BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  
அண்ணன் கே. ராஜன் இங்கு வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன்.

இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன்.

இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். ‘பெரிய மருது ‘, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன்.

YouTube player

1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.  89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசுகையில், ”என்னை நம்பி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.‌ இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. எல்லா பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இப்படத்தின் பின்னணி இசையை ஹரி அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜூலை 25 வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

பின்னணி இசையமைப்பாளர் ஹரி பேசுகையில், ”இப்படத்தின் கதை சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளியான பிறகு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.  அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”இந்தப் பட முன்னோட்டத்தின் இறுதியில், ‘போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்’ என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனை தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும் . அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.

நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது.  பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையை போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் ‘கன்டென்ட் வின்ஸ்’ என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான ‘டி என் ஏ’, ‘மார்கன்’ ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.  

இன்றைய தேதியில் இயக்குநர்களை விட பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களை சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது திரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த திரில்லர் அர்த்தமுள்ள திரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில்  ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான ‘ஜீரோ’ படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.  அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.  கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை  எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து ‘சிகரம் தொடு’ எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.

ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த’ கயிலன்’ திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், ” இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,” என்றார்.

பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ”இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார்  நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள்.

நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன்.

தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.

இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,” என்றார்.

நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”’கயிலன்’ என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து ‘புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன்.

தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என  அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.

அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.

2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, ‘என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்’ என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌  

அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்.

25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார்.

தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் ‘கயிலன்’ என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.

இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.  

தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.

300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்,” என்றார்.

இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ”உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார்.  எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.

‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.

என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.

நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.

இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.

மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.  

இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கே ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.

நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.  இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.  

இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளை சொன்னார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே ‘படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.  

இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.