ஒரு கொலை அல்லது பல கொலைகள் அல்லது யாராவது ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போவது ஆகிய நிகழ்வுகளில் காவல்துறை விசாரணை அடிப்படையிலான திரைக்கதைகள் விறுவிறுப்பாகச் செல்லக்கூடியவை.அந்த வரிசையில் வந்திருக்கும் இணையத் தொடர் சட்டமும் நீதியும்.
ஏழு பகுதிகளாக வெளியாகியிருக்கும் இந்தத் தொடரில் காவல்துறைக்குப் பதிலாக ஒரு வழக்குரைஞர் விசாரணையில் ஈடுபடுகிறார்.
நீதிமன்றத்திர்கு வெளியே புகார்களை எழுதிக் கொடுக்கும் வழக்குரைஞராக பலராலும் மதிக்கப்படாதவராக இருக்கும் சரவணன், ஒரு பெண் காணாமல் போன வழக்கைக் கையிலெடுக்கிறார்.அதில் பல்வேறு மர்ம முடிச்சுகள்.அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொண்டார்.கடைசியில் என்னவானது? என்பதைச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.
பலரால் எள்ளி நகையாடப்படும் வழக்குரைஞராக நடித்திருக்கும் சரவணன், பாட்ஷா படத்தின் மாணிக்கம் போல் அறிமுகம் ஆகி பின்பு பாட்ஷாவாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.அந்த வழக்கைக் கையிலெடுத்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துச் செல்வதும் அப்போது நடக்கும் நிகழ்வுகளும் சரவணனின் அனுபவ நடிப்பால் மேலும் மெருகேறுகிறது.
சரவணனிடம் உதவியாளராகச் சேர வரும் பாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார்.அவருடைய இருப்பும் அதில் அவர் நடிப்பும் திரைக்கதையை சுவாரசியமாக்க உதவியிருக்கிறது.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோரும் தொடரில் நடித்திருக்கிறார்கள்.அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேடங்களுக்குப் பொருத்தமாக நடித்து தொடருக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்துக்குள் பெரும்பகுதி திரைக்கதை நகர்வதால் ஒளிப்பதிவாளருக்குப் பெரிய வேலை இருக்காது என்று நினைத்தால் அதிலும் பல்வேறு கோணங்களை வைத்து தன் இருப்பைப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.
விபின்பாஸ்கர் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையால் சரவணன் கதாபாத்திரத்தைப் பன்மடங்கு பெரிதாக்குகிறார்.
தொடர் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கும் படத் தொகுப்பாளர் இராவணனின் எண்ணம் ஈடேறியிருக்கிறது.
தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ்,சரவணனின் பாத்திரப் படைப்பில் சுவாரசியம் கூட்டியிருக்கிறார்.சரவணன் மட்டுமே இருந்தால் போதாதென்று நம்ரிதாவை அழகாகக் கோர்த்துவிட்டிருக்கிறார்.பழகிய கதைக்களம் தானே என்று யாரும் சோர்ந்து உட்கார்ந்துவிடாதபடி காட்சிகளை அமைத்து உற்சாகமாகப் பார்க்க வைத்திருக்கிறார்.
– இளையவன்
பின்குறிப்பு – இத்தொடர் ஜீ 5 இணையத் தளத்தில் காணக்கிடைக்கிறது.