அறிவியல் வளர்ச்சியால் உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது என்கிறார்கள்.ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படும் கிராமங்களும் இங்கு நிறைய இருக்கின்றன என்பதை ஆணி அறைந்தாற்போல் சொல்லியிருக்கும் படம் கெவி.

மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் நாயகன் ஆதவன்.அந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது.இதுதொடர்பாக ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை.இதனால், தேர்தல் நேரத்தில் சந்திக்க வரும் ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கிறார்.அதனால், அவர்களுடன் வந்த வனத்துறை காவலர்களுடன் மோதல் இதனால்,ஆதவன் மீது கோபமடையும் வனத்துறை அதிகாரி அவரைப் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி மனைவியைத் தனியாக விட்டு விட்டு, மலையை விட்டுக் கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் சேர்ந்து ஆதவனை கொலை செய்ய முயல்கிறார்கள். மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவவலி. போக்குவரத்து வசதியில்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் நிலை.

ஒரேநேரத்தில் கணவன் மனைவி ஆகியோருக்கு உயிர் போகும் ஆபத்து.அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறது படம்.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவன், அந்த வேடத்துக்குப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்.அவருடைய நடிப்பும் துடிப்பும் அம்மக்களின் துயர்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

நாயகி ஷீலாவுக்கு இந்தப்படத்தில் அமைந்திருக்கும் கதாபாத்திரமும் அதில் அவருடைய சிறப்பான நடிப்பும் நெஞ்சை நடுங்கச் செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது.

வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்,முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, பயிற்சி மருத்துவராக வரும் ஜாக்குலின், கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன்,அஞ்சல்காரராக நடித்திருக்கும் உமர் ஃபரூக் மற்றும் தர்மதுரை ஜீவா ஆகியோரும் அளவாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.

மலைகிராம அழகையும் அந்த மக்கள் படும்பாடுகளையும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.

பாலசுப்ரமணியன்.ஜி இசையில்,பாடல்கள் திரைக்கதையின் அங்கமாகவே அமைந்திருக்கின்றன.பின்னணி இசையை வலி ஏற்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் ஹரி குமரன்,கதைக்களத்தை முழுமையாக உள்வாங்கி அதை மக்களிடம் முழுமையாகக் கொண்டெ சேர்க்கும் வண்ணம் செயல்பட்டிருக்கிறார்.

இயக்குநர் தமிழ் தயாளன், எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களமும் அதை வெளிப்படுத்திய விதமும் அதற்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்தியதும் வரவேற்புக்குரியன.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.