக்களிடம் படத்தைக் கொண்டு போய் சேர்ப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கிறது. ராம் எனது சிறந்த நண்பர். அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியான படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் சிவா சேர்ந்தது எதிர்பாராத விஷயம். அதுவே பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி அருமையான இசை கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கும் பையனுக்குமான அழகான கதையை மக்கள் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி”.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “படத்தில் வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஆதரவு கொடுத்து வெற்றி படமாக்கிய படக்குழுவினருக்கு நன்றி”.

எடிட்டர் மதி, “என்னுடைய முதல் படம் இது. முதல் படமே வெற்றி பெற்றிருக்கிறது. நான் சந்தோஷமாக இருந்தது மட்டுமல்லாது திரையரங்கில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம் சாருக்கு நன்றி”.

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்த வெற்றிப் படைப்பில் பங்கெடுத்து கொண்டது மகிழ்ச்சி. யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றியாக இது அமைந்திருக்கிறது. காலங்காலமாக இருந்த வழக்கங்களை ராம் சார் உடைத்திருக்கிறார். முத்துக்குமார் சாரையும் இந்தத் தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன். இவ்வளவு சிரித்து படம் பார்க்கும்போது ஏன் எல்லாரையும் அழ வைக்கும்படியாகவே சமீபகாலங்களில் அதிக படங்கள் வருகிறது என என் மகன் கேட்டார். ஓடிடியில் மட்டுமே இந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், பிறகு தியேட்டரில் படம் ரிலீஸ் என்று முடிவெடுத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் மிதுல், “திரையரங்குகளில் எல்லோரும் படத்தை சிரித்து பார்த்தார்கள். வாய்ப்பு கொடுத்த ராம் சாருக்கு நன்றி. ஸ்விமிங், வேவ் போர்டு என பல விஷயங்கள் இந்தப் படம் மூலமாகதான் கற்றுக் கொண்டேன். நன்றி”.

நடிகை கிரேஸ் ஆண்டனி, “படிப்பை விடவே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. அன்பு வயதிலேயே நடிக்கும் முடிவு எடுத்து விட்டேன். என்னுடைய முதல் தமிழ் படம் வெற்றி பெற்றிருப்பது எமோஷனலாக உள்ளது. ராம் சார், சிவா சார், அன்பு மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”.

நடிகர், விமர்சகர் கேபிள் சங்கர், “சிவா பண்ணக்கூடிய பல விஷயங்கள் இந்தப் படத்தில் நன்றாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. பல விஷயங்கள் எல்லை மீறாமல் நாம் ரசித்ததற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ராம். சந்தோஷ் தயாநிதி இசை படத்திற்கு பெரிய பலம். குட்டிபையன் மிதுலின் நடிப்பும் அருமை. படத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்”.

கமலா சினிமாஸ், விஷ்ணு, “’பறந்து போ’ படத்தின் டைட்டில் போலவே டிக்கெட்ஸூம் பறந்து கொண்டிருக்கிறது. ஷோ ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தப் படம் பார்த்து ஆடியன்ஸ் சிரித்து கொண்டாடி வருகிறார்கள். சிவாவும் படத்தில் சூப்பராக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள்”.

நடிகர் சிவா, “மனதார அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலி, மதுரை, சேலம் எனப் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போய்க் கொண்டிருக்கிறோம். கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அருமையான இசை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவன் இசை படத்திற்கு இல்லையே என்ற குறை எங்கேயும் தெரியாமல் வைத்திருந்தார் சந்தோஷ். ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார். ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ராம், “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள். சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் பிரதீப் சார் இந்தப் படத்திற்கு பெரிய பலம். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சார் படம் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டதற்கு நன்றி. சுரேஷ் சந்திரா சார் மற்றும் டீமுக்கு நன்றி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகனுக்கும் என் மனைவி, மகளுக்கும் நன்றி”.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.