ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவைப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர் படக்குழுவினர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான், ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ், “பொதுவாகத் தமிழ்த்திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘டிராகன்’. இந்த ஆண்டு தமிழகத் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை டிராகன் பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு, ”குழுவாக இணைந்து இந்தப் படத்தை வழங்கி வெற்றி பெறச் செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் ‘இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்’ என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ‘கோட் (GOAT)’ திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் ‘டிராகன்’ திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் ‘DUDE’ படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ், அஸ்வத், பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாகப் போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன், ”இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ எனக் கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.

அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்குத் திரையிட்டுக் காண்பித்தேன். அப்போது அவரிடம், ‘என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா?’ எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான். ‘டிராகன்’ படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. லவ் டுடே படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் ‘டிராகன்’ அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.

‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் ‘டிராகன்’ படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் ‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக ‘டிராகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. என்னுடைய வெற்றிக்குப் பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘டிராகன்’ படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்றார்.

நூறாவது நாள் வெற்றி விழாவில் ‘டிராகன்’ பட உருவாக்கத்திற்காகப் படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்தியேக அசைவொளி திரையிடப்பட்டது.

YouTube player

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.