தமிழ்த் திரையுலகில் சண்டைப்பயிற்சி இயக்குநராகப் புகபெற்றிருக்கும் அனலரசு இயக்கியிருக்கும் படம். பதினெட்டு வயது நிரம்பாத ஒரு பதின்பருவத்தினனை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஓர் அதிரடியான சண்டைப்படம் கொடுத்திருக்கிறார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரை பட்டப்பகலில் படுகொலை செய்கிறார் நாயகன் சூர்யாசேதுபதி.சாதாரண ஆட்களைக் கொலை செய்தாலே பழிவாங்கப் புறப்படுவார்கள். சட்டமன்ற உறுப்பினர் என்றால் கேட்கவேண்டுமா? நாயகனைக் கொலை செய்ய பல்வேறு ஆட்கள், பல்வேறு திட்டங்கள், பல்வேறு முயற்சிகள்.அவற்றிலிருந்து எப்படி அவர் தப்புகிறார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறது படம்.
முதல்படத்தில் யாரும் ஏற்கத்துணியாத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சூர்யாசேதுபதி.மென்மையான படங்களில் தொடங்கி ஆக்ஷன் நோக்கிப் பயணிக்கும் கதாநாயகர்கள் மத்தியில் கடும் ஆக்ஷனில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா சேதுபதி.அதற்குத் தக்க தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார்.அனுபவம் வாய்ந்த நடிகர்களே தடுமாறும் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் அனாயசமாக நடித்திருப்பது, அவர் இதற்காக எவ்வளவு பயிற்சி எடுத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்டமன்ற உறுப்பினராக நடித்து கொலை செய்யப்படும் வேடத்தில் சம்பத்ராஜ் நடித்திருக்கிறார்.அவரைவிட அவர் மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு அதிக வாய்ப்பு.ஏற்கெனவே எதிர்மறைக் கதாபாத்திரங்களில் அவரைப் பார்த்திருந்தாலும் அவற்றிலிருந்து வேறுபட்டுத் தெரிகிறார்.
நாயகனின் அம்மாவாக தேவதர்ஷினி, நாயகனின் அண்ணனாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இவர்களுடைய வேடப்பொருத்தம் இவர்களுக்கு மட்டுமின்றி நாயகனுக்கும் பலம் சேர்த்திருக்கிறது.
அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். எல்லோருமே தேவைக்காக இருக்கிறார்கள்.அதன்படி நடித்திருக்கிறார்கள் என்பது நலம்.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய அனுபவ உழைப்பினால் இந்தப்படத்தின் காட்சியமைப்புகள் நேர்த்தியாக அமைந்திருப்பதோடு கதாநாயகனுக்குப் பலமாகவும் அமைந்திருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் நன்று.ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு பின்னணி இசையில் தரப்படும் பில்டப் ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.
படம் வேகமாக ஓடிமுடியவேண்டும் என்பதை சிரமேற்கொண்டு செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல்.
எழுதி இயக்கியிருக்கும் அனலரசு, தன் பெயரைப் போலவே படத்திலும் அனல் பறக்க வேண்டும் என்று நினைத்து உழைத்திருக்கிறார்.அதனால் படத்தில் அளவுக்கதிகமான வன்முறைக் காட்சிகள்.அத்தனை வேகத்துக்கும் அடிநாதம்,எளிய மனிதர்களின் வலி மிகுந்த போராட்டத்தின் வெளிப்பாடு என்று வைத்திருப்பது பெரும்பலம்.
– இளையவன்